இன்றைய (பிப்ரவரி 02, 2025) தமிழ் நாளிதழ்கள் மற்றும் டிஜிட்டல் ஊடகங்கள் வெளியிட்டுள்ள முக்கிய செய்திகளின் தொகுப்பை இங்கு காணலாம்.
சென்னை பட்டினப்பாக்கம் கடற்கரையில் சிறுமிக்கு பாலியல் தொல்லை கொடுத்ததாக காவல்துறையைச் சேர்ந்தவர் கைது செய்யப்பட்டுள்ளதாக தினமணி நாளிதழ் செய்தி வெளியிட்டுள்ளது.
அந்தச் செய்தியின்படி, சென்னை ஐஸ்ஹவுஸ் பகுதியில், பிகார் மாநிலத்தைச் சேர்ந்த ஒரு தம்பதி வசித்து வருகின்றனர். அவர்களுடைய 14 வயது மகள் திடீரென காணாமல் போனதைத் தொடர்ந்து ஐஸ்ஹவுஸ் காவல் நிலையத்தில் புகார் அளித்தனர்.
மேலும், “தேடுதல் பணியில் ஈடுபட்டிருந்த காவல்துறையினர் அந்தச் சிறுமி, அவருடைய 16 வயது ஆண் நண்பருடன் கடலூரில் இருந்தது தெரிய வந்தது. இதைத் தொடர்ந்து காவல்துறையினர் அவர்கள் இருவரையும் மீட்டு சிறுவனைக் கைது செய்தனர். இதற்குத் துணையாக இருந்த அவரது தாயும் கைது செய்யப்பட்டார்.
இதைத் தொடர்ந்து குழந்தைப் பாதுகாப்புக் குழு அதிகாரிகள் அந்தச் சிறுமியிடம் விசாரணை நடத்தியபோது, அவர் போக்குவரத்துக் காவலர் ஒருவரால் பாலியல் ரீதியாக துன்புறுத்தப்பட்டது தெரிய வந்தது,” என்று அந்தச் செய்தி கூறுகிறது.
விசாரணையின்போது, அந்தச் சிறுமி அடிக்கடி, அவருடைய ஆண் நண்பரைச் சந்திக்க பட்டினப்பாக்கம் கடற்கரைக்குச் சென்று வந்ததாகவும், அப்போது போக்குவரத்து துறையைச் சேர்ந்த காவலர் ஒருவர் அவரை பாலியல் ரீதியாகத் துன்புறுத்தியதாகவும் தெரிவித்திருப்பதாக அந்தச் செய்தியில் கூறப்பட்டுள்ளது.
சிறுமியின் வாக்குமூலம் பதிவு செய்யப்பட்டு, அது தொடர்பான அறிக்கையை சென்னை பெருநகர காவல் ஆணையர் அருணிடம் குழந்தைகள் பாதுகாப்புக் குழு சமர்பித்தது.
“விசாரணையின்போது அந்தச் சிறுமிக்கு பாலியல் தொல்லை கொடுத்தது போக்குவரத்துத் துறையில் காவலராகப் பணியாற்றும் ராமன் என்பது தெரிய வந்தது. அவர் மீது போக்ஸோ மற்றும் இதர பிரிவுகளின் கீழ் வழக்குப் பதிவு செய்யப்பட்டு, நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டார். பிறகு அவர் புழல் மத்திய சிறையில் அடைக்கப்பட்டார்” என்று அந்த செய்தி கூறுகிறது.
மாலத்தீவுக்கு ரூ.600 கோடி நிதியுதவி வழங்கும் இந்தியா
மாலத்தீவுக்கு நிதியுதவியாக ரூ.600 கோடியை இந்தியா வரும் நிதியாண்டில் வழங்க உள்ளதாக இந்து தமிழ் நாளிதழ் செய்தி வெளியிட்டுள்ளது.
நாடாளுமன்றத்தில் பிப்ரவரி 1ஆம் தேதியன்று நடைபெற்ற பட்ஜெட் உரையில், கடந்த ஆண்டு நமது அண்டை நாடான மாலத்தீவுக்கு நிதி உதவியாக ரூ. 470 கோடியை இந்தியா வழங்கியது. இது வரும் நிதி ஆண்டில் ரூ.600 கோடியாக அதிகரிக்கப்படும் என்று நிர்மலா சீதாராமன் கூறியுள்ளதாக அந்தச் செய்தி கூறுகிறது.
அதோடு, “வெளிநாடுகளுக்கு வழங்கப்படும் மொத்த நிதியுதவி ரூ.4,883 கோடியில் இருந்து ரூ.5,483 கோடியாக அதிகரிக்கப்படும். மத்திய வெளியுறவுத் துறை அமைச்சகத்துக்கு வரும் நிதியாண்டில் ரூ.20,516 கோடி ஒதுக்கப்படும்.
இந்தியாவை சுற்றியுள்ள பல நாடுகளுக்கு இந்தியா நிதியுதவியை அவ்வப்போது அளித்து வருகிறது. இந்த நிதி மூலம் அந்த நாடுகளில் உள்கட்டமைப்பு வசதிகள் மேம்படுத்தப்படும்,” என்று அந்தச் செய்தியில் குறிப்பிடப்பட்டுள்ளது.
மத்திய பட்ஜெட் குறித்து ராகுல் காந்தி விமர்சனம்
பட்ஜெட்டில் புதிய யோசனைகள் எதுவுமே இடம் பெறவில்லை என்று ராகுல் காந்தி கூறியதாக டைம்ஸ் ஆஃப் இந்தியா வெளியிட்டுள்ள செய்தி தெரிவிக்கிறது.
“ஏற்கெனவே மோசமடைந்த பாதையில்தான் நிர்மலா சீதாராமன் பயணிக்கிறார். 1991 மற்றும் 2004 காலகட்டங்களில் காங்கிரஸ் செயல்பட்டதைப் போன்று அவரால் செயல்பட முடியவில்லை,” என்று ராகுல் காந்தி விமர்சித்திருப்பதாக அந்தச் செய்தியில் கூறப்பட்டுள்ளது.
இந்த நிதிநிலை அறிக்கையை விமர்சனம் செய்த காங்கிரஸ், சிக்கலான ஜி.எஸ்.டி. போன்ற விவகாரங்கள் குறித்து பட்ஜெட்டில் எதுவும் அறிவிக்கப்படவில்லை என்று கூறியது.
“துப்பாக்கித் தோட்டா காயங்களுக்கு சிறு கட்டு போடுவதைப் போல் இந்த பட்ஜெட் உள்ளது. உலகளாவிய நிச்சயமற்ற தன்மைக்கு மத்தியில், நமது பொருளாதார நெருக்கடியைத் தீர்ப்பதற்கு ஒரு முன்னுதாரண மாற்றம் தேவைப்பட்டது. ஆனால் இந்த அரசு யோசனைகள் ஏதுமின்றி திவாலாகிவிட்டது,” என்றும் ராகுல் காந்தி விமர்சித்துள்ளதாக டைம்ஸ் ஆஃப் இந்தியா செய்தி குறிப்பிட்டுள்ளது.
வண்டலூரில் புலி கழுத்தில் அறுவை சிகிச்சை
சென்னை வண்டலூரில் உள்ள அறிஞர் அண்ணா உயிரியல் பூங்காவில் இருக்கும் புலியின் கழுத்தில் இருந்த கட்டி அறுவை சிகிச்சை மூலம் அகற்றப்பட்டுள்ளதாக தினத்தந்தி நாளிதழ் செய்தி வெளியிட்டுள்ளது.
இந்த உயிரியல் பூங்காவில் 1700க்கும் மேற்பட்ட விலங்குகள் மற்றும் பறவைகள் பராமரிக்கப்படுகின்றன.
“இந்நிலையில், அங்கிருக்கும் ‘நகுலன்’ என்ற வங்கப்புலிக்கு அதனுடைய கழுத்தின் வலது பக்கத்தில் பெரிய அளவில் கட்டி ஒன்று உருவானது. அதைப் பார்த்த பூங்கா ஊழியர்கள் உடனடியாக பூங்காவின் கால்நடை மருத்துவரிடம் தகவல் தெரிவித்தனர்.
பல்வேறு கட்ட மருத்துவப் பரிசோதனைக்குப் பிறகு மருத்துவ குழுவினர் அறுவை சிகிச்சை செய்து அதன் கழுத்தில் இருந்த கட்டியை அகற்றினார்கள். அறுவை சிகிச்சை செய்த மறுநாளே வழக்கமாக வழங்கப்படும் உணவுகளை உட்கொண்டு ‘நகுலன்’ புலி சுறுசுறுப்பாகக் காணப்பட்டது” என்று அந்தச் செய்தியில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இலங்கையில் உப்பின் விலை அதிகரிக்கும் என எதிர்பார்ப்பு
இந்தியாவிலிருந்து உப்பு இறக்குமதி செய்வதில் ஏற்படும் செலவுகள் அதிகரித்துள்ளதால் இம்மாதம் உப்பின் விலையும் அதிகரிக்கக் கூடும் என அம்பாந்தோட்டை உப்பு நிறுவனத் தலைவர் டீ.கே.நந்தன திலக தெரிவித்துள்ளதாக வீரகேசரி இணையதளத்தின் செய்தி தெரிவிக்கிறது.
அதற்கமைய 400 கிராம் உப்பு பாக்கெட்டின் விலை 120 ரூபாயாகவும், ஒரு கிலோகிராம் உப்பு பாக்கெட்டின் விலை 180 ரூபாயாகவும் உயர்வடையும் என எதிர்பார்க்கப்படுவதாக அவர் குறிப்பிட்டுள்ளார்.
சமீபத்திய சீரற்ற காலநிலை காரணமாக உள்ளூர் உப்பளங்கள் சேதமடைந்ததைத் தொடர்ந்து, இந்தியாவில் இருந்து உப்பு இறக்குமதி செய்வதற்கு இரண்டு இறக்குமதியாளர்களுக்கு அரசாங்கம் அனுமதி வழங்கியது.
அதற்கமைய இந்தியாவிலிருந்து இறக்குமதி செய்யப்பட்ட 1485 மெட்ரிக் டன் முதல் தொகுதி உப்பு கடந்த ஜனவரி 27ஆம் தேதி இலங்கையை வந்தடைந்தது.
நாட்டில் நிலவிய மோசமான காலநிலை காரணமாக இந்த ஆண்டின் முதலாம் காலாண்டில் உள்நாட்டுச் சந்தையில் வீட்டுத் தேவைகளுக்கும், கைத்தொழில் தேவைகளுக்குமான உப்பு விநியோகத்தில் பற்றாக்குறை ஏற்படலாம் என்று அவதானிக்கப்பட்டது.
அதற்குத் தீர்வாக தயார் செய்து சந்தைக்கு விநியோகிப்பதற்கான தீர்வை வரி வீதத்திற்கமைய பதனிடப்படாத அயடின் சேர்க்கப்படாத 30,000 மெட்ரிக் டன் உப்பை இறக்குமதி செய்ய அனுமதி வழங்குமாறு உப்பு உற்பத்தியாளர்கள் கோரிக்கை விடுத்திருந்தனர்.
அதற்கமைய, பதனிடப்படாத அயடின் சேர்க்கப்படாத 30,000 மெட்ரிக் டன் உப்பை அரச வர்த்தக (பலநோக்கு) கூட்டுத்தாபத்தின் மூலம் இறக்குமதி செய்து உள்நாட்டு உப்பு உற்பத்தியாளர்கள் ஊடாக சந்தைக்கு வழங்குவதற்கு அமைச்சரவை தீர்மானித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.