பட மூலாதாரம், Getty Images
தமிழகம் இந்தியா மற்றும் இலங்கையில் நடைபெற்ற முக்கிய நிகழ்வுகள் தொடர்பாக 09/02/2025 அன்று வெளியான நாளிதழ் மற்றும் இணைய செய்திகளின் தொகுப்பை இங்கே காணலாம்!
சென்னை மணலிபுதுநகர் அருகே தனியார் கன்டெய்னர் யார்டில் தூங்கிக் கொண்டிருந்த மேலாளரை கொலை செய்தது தொடர்பாக அங்கு பணிபுரிந்த ஊழியர் உட்பட 8 பேரை காவல்துறையினர் தேடி வருவதாக டைம்ஸ் ஆஃப் இந்தியா செய்தி வெளியிட்டுள்ளது.
கொலையான நபர் ஆந்திர பிரதேசத்தைச் சேர்ந்த சாய் பிரசாந்த் என்று தெரிய வந்துள்ளது. அவர் மணலிபுதுநகர் அருகே அமைந்துள்ள வெள்ளி வயல் சாவடியில் செயல்பட்டு வரும் கன்டெய்னர் யார்டில் மேலாளராக பணியாற்றி வந்தார்.
கடந்த 5-ம் தேதி அன்று அங்கே பணியாற்றி வந்த பாலாஜி என்பவர் வேலை நேரம் முடிவதற்கு முன்பாகவே வீட்டிற்கு சென்றுள்ளார். இதனைத் தொடர்ந்து வேலைகள் முடிய தாமதம் ஆகியுள்ளது.
அடுத்த நாள் காலை இதனை கண்டித்துள்ளார் சாய். இருவருக்கும் இடையே வாக்குவாதம் நீடிக்க சாய், பாலாஜியை பணி நீக்கம் செய்துள்ளார். இதனால் ஆத்திரம் அடைந்த பாலாஜி, அடுத்த நாள் நள்ளிரவு தன்னுடைய நண்பர்களுடன் சேர்ந்து சாய் பிரசாந்தை ஆயுதங்களால் தாக்கியுள்ளார். பலத்த காயம் அடைந்த சாய் மருத்துவமனைக்கு அழைத்துச் செல்லும் வழியிலேயே உயிரிழந்தார்.
இதனைத் தொடர்ந்து மணலிபுதுநகர் காவல்துறையினர் வழக்குப் பதிவு செய்து, சம்பவத்தில் ஈடுபட்ட நபர்களை தீவிரமாக தேடி வருகின்றனர் என்று அந்த செய்தி தெரிவிக்கிறது.
நீதிபதிகள் நியமனத்தில் இட ஒதுக்கீடு – தனிநபர் மசோதாவை தாக்கல் செய்த வில்சன்
உச்ச நீதிமன்ற, உயர் நீதிமன்ற நீதிபதிகள் நியமனத்தில் நாட்டின் மக்கள் தொகை விகிதத்திற்கு ஏற்பட இட ஒதுக்கீட்டை பின்பற்ற வேண்டும் என்று திமுக எம்.பி. வில்சன் நாடாளுமன்றத்தில் தனிநபர் மசோதா ஒன்றை தாக்கல் செய்துள்ளதாக இந்து தமிழ் திசை செய்தி வெளியிட்டுள்ளது.
சமூக பன்முகத்தன்மை மற்றும் பட்டியலின, பழங்குடியினர், இதர பிற்படுத்தப்பட்ட வகுப்பினர், பெண்கள், மத சிறுபான்மையினருக்கு உரிய இட ஒதுக்கீட்டை பிரதிபலிக்க சட்ட திருத்தம் மேற்கொள்வது அவசியம் என கூறி தனிநபர் மசோதாவை கொண்டு வந்துள்ளார்.
அந்த மசோதாவில், உயர் நீதிமன்றங்களில் நீதிபதிகளை நியமிக்கும் போதும், உச்ச நீதிமன்ற நீதிபதிகளாக பதவி உயர்வு வழங்கும் போதும் மாநில அரசுகளின் கருத்துகளையும் கணக்கில் எடுத்துக் கொள்ள வேண்டும். மேலும் உச்ச நீதிமன்ற கொலீஜியத்துக்கு அரசியலமைப்பின் பண்புகளை வழங்க வேண்டும், கொலீஜியத்தின் பரிந்துரைகளை ஏற்று உரிய உத்தரவுகளைப் பிறப்பிக்க மத்திய அரசுக்கு குறிப்பிட்ட காலக்கெடுவையும் நியமிக்க வேண்டும் என குறிப்பிடப்பட்டுள்ளது
”அரசியலமைப்புச் சட்டம் அமலுக்கு வந்த கடந்த 75 ஆண்டுகளில் உச்ச நீதிமன்றம் மற்றும் உயர் நீதிமன்றங்களில் மக்கள் தொகை விகிதத்துக்கு ஏற்ப இட ஒதுக்கீடு மறுக்கப்படுவது வேதனைக்குரியது” என்று மசோதாவில் குறிப்பிடப்பட்டுள்ளது என்று அந்த செய்தி தெரிவிக்கிறது.
பட மூலாதாரம், @PWilsonDMK/x
சென்னை விமான நிலையத்தில் கடுமையான பனிமூட்டம்
சென்னை விமான நிலையத்தில் கடுமையான பனிமூட்டம் காரணமாக 47 விமான சேவைகள் பாதிக்கப்பட்டன. 9 விமானங்கள் தரை இறங்க முடியாமல் திருப்பிவிடப்பட்டன என்று தினதந்தி நாளிதழ் செய்தி வெளியிட்டுள்ளது.
சென்னை மீனம்பாக்கம் விமான நிலைய பகுதியில் நேற்று காலையில் கடுமையான பனிமூட்டம் நிலவியது. இதனால் லண்டன், மஸ்கட், மும்பை, சிங்கப்பூர், மலேசியா, தோஹா, அந்தமான், கொழும்பு உள்ளிட்ட இடங்களில் இருந்து வந்த 21 விமானங்கள் தரை இறங்க முடியாமல் நீண்ட நேரமாக வானில் வட்டமடித்தன.
பின்னர் தரை இறங்க முடியாத லண்டன், மஸ்கட், சிங்கப்பூர், மும்பையில் இருந்து வந்த 4 விமானங்கள் ஐதராபாத்துக்கும், தோஹா விமானம் பெங்களூருவுக்கும், மலேசியா விமானம் கோவைக்கும், புனே, அந்தமான் விமானங்கள் திருப்பதிக்கும், கொழும்பில் இருந்து வந்த விமானம் மீண்டும் கொழும்பு நகருக்கும் திருப்பி விடப்பட்டன.
தூத்துக்குடி, திருவனந்தபுரம், திருச்சி பகுதிகளில் இருந்து சென்னைக்கு வந்த விமானங்கள் நீண்ட நேரம் வானில் வட்டமடித்த பிறகு சென்னையில் தரையிறங்க அனுமதி வழங்கப்பட்டது.
திடீர் பனிமூட்டம் காரணமாக 47-க்கும் மேற்பட்ட வருகை மற்றும் புறப்பாடு விமான சேவைகள் பாதிக்கப்பட்டன என்றும் அந்த செய்தியில் குறிப்பிடப்பட்டுள்ளது.
பட மூலாதாரம், Getty Images
ஒடிசாவில் ராகுல் காந்தி மீது வழக்கு
தேச விரோத கருத்துகளைப் பேசியதாக அளிக்கப்பட்ட புகாரின் அடிப்படையில் காங்கிரஸ் எம்.பி. ராகுல் காந்தி மீது ஒடிசா காவல்துறையினர் வழக்கு பதிவு செய்துள்ளனர் என்று தினமணி நாளிதழ் செய்தி வெளியிட்டுள்ளது.
கடந்த மாதம் டெல்லியில் காங்கிரஸ் கட்சியின் புதிய அலுவலக திறப்பு நிகழ்ச்சியில் ராகுல் காந்தி, “நாட்டின் ஒவ்வொரு அமைப்பையும் பாஜக மற்றும் ஆர்.எஸ்.எஸ் கைப்பற்றியுள்ளன. இதனால் தற்போது பாஜக, ஆர்.எஸ்.எஸ். மற்றும் இந்தியாவுக்கு எதிராகவே காங்கிரஸ் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளது,” என்று கூறியிருந்தார். இந்த கருத்து சர்ச்சையை ஏற்படுத்தியதாக அந்த நாளிதழின் செய்தி தெரிவிக்கிறது.
இந்த கருத்தை வெளியிட்டதைத் தொடர்ந்து நாட்டின் இறையாண்மைக்கு அச்சுறுத்தல் விளைவிக்கும் கருத்துகளை தெரிவித்ததாகக் கூறி ராகுல் காந்தி மீது ஜூனாகத் மாவட்ட பாஜக இளைஞரணி, ஆர்.எஸ்.எஸ்., பஜ்ரங் தளம் ஆகியவை புகார் அளித்தன. அதனைத் தொடர்ந்து அவர் மீது வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது.
பட மூலாதாரம், ANI
சட்டமா அதிபருக்கு அரசாங்கம் அழுத்தம் தருகிறது – உதய கம்மன்பில
”அரசியல் பழிவாங்களுக்காக அரசாங்கம் நீதிக்கட்டமைப்பையும் பயன்படுத்துகிறது. சட்டமா அதிபருக்கு அரசாங்கம் அழுத்தம் பிரயோகிப்பது தெளிவாக விளங்குகிறது. எதிர்வரும் காலங்களில் பலர் கைதாகலாம்” என பிவிதுரு ஹெல உறுமய கட்சியின் தலைவரும், நாடாளுமன்ற உறுப்பினருமான உதய கம்மன்பில தெரிவித்தார் என்று கூறுகிறது வீரகேசரி இணையத்தின் செய்தி.
”ஜனாதிபதி மற்றும் அரசாங்கத்தின் மீதான மக்கள் நம்பிக்கை வெகுவாக சிதைவடைந்துள்ளது. அரசாங்கத்தின் மீது மக்களின் வெறுப்பு தீவிரமடையும் போது மக்களின் கவனத்தை திசைத்திருப்புவதற்காக கடந்த அரசாங்கத்துடன் தொடர்புடைய விடயங்களை அரசாங்கம் வெளியிடும்” என்று சனிக்கிழமை நடைபெற்ற செய்தியாளர்கள் சந்திப்பில் அவர் தெரிவித்துள்ளார்.
பட மூலாதாரம், Getty Images
“ஜனாதிபதி நிதியத்தில் இருந்து நிதி பெற்றவர்கள், மதுபானசாலை அனுமதிப்பத்திரம் பெற்றவர்கள் விபரத்தை அரசாங்கம் வெளியிட்டது. தற்போது 2022 மே கலவரத்தின் போது வீடுகளை இழந்த அரசியல்வாதிகள் பெற்றுக் கொண்ட இழப்பீட்டுத் தொகை தொடர்பான விபரங்களை அரசாங்கம் வெளியிட்டுள்ளது.
ஜனாதிபதி நிதியத்தில் இருந்து நிதி பெற்றவர்களின் பெயர் விபரங்களை வெளியிட்ட அரசாங்கம் அந்த நிதியை மீளப் பெற்றுக் கொள்வதற்கு எவ்வித நடவடிக்கைகளையும் எடுக்கவில்லை. அதேபோல் கடந்த அரசாங்கத்தில் மதுபானசாலை அனுமதிப்பத்திரங்கள் பெற்றுக் கொண்டவர்களின் பெயர் விபரங்கள் வெளியிடப்பட்டன.
மதுபானசாலை அனுமதிப்பத்திரங்களை இரத்துச் செய்வதற்கு ஏதேனும் நடவடிக்கை எடுக்கப்படுமா என கேள்வியெழுப்பிய போது அந்த மதுபானசாலை பத்திரங்கள் சட்டரீதியாக வழங்கப்பட்டுள்ளது. ஆகவே அதற்கு எதிராக நடவடிக்கை எடுத்தால் சட்ட சிக்கல் ஏற்படும் என சபை முதல்வர் பிமல் ரத்நாயக்க குறிப்பிடுகிறார்.
ஜனாதிபதி அநுரகுமார திசாநாயக்க தேர்தல் பிரச்சார மேடைகளில் மதுபானசாலை அனுமதிப் பத்திரங்களையும், முன்னாள் ஜனாதிபதிகளுக்கான கொடுப்பனவை இரத்துச் செய்வதாகவும் குறிப்பிட்ட விடயங்கள் அனைத்தும் இன்று பொய்யாக்கப்பட்டுள்ளது. மக்களை தூண்டிவிடுவதற்காக குறிப்பிட்ட விடயங்களை சட்டத்துக்கு முரணாக செயற்படுத்த முடியாது என்பதை அரசாங்கம் தற்போது விளங்கிக் கொண்டுள்ளது.
அரசியல் பழிவாங்களுக்காக அரசாங்கம் நீதிக்கட்டமைப்பை பயன்படுத்திக் கொள்கிறது. அரசியல் பழிவாங்கலை முன்னிலைப்படுத்தி வழக்குத் தாக்கல் செய்யப்படுகின்றன. சட்டமா அதிபருக்கு அரசாங்கம் அழுத்தம் பிரயோகிப்பது தெளிவாக விளங்குகிறது. எதிர்வரும் காலப்பகுதியில் பலர் கைதாகலாம்” என உதய கம்மன்பில தெரிவித்துள்ளார் என்று அந்த செய்தி தெரிவிக்கிறது.
– இது, பிபிசிக்காக கலெக்டிவ் நியூஸ்ரூம் வெளியீடு