பட மூலாதாரம், Getty Images
தமிழ்நாட்டில் கன்னியாகுமரி மற்றும் சென்னையில் நான்கு கடல்சார் தொகுதிகளில் எண்ணெய் மற்றும் எரிவாயு எடுப்பதற்கான ஒப்பந்தத்தை ஓஎன்ஜிசி நிறுவனத்துக்கு மத்திய அரசு வழங்கியுள்ளது
திறந்தவெளி பரப்புரிமை கொள்கை (Open Acreage Licensing Policy) அடிப்படையில் இந்த உரிமத்தை ஓஎன்ஜிசிக்கு ஹைட்ரா கார்பன் இயக்குநரகம் (DGH) வழங்கியுள்ளது.
இத்திட்டத்தால் கடல் வளமும் மீனவர்களின் வாழ்வாதாரமும் பாதிக்கப்படும் எனக் கூறி தமிழ்நாடு அரசும் மீனவ அமைப்புகளும் எதிர்க்கத் தொடங்கியுள்ளன.
இந்தியாவில் 28 இடங்களில் எண்ணெய் மற்றும் எரிவாயு எடுப்பதற்கான சர்வதேச ஏலத்தை இந்திய பெட்ரோலியம் மற்றும் இயற்கை எரிவாயு அமைச்சகம், கடந்த 2024-ஆம் ஆண்டு ஜனவரி மாதம் அறிவித்தது.
இந்த அமைச்சகத்தின் கீழ் இயங்கும் ஹைட்ரோ கார்பன் இயக்குநரகம் இந்த ஏலத்தை நடத்தியது.
ஏலத்தின் ஒன்பதாவது சுற்றில் ONGC நிறுவனத்துக்கும், வேதாந்தா நிறுவனத்துக்கும் இடையே போட்டி இருந்ததாக அமைச்சகம் தெரிவித்துள்ளது.
கன்னியாகுமரியில் 3, சென்னையில் 1
பட மூலாதாரம், Getty Images
முடிவில், கன்னியாகுமரியில் மூன்று கடல்சார் தொகுதிகளையும் (Block) சென்னையில் ஒரு கடல்சார் தொகுதியையும் ஓஎன்ஜிசி நிறுவனம் ஏலம் எடுத்துள்ளது.
கன்னியாகுமரி அருகே தெற்கு கடல் பகுதியின் முதல் தொகுதியில் 9515 ச.கி.மீ, இரண்டாவது தொகுதியில் 9845 ச.கி.மீ மற்றும் மூன்றாவது தொகுதியில் 7795 ச.கி.மீ பரப்பளவில் ஆழ்கடலில் எண்ணெய் மற்றும் எரிவாயு எடுப்பதற்கு அனுமதி வழங்கப்பட்டுள்ளது.
அதேபோல், சென்னைக்கு அருகில் ஆழ்கடலில் 5330 ச.கி.மீ பரப்பளவில் எண்ணெய் மற்றும் எரிவாயு எடுக்கப்பட உள்ளது. அந்த வகையில், தமிழ்நாட்டில் 32,485 ச.கி.மீ கடற்கரைப் பகுதிகளில் எண்ணெய் மற்றும் எரிவாயு எடுக்கப்பட உள்ளதாக ஹைட்ரோ கார்பன் இயக்குநகரம் தெரிவித்துள்ளது.
‘இறக்குமதி குறையும்’ -அமைச்சர் ஸ்ரீஹர்தீப் சிங் பூரி
பட மூலாதாரம், @PetroleumMin/X
ஒப்பந்தம் கையெழுத்தான நிகழ்வில் பேசிய பெட்ரோலியம் மற்றும் இயற்கை எரிவாயு துறை அமைச்சர் ஹர்தீப் சிங் பூரி, உலகில் அதிகரித்து வரும் எரிசக்தி தேவைக்கான வளர்ச்சியில் 25 சதவீதத்தை இந்தியா வழங்க உள்ளதாக தெரிவித்தார்.
தற்போது கச்சா எண்ணெய் தேவையில் 88 சதவீதமும் இயற்கை எரிவாயு தேவையில் 50 சதவீதத்தையும் இறக்குமதி சார்ந்தே நம்பியிருப்பதால், உள்நாட்டு ஆய்வு மற்றும் உற்பத்திக்கான தேவை இதுவரை இல்லாத அளவு அதிகரித்துள்ளதாக இந்திய தகவல் பணியகத்தின் செய்திக் குறிப்பு கூறுகிறது.
இந்தக் கட்டுரையில் X வழங்கிய தகவல்கள் இடம் பெற்றுள்ளன. குக்கி மற்றும் பிற தொழில்நுட்பங்கள் பயன்படுத்தப்படக்கூடும் என்பதால் எந்த ஒரு பதிவேற்றத்துக்கும் முன்னதாக உங்கள் அனுமதியைக் கோருகிறோம். அதை ஏற்றுக்கொள்வதற்கு முன்பாக, நீங்கள் X குக்கி கொள்கை மற்றும் தனியுரிமைக் கொள்கையை அறிந்துகொள்ள விரும்பலாம். இந்த தகவலைப் படிக்க, `ஏற்றுக்கொண்டு தொடரவும்’ என்பதைத் தேர்வு செய்யவும்.
எச்சரிக்கை: வெளியார் தளங்களில் உள்ள பதிவுகளுக்கு பிபிசி பொறுப்பேற்காது
X பதிவின் முடிவு
இந்தியாவின் இறக்குமதி சார்பு நிலையைக் குறைக்கவும் எரிசக்தியின் எதிர்காலத்தைப் பாதுகாப்பதற்கு இந்த ஒப்பந்தங்கள் சான்றாக உள்ளதாகவும் அமைச்சர் ஹர்தீப் சிங் பூரி குறிப்பிட்டார்.
அதேநேரம், இந்திய எரிசக்தி துறையின் ஏல அறிவிப்புக்கு தமிழ்நாட்டில் பல்வேறு தரப்பினரிடம் இருந்து எதிர்ப்பு கிளம்பியுள்ளது.
பிரதமருக்கு முதலமைச்சர் ஸ்டாலின் கடிதம்
பட மூலாதாரம், Getty Images
“தமிழ்நாட்டில் 32,485 ச.கி.மீ பரப்பளவில் எண்ணெய் மற்றும் எரிவாயு எடுப்பதன் மூலம் சுற்றுச்சூழலுக்கு சரிசெய்ய முடியாத அளவுக்கு பாதிப்பை ஏற்படுத்தும்” எனக் கூறியுள்ளார் பாட்டாளி மக்கள் கட்சியின் நிறுவனர் ராமதாஸ்.
ஆழ்கடலில் ஹைட்ரோ கார்பன் திட்டத்தைச் செயல்படுத்தினால் மீன்வளம் பாதிக்கப்படும் என மீனவர் அமைப்புகள் தொடர்ந்து வலியுறுத்தி வரும் நிலையில், எரிவாயு திட்டங்களுக்கு அனுமதி வழங்குவது நியாயமல்ல என்றும் அறிக்கையின் மூலம் அவர் தெரிவித்துள்ளார்.
இது தொடர்பாக, கடந்த மார்ச் 3-ஆம் தேதியன்று பிரதமர் நரேந்திர மோதிக்கு முதலமைச்சர் ஸ்டாலின் கடிதம் ஒன்றை எழுதியிருந்தார்.
மன்னார் வளைகுடா கடல் பகுதியில் மத்திய அரசு மேற்கொண்டுள்ள கடல்சார் ஆழ்துளை எரிவாயு கிணறுகள் அமைக்கும் நடவடிக்கை குறித்து தனது கவலையை தெரிவித்துக் கொள்வதாக அந்தக் கடிதத்தில் கூறியுள்ளார்.
தொடர்ந்து அந்தக் கடிதத்தில், மன்னார் வளைகுடா பகுதியை கடந்த 1989 ஆம் ஆண்டு உயிர்க்கோள காப்பகமாக மத்திய அரசு அறிவித்துள்ளது. பவளப் பாறைகள், கடல் புல் படுகைகள், சதுப்பு நிலங்கள், கழிமுகங்கள், சேற்றுப் படுகைகள், தீவுகள், காடுகள் என பல்வேறு சுற்றுச்சூழல் அமைப்புகளை உள்ளடக்கிய வளமான பல்லுயிர்ப் பெருக்கத்தைக் கொண்டுள்ளதாக முதலமைச்சர் ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.
மன்னார் வளைகுடா உயிர்க்கோள காப்பகம், ராமநாதபுரம் மற்றும் தூத்துக்குடி மாவட்ட கடற்கரைகளில் இருந்து 560 சதுர கி.மீ பரப்பளவில் 21 தீவுகள் மற்றும் பவளப் பாறைகளின் சங்கிலியைக் கொண்டுள்ளதாகவும் கடிதத்தில் ஸ்டாலின் கூறியுள்ளார்.
‘தமிழ்நாடு அரசிடம் கேட்கவில்லை’ – ஸ்டாலின்
பட மூலாதாரம், Facebook
கடந்த 2021 செப்டம்பரில் பாக் விரிகுடாவில் அரிதான கடற்பசு இனத்தைப் பாதுகாக்கும் வகையில் இந்தியாவின் முதல் கடற்பசு பாதுகாப்பகத்தை தமிழ்நாடு அரசு அறிவித்துள்ளதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.
அந்தவகையில், எண்ணெய் மற்றும் இயற்கை எரிவாயு ஆகியவற்றுக்காக ஆழ்துளை கிணறுகள் அமைப்பது கடல்வாழ் உயிரினங்களுக்கு சேதத்தை ஏற்படுத்துவதோடு கடலின் ஒட்டுமொத்த வளத்தையும் சீர்குலைக்கக் கூடும் எனவும் ஸ்டாலின் குறிப்பிட்டுள்ளார்.
இது கடலோர சமூகங்கள் மத்தியில் அச்சத்தை உருவாக்கியுள்ளதாகவும் பிரதமருக்கு எழுதியுள்ள கடிதத்தில் அவர் தெரிவித்துள்ளார்.
“ஏல அறிவிப்புக்கு தமிழ்நாடு அரசிடம் கருத்து எதையும் கேட்கவில்லை” எனக் கூறியுள்ள முதலமைச்சர் ஸ்டாலின், “உரிய ஆலோசனை கேட்கப்பட்டிருந்தால் அனைத்துப் பிரச்னைகள் குறித்தும் தமிழ்நாடு அரசின் சார்பில் விரிவாக கூறப்பட்டிருக்கும்” எனக் குறிப்பிட்டுள்ளார்.
எனவே, ஏல முடிவினை மறுபரிசீலனை செய்யுமாறும் ஆழ்துளை கிணறுகள் அமைப்பதற்காக அறிவிக்கப்பட்ட அனைத்துப் பல்லுயிர் நிறைந்த பகுதிகளையும் திறந்தவெளி பரப்புரிமைக் கொள்கையில் (OALP) இருந்து நீக்குமாறும் பிரதமர் மோதியை அவர் கேட்டுக் கொண்டுள்ளார்.
மீனவ அமைப்புகள் கூறுவது என்ன?
“கன்னியாகுமரி கடலில் சில பகுதிகளில் மீன்களின் இனப்பெருக்கம் அதிகமாக உள்ளது. இங்கு எண்ணெய் மற்றும் எரிவாயு எடுப்பதற்காக ஆழ்துளை கிணறு தோண்டினால் மீன் வளம் பாதிப்படையும்” எனக் கூறுகிறார் தேசிய பாரம்பரிய மீனவர் கூட்டமைப்பின் தலைவர் சே.நல்லதம்பி.
கடல்சார்ந்த மாவட்டங்களில் சுமார் 20 சதவீதத்துக்கும் மேற்பட்ட மக்களுக்கு வேலை வாய்ப்பைக் கொடுக்கக் கூடிய தொழிலாக மீன்பிடி உள்ளதாக பிபிசி தமிழிடம் கூறிய சே.நல்லதம்பி, “இதுபோன்ற திட்டங்களால் மீனவர்களின் பொருளாதாரம் கடுமையாக பாதிப்படையும்,” என்கிறார்.
ஏலத்தில் ஒதுக்கப்பட்ட கடல்சார் தொகுதிகள், மன்னார் வளைகுடாவின் மிக முக்கியமான பகுதிகளாக உள்ளதால், மாநில அரசின் அனுமதி இல்லாமல் இத்திட்டத்தை செயல்படுத்துவதற்கான வாய்ப்புகள் இல்லை எனவும் அவர் குறிப்பிட்டார்.
கடல்வாழ் உயிரினங்களுக்கு பாதிப்பு ஏற்படுமா?
பட மூலாதாரம், Getty Images
“கடலுக்கு அடியில் ஹைட்ரோ கார்பன் உள்ள இடங்களை அதிக சக்தியுள்ள சோனார்களை (Sonar – Sound Navigation and Ranging) பயன்படுத்தி ஆராய்ச்சி மேற்கொள்வது வழக்கம். இது பல்வேறு பாதிப்புகளை ஏற்படுத்தும்,” எனக் கூறுகிறார், கடல் உயிரியலாளர் நவீன்.
பிபிசி தமிழிடம் பேசிய அவர், “சுறா, கடல் பசு (Dugong), டால்பின் போன்றவை ஒலியை எழுப்பி பயணிக்கக் கூடியவை. கடலுக்கு அடியில் எண்ணெய், எரிவாயு போன்றவற்றை எடுப்பதற்கு ஒலி எழுப்பும் சோனாரை பயன்படுத்தும்போது அது பல கி.மீ தூரம் பயணிக்கும். இது பாலூட்டி இனங்களை பாதிக்கும்” என்கிறார்.
“கடலுக்கு அடியில் வாயு அதிகம் உள்ள பகுதிகளைக் கண்டறிந்து துளையிட்டு எடுப்பார்கள். இதுதொடர்பாக அறிவியல்பூர்வ ஆய்வுகளை நடத்தி முடித்திருக்கவே வாய்ப்புகள் அதிகம்” எனவும் அவர் குறிப்பிட்டார்.
மகாராஷ்டிரா, குஜராத் ஆகிய மாநிலங்களில் ஓஎன்ஜிசியின் அலகுகள் செயல்படுவதாகக் கூறிய நவீன், “இதுவரை எந்த பாதிப்பும் இல்லாமல் திட்டங்களை ஓஎன்ஜிசி செயல்படுத்தி வந்துள்ளது,” என்கிறார்.
“கன்னியாகுமரி, சென்னை ஆகிய மாவட்டங்களில் எண்ணெய் மற்றும் எரிவாயு எடுப்பதற்கு என்ன மாதிரியான சிக்கல்களைக் கண்டறிந்துள்ளனர் என்பதை சுற்றுச்சூழல் தாக்க மதிப்பீட்டு (EIA) அறிக்கை வெளிவரும்போது தெரியவரும்,” எனவும் நவீன் குறிப்பிட்டார்.
மீனவர்கள் மற்றும் சூழல் ஆர்வலர்களின் அச்சம் தொடர்பாக, தமிழ்நாடு நிதி மற்றும் காலநிலை மாற்றத் துறை அமைச்சர் தங்கம் தென்னரசுவிடம் பிபிசி தமிழ் பேசியது.
“தமிழ் நாட்டு மக்களின் நலன்களுக்கு எதிரான எந்த ஒரு திட்டத்தையும் தமிழ்நாடு அரசு அனுமதிக்காது” என்று அவர் பதில் அளித்தார்.
ஓஎன்ஜிசி சொல்வது என்ன?
ஓஎன்ஜிசி நிறுவனத்தின் மக்கள் தொடர்பு அலுவலர் மிருத்யுஞ்செய் பாண்டேவிடம் பிபிசி தமிழ் பேசியது. இதுதொடர்பாக சென்னை பிரிவின் மனிதவள மேம்பாட்டுத்துறையின் பொது மேலாளர் மோகன்ராஜிடம் பேசுமாறு அவர் தெரிவித்தார்.
மோகன்ராஜிடம் பிபிசி தமிழ் பேசியது. ” ஓஎன்ஜிசியின் தொழில்நுட்பத் துறையினர் இதுகுறித்து விரைவில் ஊடகங்களுக்கு விளக்கம் அளிப்பார்கள்,” என்று பதில் அளித்தார்.
– இது பிபிசிக்காக கலெக்டிவ் நியூஸ்ரூம் வெளியீடு