தமிழ்நாட்டில், குறிப்பாக சென்னையில், சொகுசு வசதிகள் கொண்ட விலையுயர்ந்த வீடுகளுக்கான கிராக்கி குறிப்பிடத்தக்க அளவில் அதிகரித்துள்ளது. அதே சமயம், சாதாரண வீடுகள் விற்பனையில் பெரிதாக முன்னேற்றம் இல்லை. இந்தப் போக்கு வீட்டுச் சந்தை நெருக்கடியில் இருப்பதை உணர்த்துவதாகவும், அதே சமயம் சொகுசு வீடுகளுக்கான மோகம் ஒரு புதிய போக்கு என்றும் கூறுகிறார்கள் வல்லுநர்கள்.
சென்னையில் அண்ணா சாலை , அடையார் போன்ற பகுதிகளில் பல கோடி ரூபாய் மதிப்பிலான உயர் தர சொகுசு வீடுகள் கட்டப்பட்டு வருகின்றன.
இந்திய ரியல் எஸ்டேட் சங்கங்களின் கூட்டமைப்பான கிரெடாய் அமைப்பின் தமிழ்நாடு தலைவர் இளங்கோவன் கூறும் போது “முதல் நிலை நகரங்களில் உயர் தர சொகுசு வசதிகள் கொண்ட பிரீமியம் வீடுகளின் விற்பனை அதிகரிக்கிறது. சென்னையில் முதல் முறையாக தற்போது பிராண்டட் வீடுகள் கட்டப்பட்டு வருகின்றன. ஒரு நட்சத்திர ஓட்டலுடன் இணைந்த குடியிருப்புகளாக கட்டப்படும் இந்த வீடுகளில் நட்சத்திர ஓட்டலுக்கான வசதிகள் இருக்கும். வீட்டை விற்க வேண்டும் என்று நினைத்தால், ஓட்டலுக்கு குத்தகைக்கு விடலாம், மீண்டும் அங்கு வந்து தங்க வேண்டும் என்றால், பராமரிப்பு கட்டணத்தை மட்டும் செலுத்தினால் போதும். இதேபோன்று மதுரையில் 300 வீடுகள் கொண்ட பிராண்டட் குடியிருப்புகள் கட்டப்படவுள்ளன” என்று கூறினார்.
பிரபலங்கள், நடிகர் – நடிகைகள், வெளிநாடுவாழ் இந்தியர்கள் இதுபோன்ற வீடுகளை விரும்புவதாக கூறும் அவர், அதிசொகுசு வீடுகளுக்கான பகுதிகளும் அதிகரித்திருப்பதாக கூறினார், “சென்னையில் ஆழ்வார்பேட்டை, போயஸ் தோட்டம் உள்ளிட்ட சில இடங்களில் மட்டுமே பத்து கோடி ரூபாய்க்கும் அதிகமான விலையில் வீடுகள் இருந்துவந்துள்ளன. தற்போது அண்ணா சாலை, அடையார், நுங்கம்பாக்கம், கிழக்கு கடற்கரை சாலை உள்ளிட்ட பகுதிகளில் பத்து கோடி ரூபாய்க்கும் அதிகமான விலையிலான வீடுகள் கொண்ட குடியிருப்புகள் கட்டப்பட்டு வருகின்றன” என்று அவர் தெரிவித்தார்.
பட மூலாதாரம், Tajskyviewresidences.com
நாடு முழுவதும் சொகுசு வீடு விற்பனை அதிகரிப்பு
சென்னை மட்டுமல்ல, நாடு முழுவதுமே உயர் சொகுசு வீட்டு சந்தை குறிப்பிடத்தக்க வளர்ச்சி கண்டுள்ளது. கிரெடாய்-எம்சிஎச்ஐ அறிக்கையின்படி, இந்தியாவின் 7 முதல் நிலை நகரங்களில் உயர் சொகுசு சொத்துகளின் மொத்த விற்பனை மதிப்பு 2024-ஆம் ஆண்டின் ஏப்ரல் முதல் செப்டம்பர் வரையிலான காலகட்டத்தில் 18% அதிகரித்திருக்கிறது. இதன் மொத்த மதிப்பு ₹2,79,309 கோடியாக உயர்ந்திருப்பதாக அந்த அறிக்கை கூறுகிறது. 2023-ஆம் நிதியாண்டின் அதே காலகட்டத்தில் இது ₹2,35,800 கோடியாக இருந்தது. வீடுகளின் சராசரி விலை 2024-2025 நிதியாண்டின் முதல் பாதியில் ₹1.23 கோடியாக உயர்ந்துள்ளது. இது 2023-2024 நிதியாண்டின் முதல் பாதியில் ₹1 கோடியாக இருந்தது.
ஜேஎல்எல் நிறுவனம், இந்த துறையில் வளர்ச்சிப் போக்குகளை அவ்வப்போது அறிக்கையாக வெளியிடுகிறது. அந்த அமைப்பின், மூத்த நிர்வாக இயக்குநர் சிவகிருஷ்ணன், அதி சொகுசு வீடுகளின் விலை குறிப்பிடத்தக்க அளவில் அதிகரித்துள்ளதாகக் குறிப்பிடுகிறார்.
2024-ம் ஆண்டு ஜனவரி முதல் ஜூன் வரையிலான கால கட்டத்தில் டெல்லி, மும்பை, பெங்களூரு, ஐதராபாத், சென்னை உட்பட ஏழு நகரங்களின் நிலை பற்றி அவர் கூறும் போது “2024ன் முதல் பாதியில், பிரீமியம் பிரிவில் (ரூ.3 முதல் ரூ.5 கோடி மதிப்பிலான வீடுகள்) தொடங்கப்பட்டுள்ள வீட்டு திட்டங்கள் ஆண்டுக்கு ஆண்டு 169% அதிகரித்துள்ளன. அதைத் தொடர்ந்து ஆடம்பர பிரிவில் (ரூ.5 கோடிக்கும் அதிகமான விலையிலான வீடுகள்) 116% அதிகரிப்பு ஏற்பட்டுள்ளது. அதே காலகட்டத்தில் ரூ.50 லட்சம் முதல் ரூ.1 கோடி வரையிலான வீடுகள் 14% குறைந்துள்ளன”. என்று 2024ம் ஆண்டுக்கான ஆய்வறிக்கை வெளிவந்த போது குறிப்பிட்டிருந்தார்.
இவ்வாறான அதிசொகுசு வீடுகள் இப்போது தமிழ்நாட்டின் பல மாவட்டங்களிலும் உருவாக தொடங்கியுள்ளன என்று கிரெடாய் அமைப்பின் இளங்கோவன் கூறுகிறார்.
“கோவை போன்ற பல நகரங்களும் ரியல் எஸ்டேட் துறையில் வளர்ச்சி கண்டுள்ளன. கோவை முன்பு இரண்டாம் நிலை நகரமாக கருதப்பட்டது, ஆனால் தற்போது சென்னையை தளமாகக் கொண்ட 10 முன்னணி ரியல் எஸ்டேட் நிறுவனங்களின் குறிப்பிடத்தக்க கட்டுமான பணிகள் கோவையிலும் நடக்கின்றன. கேரளா மற்றும் பிற பகுதிகளிலிருந்து முதலீட்டாளர்கள் வருவதால் இந்த மாற்றம் ஏற்பட்டுள்ளது. மதுரையிலும் இந்த வளர்ச்சி காணப்படுகிறது” என்றார் அவர்.
இதுபோன்ற உயர் சொகுசு வீடுகளின் மீதான ஆர்வம் அதிகரித்தாலும், இந்தியாவின் பிற நகரங்களை ஒப்பிடும் போது, சென்னையில் இந்த சந்தை மிகச் சிறியதுதான் என்று கூறுகிறார் ஜேஎல்எல் நிறுவனத்தின் சிவகிருஷ்ணன்.
பிபிசி தமிழிடம் அவர் பேசுகையில்” பெங்களூரு, ஐதராபாத் நகரங்களை ஒப்பிடும் போது, சென்னையில் அதிவசதி கொண்ட வீடுகளின் விற்பனை குறைவு. இதற்கு காரணம் நிலப் பற்றாக்குறை, அதிக வசதி கொண்ட வீடுகளை சென்னையில் விற்பது கடினம். டெல்லி, மும்பை நகரங்களை போல சென்னையில் ஓராண்டுக்கு கோடிக்கணக்கான ரூபாய் சம்பாதிப்பவர்கள் அதிகம் கிடையாது. எனவே, சென்னையில் அதிக வசதி என்பது ரூ.4 முதல் 6 கோடியிலான வீடு. ஓராண்டில் ரூ.10 கோடிக்கும் அதிகமான விலை கொண்டவை சுமார் 40 முதல் 50 வீடுகள் மட்டுமே விற்பனையாகின்றன” என்று கூறினார்.
பட மூலாதாரம், Getty Images
கோவிட் பெருந்தொற்றுக்கு பின் வீடுகளின் விற்பனை அதிகம்
சென்னையில் பொதுவாக அதிகமான வாடிக்கையாளர்களைக் கொண்ட வீடுகள் சாதாரண வசதிகள் கொண்டவையே என்று கூறிய அவர், “சென்னையில் 2016-ம் ஆண்டில் சராசரியாக 18 ஆயிரம் வீடுகள் விற்றன. தற்போது சரசாரியாக ஆண்டுக்கு 20 ஆயிரம் முதல் 22 ஆயிரம் வீடுகள் விற்கப்படுகின்றன”, என்றார்.
கொரோனாவுக்கு முந்தைய ஆண்டுகளில் வீடு விற்பனை சரியத் தொடங்கியிருந்தது. தற்போது மீண்டும் பழைய நிலைக்கு வந்தாலும், சாதாரண வீடுகள் விற்பனையில் ஒரு தேக்கம் நிலவுவதை இந்த விவரங்கள் காட்டுகின்றன.
“மற்ற நகரங்களை விட சென்னையில் விலை ஏற்றம் படிப்படியாகவே இருக்கிறது. எனவே வீடுகள் விற்பனை சீராக அதிகரிக்கும்” என சிவகிருஷ்ணன் தெரிவித்தார்.
இரண்டு ஆண்டுகளுக்கு முன் ரூ.60-75 லட்சம் விலையிலான வீடுகளே சென்னையில் அதிகம் விற்பனையாயின. இன்று ரூ.80 லட்சம் முதல் ரூ.1 கோடி முதல் ரூ.1.1 கோடி வரையிலான வீடுகளே அதிகம் விற்பனையாகின்றன. சென்னையில் வாங்கப்படும் மொத்த வீடுகளில் சுமார் 35-40% இந்த வகையைச் சேர்ந்தவையே என்று சிவகிருஷ்ணன் குறிப்பிடுகிறார்.
பட மூலாதாரம், Getty Images
ஏழை – பணக்காரர் இடைவெளி அதிகரிப்பு
இந்தியாவில் ஏழை – பணக்காரர் இடைவெளி மேலும் அதிகரித்துள்ளது. மக்கள் தொகையில் 10% பேர் தேசிய வருமானத்தில் குறிப்பிடத்தக்க பங்கை வைத்துள்ளனர். இந்த போக்கு நுகர்வோர் சந்தையில் பிரதிபலிக்கிறது. அங்கு பிரீமியம் தயாரிப்புகள் வளர்ச்சியை ஊக்குவிக்கின்றன என்கிறார் ப்ளூம் வென்சர்ஸ் ஆராய்ச்சி அறிக்கையின் ஆசிரியரான சஜித் பாய். அதிக சொகுசான பிரீமியம் தயாரிப்புகளில் கவனம் செலுத்தும் நிறுவனங்கள் வளர்ச்சியடைந்துள்ளன என்றும், சமூகத்தின் பெரும்பகுதி மக்களை இலக்காகக் கொண்ட நிறுவனங்கள் சந்தையில் தமது பங்கை இழந்துள்ளன என்று அவர் குறிப்பிடுகிறார்.
இந்திய ரியல் எஸ்டேட் சந்தை “பிரீமியமைசேஷன்” போக்கை அனுபவித்து வருகிறது. இதில் ஆடம்பர தயாரிப்புகள் அதிக கவனம் பெறுகின்றன என்று ப்ளூம் வெஞ்சர்ஸ் என்ற தனது அறிக்கையில் கூறியது.
பிபிசி தமிழிடம் பேசிய சிறிய முதலீடு கொண்ட வீடுகளின் விற்பனையாளரான மஹிந்திரா கன்ஸ்ட்ரக்ஷன்ஸ் நிறுவனர் கார்த்திக் மகேந்திரன், “சென்னையில் தற்போது கேட்டட் கம்யூனிட்டிகளில் வீடு விற்பனை அதிகரித்து வருகிறது. இவற்றின் குறைந்தபட்ச விலை ரூ.1 கோடி. இதில் ரூ.2 கோடி, ரூ.3 கோடி அல்லது அதற்கும் மேலான விலையிலும் வீடுகள் வாங்கப்படுகின்றன. வெளிநாடுகளில் கடனுக்கான வட்டி விகிதம் குறைவாக இருப்பதால், வெளிநாடுவாழ் இந்தியர்கள் இந்த விலையில் வீடு வாங்குகின்றனர். ஆனால் சாதாரண மக்களின் தேவைக்கேற்ற வீடுகள், குடியிருப்புகளை கட்டி தரும் எங்களுக்கு தொழில் சற்று சிரமமாகவே உள்ளது ” என்றார்.