படக்குறிப்பு, பழனியம்மாள் அதிகாலையில் 2 மணிக்கெல்லாம் எழுந்து செங்கல் சூளையில் வேலை செய்ய வேண்டும்கட்டுரை தகவல்
எழுதியவர், நந்தினி வெள்ளைச்சாமி
பதவி, பிபிசி தமிழ்
அதிகாலை 2 மணிக்கெல்லாம் ஜெயராஜின் அம்மா பழனியம்மாளுக்கு விடிந்துவிடும். இரவு எத்தனை மணிக்குத் தூங்கினாலும் 2 மணிக்கு எழுந்திருக்க வேண்டும் என்பது, செங்கல் சூளையில் வேலை பார்க்கும் அவருக்கு ஓர் அனிச்சை செயல். தலைப்பாகை அணிந்து சேறும் சகதியுமான ஆடையுடன் நாள் முழுக்க தன் அம்மா வேலை செய்வதை புகைப்படங்களாக ஆவணப்படுத்தியுள்ளார், 12ம் வகுப்பு படிக்கும் ஜெயராஜ்.
ஈரோடு மாவட்டம் அந்தியூரில் உள்ள சின்னத்தம்பிபாளையம் கிராமத்தை சேர்ந்த ஜெயராஜ், ஈரோடு அரசு மாதிரிப் பள்ளியில் படித்துவருகிறார்.
“நானும் செங்கல் சூளையில் அம்மாவுடன் வேலை செய்திருக்கிறேன். மண்ணைக் குழைத்து, செங்கலை உருவாக்குவது வரை கடுமையான வேலை அது. தலையில் மண்ணை சுமந்து, குழைத்து அதனை செங்கல்லாக உருவாக்க வேண்டும். மதியம் வெயிலில் அதிக வேலைகளை பார்க்க முடியாது என்பதால் அதிகாலையிலேயே அம்மா வேலை பார்ப்பார். அவரை புகைப்படம் எடுப்பதற்காக அதிகாலை 2 மணிக்கு ஒருமுறை எழுந்தேன். ஒரேயொரு புகைப்படம் எடுத்துவிட்டு தூக்கம் வருகிறது என வந்துவிட்டேன். ஆனால், அம்மாவுக்கு அது தினசரி செயல்பாடு.”
பட மூலாதாரம், Sheik Hasan K
ஜெயராஜ் மட்டுமல்ல, தமிழ்நாட்டின் சுமார் 17 அரசு மாதிரிப் பள்ளிகளில் படிக்கும் 40 மாணவ, மாணவிகள் தங்கள் பெற்றோர் செய்யும் வேலைகளையும் தங்கள் சுற்றத்தில் உழைக்கும் மக்கள் பலரையும் புகைப்படங்களாக பதிவு செய்துள்ளனர். உழைக்கும் மக்களின் வலியை உணர்த்தும் வகையிலான படங்களாக அவை உள்ளன.
துப்புரவு பணி, கட்டுமான தொழில், கல் குவாரி, செருப்பு தைத்தல், மஞ்சள் ஆலை, பனை மரம் ஏறுதல், பேருந்து ஓட்டுநர், தையல் தொழிலாளி என, கடும் உழைப்பை கோரும் வேலைகளைச் செய்யும் தங்கள் பெற்றோர்களை லென்ஸ் வாயிலாக புகைப்படம் எடுத்துள்ளனர். வெட்டுக் காயங்கள், சிமெண்ட், மண் ஊறிய கை, கால்களை பிரதானமாக அவர்களின் புகைப்படங்களில் பார்க்க முடிகிறது. அவர்கள் பெற்றோரின் உழைப்பு அந்த படங்களில் பிரதிபலிக்கிறது.
“செங்கல் சூளையில் வேலை பார்க்கும் போது கால் பாதம் வெடித்துப் புண்ணாகிவிடும். தலைவலி, கால்வலி, மயக்கம், இடுப்பு வலி அடிக்கடி ஏற்படும். கேமரா வழியே புகைப்படம் எடுக்கும் போதுதான் அம்மாவுடைய வலி எனக்குப் புரிகிறது. புகைப்படங்கள் மூலம் அம்மாவின் வலியை மற்றவர்களுக்குக் கடத்த முடியும் என நினைக்கிறேன்.” என்கிறார் ஜெயராஜ்.
படக்குறிப்பு, பிபிசி தமிழ் வாட்ஸ்ஆப் சேனலில் இணைய இங்கே கிளிக் செய்யவும்
“அம்மா முதலில் அவரை புகைப்படம் எடுக்க ஒத்துக்கொள்ளவில்லை. நான் எவ்வளவோ கேட்ட பிறகுதான், ‘சரி நான் வேலை பார்க்கிறேன், நீ எடுத்துக்கோ’ன்னு சொன்னாங்க. புகைப்படத்தைக் காண்பித்ததும் ‘நல்லா இருக்குன்னு’ சொன்னாங்க.”
அரசு மாதிரி பள்ளிகளில் கல்வி-இணை செயல்பாடுகளாக 9 முதல் 12-ம் வகுப்பு வரை படிக்கும் மாணவ, மாணவிகளுக்கு புகைப்படக் கலை, அரங்கக் கலை, மைமிங், நிகழ்த்துக் கலைகள் என பலவும் கற்றுத்தரப்படுகின்றன. ஒவ்வொரு ஆண்டும் ஒரு கலையை கற்பதன் மூலம், நான்கு ஆண்டுகளில் நான்கு வெவ்வேறு கலைகளை அவர்களால் கற்க முடியும் என்பதே இதன் நோக்கம். தமிழ்நாடு அரசின் பள்ளிக் கல்வித்துறையால் இது செயல்படுத்தப்படுகிறது.
பட மூலாதாரம், Govarthanan L S
படக்குறிப்பு, இந்த புகைப்பட கண்காட்சி கடந்த பிப்ரவரி மாதம் 3 நாட்கள் சென்னை அருங்காட்சியகத்தில் காட்சிப்படுத்தப்பட்டது
‘அப்பா ஒரு ஹீரோ’
அப்படி புகைப்படக் கலையை தேர்ந்தெடுத்த மாணவர்களுக்கு 6-7 மாதங்களாக பயிற்சியளித்து, ‘உழைக்கும் மக்கள்’ எனும் தலைப்பில் அவர்கள் எடுத்த புகைப்படங்கள், கடந்த பிப். 14, 15, 16 ஆகிய தேதிகளில் சென்னை எழும்பூர் அருங்காட்சியகத்தில் காட்சிப்படுத்தப்பட்டது. அரசு மாதிரி பள்ளிகள் என்பது உண்டு உறைவிட பள்ளிகளாகும். எனவே, வார விடுமுறையில்தான் மாணவர்கள் தங்கள் வீடுகளுக்கு செல்வார்கள். அப்போதுதான் இந்த புகைப்படங்களையும் எடுத்துள்ளனர்.
மதுரை அரசு மாதிரிப் பள்ளியில் 11ம் வகுப்பு படித்துவரும் கோபிகா லெட்சுமியின் தந்தை முத்துகிருஷ்ணன், கடந்த இரண்டு ஆண்டுகளுக்கு முன் அவருடைய ஒரு சிறுநீரகம் செயலிழந்த காரணத்தால் வாரத்துக்கு இரண்டு முறை டயாலிசிஸ் செய்துவருகிறார்.
பட மூலாதாரம், Gopika Lakshmi M
படக்குறிப்பு, கோபிகாலெட்சுமியின் தந்தை டயாலிசிஸ் செய்த நிலையிலும் வாகனத்திலேயே சென்று பலசரக்குகளை விற்பனை செய்துவருகிறார்
“அப்பா ஒரு சிறிய நான்கு சக்கர வாகனத்திலேயே பல சரக்கு வியாபாரம் செய்துவருகிறார். அருகிலுள்ள கிராமங்களுக்கு வாகனத்திலேயே சென்று சரக்குகளை விற்பார். டயாலிசிஸ் செய்தும் அப்பா எங்களுக்காக கடினமாக உழைக்கிறார். டயாலிசிஸ் செய்துவிட்டு வீட்டில் ஓய்வெடுப்பதற்கு எங்களுக்கு வசதி இல்லை. இந்த நிலையிலும் அப்பா எப்படி உழைக்கிறார் என்பதை மற்றவர்கள் பார்க்க வேண்டும் என நினைத்தேன். நாம் எடுக்கும் படங்கள் நம் வாழ்க்கையின் ஆதாரமாக இருக்க வேண்டும்.” என்கிறார் தா. வாடிப்பட்டி கிராமத்தை சேர்ந்த கோபிகாலெட்சுமி.
அவரை பொறுத்தவரை இந்த புகைப்படங்களில் அவருடைய அப்பா ‘ஒரு ஹீரோ போன்று இருக்கிறார்.”
அறக்கட்டளை மூலமாக இலவசமாக டயாலிசிஸ் செய்யும் முத்துக்கிருஷ்ணனுக்கு, மாதந்தோறும் ரூ.3,000 வரை மாத்திரைகளுக்கு செலவாகிறது.
பட மூலாதாரம், Mukesh
படக்குறிப்பு, கல்குவாரியில் டிரில்லிங் வேலை செய்யும் கதிர்வேலுக்கு ஒருநாள் சம்பளம் ரூ.500-600
தொழில்முறையிலான டி.எஸ்.எல்.ஆர் கேமரா மூலம் புகைப்படம் எடுப்பது ஆரம்பத்தில் இந்த மாணவர்களுக்குக் கடினமானதாக இருந்தாலும், தொடர் பயிற்சியின் வாயிலாக இக்கலை சாத்தியமாகியிருக்கிறது. இம்மாணவர்களுக்கு ஒவ்வொரு பள்ளியிலும் உள்ள புகைப்படக் கலை பயிற்சியாளர்கள் பயிற்சி அளித்துள்ளனர்.
“மாணவர்களை சமூக பொறுப்புள்ளவர்களாக உருவாக்குவதுதான் இதன் நோக்கம். குழந்தைகள் என்ன புகைப்படங்கள் எடுக்கின்றனர் என பார்க்க நினைத்தோம். உழைக்கும் மக்கள் அவர்களை சுற்றியே இருக்கின்றனர், அதை ஆவணப்படுத்தியிருக்கின்றனர். அவர்களை பற்றி தெரிந்து கொள்வதுதான் சமூக மாற்றத்தின் தொடக்கம்.” என்கிறார், மாதிரி பள்ளிகளில் கல்வி-இணை செயல்பாடுகளின் மாநில ஒருங்கிணைப்பாளராக உள்ள முத்தமிழ் கலைவிழி. இவர், நீலம் அறக்கட்டடளை நிறுவனராகவும் உள்ளார்.
பட மூலாதாரம், Saran R
படக்குறிப்பு, இம்மாணவர்களை பொறுத்தவரை இயற்கை காட்சிகளைவிட மற்றவர்களின் உழைப்பை புகைப்படங்களாக பதிவு செய்வதன் மூலம் அக்கலையின் நோக்கம் நிறைவேறுகிறது
கடின உழைப்பும் சொற்ப வருமானமும்
வேலூர் மாவட்டம் கே.வி.குப்பத்தை சேர்ந்த முகேஷ் அம்மாவட்ட அரசு மாதிரிப் பள்ளியில் 10ம் வகுப்பு படித்துவருகிறார். அவருடைய அப்பா கதிர்வேல், திருத்தணியில் உள்ள கல்குவாரி ஒன்றில் வேலை பார்க்கிறார்.
“புகைப்படங்கள் எடுப்பதற்காக அப்பாவுடன் கல்குவாரியிலேயே நான்கு நாட்கள் தங்கியிருந்தேன். அப்போதுதான் அப்பா கல் குவாரியில் எப்படியான வேலைகளை செய்கிறார் என்பதை முதன்முறையாக பார்த்தேன். அப்பா அங்கேயே தங்கி வேலை பார்க்கிறார். வாரத்துக்கு ஒருமுறைதான் வீட்டுக்கு வருவார்.” என்கிறார் முகேஷ்.
அதிகாலை 3 மணியிலிருந்து மதியம் 12 மணி வரையும் பின்னர் சிறிது ஓய்வுக்குப் பிறகு மாலை 3 மணியிலிருந்து 7 மணி வரையும் தன் தந்தை கல் குவாரியில் ‘டிரில்லிங்’ வேலைகளை பார்ப்பதாகக் கூறுகிறார் அவர்.
பட மூலாதாரம், Mukesh K
படக்குறிப்பு, தங்களை சுற்றி இருப்பவர்களின், பலராலும் அறியப்படாத அவர்களின் உழைப்பை ஆவணப்படுத்த வேண்டும் என்பதே இந்த மாணவர்களின் நோக்கமாக உள்ளது
“அவர்கள் தங்கும் அறையில் கட்டில், மெத்தையெல்லாம் இல்லை. குவாரியில் உள்ள காலி அட்டைப் பெட்டிகள் மீதுதான் அப்பா படுத்திருப்பார். அப்பாவுக்கு கடும் வெயிலில் வேலை செய்வதால், கடந்தாண்டு சன் ஸ்ட்ரோக் ஏற்பட்டது.”
இந்த டிரில்லிங் வேலையில் ஒரு நாளைக்கு 500-600 ரூபாய் கிடைக்கும் எனக்கூறுகிறார் முகேஷ்.
இந்த மாணவ, மாணவிகள் பெரும்பாலானோர், விளிம்புநிலை குழந்தைகள். தினசரி கூலி வேலைகளையே இவர்களின் பெற்றோர்கள் செய்கின்றனர். அவர்களின் வாழ்க்கையில் உள்ள கஷ்டங்களை பிரதானப்படுத்த வேண்டும் என்பது இந்த புகைப்படங்களின் நோக்கமல்ல, மாறாக, “தங்கள் பெற்றோரின் கடின உழைப்பை சமூகம் அறிய செய்ய வேண்டும் என்பதுதான் நோக்கம்;” என்பது இந்த புகைப்படங்களை பார்க்கும்போது புரிகிறது.
பட மூலாதாரம், Keerthi S
படக்குறிப்பு, சரக்குகளை வாங்க தன் அம்மா முத்துலட்சுமி பேருந்தில் சென்றுவருவதில் உள்ள சிரமங்களை ஆவணப்படுத்தியுள்ளார் கீர்த்தி
தென்காசி மாவட்டம் மாயமான்குறிச்சியை சேர்ந்த கீர்த்தி 11-ம் வகுப்பு படித்து வருகிறார். வீட்டின் முன்பு சிறியதாக பெட்டிக் கடை வைத்திருக்கும் தன் அம்மா முத்துலட்சுமி, சரக்குகளை வாங்க பேருந்தில் சென்றுவருவதில் உள்ள சிரமங்களை ஆவணப்படுத்தியுள்ளார்.
“அப்பாவுக்கு உடல் நிலை சரியில்லை. அம்மாதான், கடை, வீடு இரண்டையும் கவனிக்கிறார். காலை 4 மணிக்கு எழுந்து இரவு 11 மணி வரை அவருக்கு வேலை இருக்கும். குழந்தைகளை முன்னேற்ற ஒரு பெண் என்னவெல்லாம் செய்கிறார் என்பதை புகைப்படங்கள் வாயிலாக காண்பிக்க வேண்டும் என நினைத்தேன்.” என்கிறார் கீர்த்தி.
“அம்மா வேலை செய்வதை கேமரா லென்ஸ் வழியாக பார்க்கும்போது புதிதாக இருந்தது. புரொபஷனல் கேமராவை பிடிப்பது ஆரம்பத்தில் பயமாக இருந்தாலும் பின்னர் பழகிவிட்டது. இரவு நேரத்தில் எப்படி படம் எடுப்பது, ஷட்டர் ஸ்பீடு, அபெர்ச்சர் எப்படி சரிசெய்வது என எல்லாம் தெரியும்.”
பட மூலாதாரம், Sheik Hasan K
படக்குறிப்பு, தங்கள் பெற்றோர்களின் கை, கால்களை புகைப்படம் எடுப்பதன் வாயிலாக அவர்களின் கதைகளை சொல்ல முயல்கின்றனர்
இந்த புகைப்பட கண்காட்சியை புகைப்படக் கலைஞர் எம். பழனிக்குமார் ஒருங்கிணைத்துள்ளார்.
“நம் கதைகளை எப்படி ஆவணப்படுத்துவது என்பதை இந்த மாணவர்களுக்குக் கற்றுக் கொடுத்தோம்.” என்கிறார் அவரர்.
கழிவுநீர் தொட்டியை சுத்தம் செய்யும்போது விஷவாயு தாக்கி உயிரிழப்போரின் மரணங்களை தொடர்ச்சியாக தன் புகைப்படங்கள் வாயிலாக ஆவணப்படுத்தி வருகிறார் பழனிக்குமார்.
வேலை செய்யும் அம்மாவின் கைகள்
வீட்டு வேலைகளை கவனித்துக் கொள்ளும் அம்மாக்களையும் சில மாணவர்கள் புகைப்படங்கள் எடுத்துள்ளனர். ” வெளியில் சென்று வேலை பார்ப்பது மட்டும் உழைப்பு அல்ல, வீட்டில் காலை முதல் இரவு வரை என் அம்மாவின் கைகள் வேலை செய்துகொண்டேதான் இருக்கிறது” என தன் அம்மாவின் கைகளை மட்டுமே புகைப்படமாக எடுத்துள்ளார் மாணவி ஒருவர்.
“இம்மாணவர்களின் அப்பாவோ அம்மாவோ எப்படிப்பட்ட சூழல்களில் வேலை பார்க்கின்றனர் என்பதை முன்பு பெரும்பாலும் பார்த்திருக்க மாட்டார்கள். அதை நேரடியாக பார்க்கும்போது அந்த உழைப்பை உணருகின்றனர். அடுத்தடுத்து முன்னேற வேண்டும் என்ற எண்ணம் ஏற்படுகின்றது. புகைப்படக் கலையில் அவர்களின் திறமையை அவர்களின் புகைப்படங்களை பார்த்தாலே புரியும்” என்றார்.
பட மூலாதாரம், Rashmitha T
படக்குறிப்பு, பீடி சுற்றும் தொழில் செய்பவர்களின் வீடு முழுவதும் புகையிலை வாசனையே நிரம்பியிருக்கிறது
வேலூர் மாவட்டம் பள்ளிகொண்டான் கிராமத்தை சேர்ந்த 10-ம் வகுப்பு மாணவி ரக்ஷ்மிதா, தங்கள் பகுதியில் பீடி சுற்றும் தொழிலாளர்களை புகைப்படங்கள் எடுத்துள்ளார்.
“வீட்டு வாசல் முன்பு அமர்ந்துதான் பீடி சுற்றுவார்கள். அவர்களுடைய வீட்டில் புகையிலை வாசனை அதிகமாக இருக்கும். கொஞ்ச நேரத்துக்கு மேல் அங்கு இருக்க முடியாது. இவர்கள் ஆயிரம் பீடி சுற்றினால்தான் 250 ரூபாய் கிடைக்கும். மிக வேகமாக பீடி சுற்றுபவர்களுக்கே ஆயிரம் பீடி சுற்ற ஐந்து நாட்களாகும். அவர்களுக்கு காசநோய், நுரையீரல் பாதிப்புகள் அதிகமாக ஏற்படும். ஞாயிற்றுக்கிழமை விடுமுறையெல்லாம் அவர்களுக்குக் கிடையாது. இவர்கள் என்ன வேலை செய்கின்றனர் என்பது யாருக்கும் தெரியாது. சொல்லப்படாத இவர்களின் கதைகளை சொல்ல வேண்டும்.” என்கிறார் ரக்ஷ்மிதா.
சமூகத்தில் அதிகம் அறியப்படாத எளிய மக்களின் வாழ்க்கை, அவர்களின் பிள்ளைகளாலேயே புகைப்படங்களாக பதிவு செய்யப்பட்டிருக்கின்றன.