• Wed. Oct 30th, 2024

24×7 Live News

Apdin News

சென்னை, காமராஜர் துறைமுகங்களின் பணியாளர்கள் பங்கேற்ற ஒற்றுமை தின ஓட்டம் | Unity Day Run with participation of ports employees

Byadmin

Oct 30, 2024


சென்னை: இந்தியாவின் இரும்பு மனிதர் என அழைக்கப்படும் சர்தார் வல்லபாய் பட்டேலின் பிறந்த நாளான அக்.31-ம் தேதியை மத்திய அரசு தேசிய ஒற்றுமை தினமாகக் கொண்டாடி வருகிறது. இதன்படி, சென்னை மற்றும் காமராஜர் துறைமுகங்கள் சார்பில், தேசிய ஒற்றுமை தினம் நேற்று கொண்டாடப்பட்டது.

இதை முன்னிட்டு, ஒற்றுமைக்கான உறுதிமொழி ஏற்கப்பட்டது. பின்னர், ஒற்றுமை ஓட்டம் நடைபெற்றது. பிரபல டேபிள் டென்னிஸ் விளையாட்டு வீரர் சரத் கமல் சிறப்பு விருந்தினராகப் பங்கேற்று, ஒற்றுமை ஓட்டத்தை கொடியசைத்துத் தொடங்கி வைத்தார். பின்னர், அவர் பேசும்போது, “விளையாட்டு எவ்வாறு மக்களிடையே ஒற்றுமையை வளர்க்கிறது என்பதை எடுத்துரைத்தார். மேலும், இந்த ஓட்டத்தில் பங்கேற்பவர்கள் தங்களுடைய தினசரி வாழ்வில் ஒற்றுமை உணர்வை வளர்த்துக் கொள்ள வேண்டும்” என்றார்.

சென்னை மற்றும் காமராஜர் துறைமுகங்களின் தலைவர் சுனில் பாலிவால் விழாவில் பங்கேற்று பேசும்போது, “நாட்டின் வளர்ச்சிக்கு ஒற்றுமையும், ஒருமைப்பாடும் மிகவும் முக்கியம் வாய்ந்தவை. எனவே, அவற்றில் கவனம் செலுத்த வேண்டும். வேற்றுமையில் ஒற்றுமை என்பதுதான் நமது நாட்டின் வலிமை. எனவே, அதைக் கொண்டாட வேண்டும்” என்றார்.

இந்நிகழ்ச்சியில், காமராஜர் துறைமுகத்தின் மேலாண்மை இயக்குநர் ஐரீன் சிந்தியா, சென்னை துறைமுகத்தின் துணைத் தலைவர் எஸ்.விஸ்வநாதன், அதிகாரிகள் மற்றும் ஊழியர்கள் உள்ளிட்ட பலர் பங்கேற்றனர்.



By admin