- எழுதியவர், விஜயானந்த் ஆறுமுகம்
- பதவி, பிபிசி தமிழ்
-
சென்னை திருப்போரூர் முருகன் கோவில் உண்டியலில் விழுந்த ஐபோனை திரும்பப் பெற முடியாமல் தினேஷ் என்பவர் தவிக்கிறார்.
‘உண்டியலில் விழுந்த ஐபோன் முருகனுக்கே சொந்தம்’ என்று அவரிடம் தமிழ்நாடு இந்து சமய அறநிலையத்துறை அதிகாரிகள் கூறியுள்ளனர்.
செல்போனில் உள்ள தரவுகளை மட்டும் எடுத்துக் கொள்ளுமாறு அதிகாரிகள் கூறியதாக தினேஷ் கூறுகிறார்.
ஐபோனை உரியவரிடம் ஒப்படைப்பது தொடர்பான சாத்தியக் கூறுகளை ஆராய்வதாக தமிழ்நாடு இந்து சமய அறநிலையத்துறை அமைச்சர் சேகர்பாபு கூறியுள்ளார்.
உண்டியலில் ஐபோன் விழுந்தது எப்படி? அறநிலையத் துறை அதிகாரிகள் சொல்வது என்ன?
சென்னை அம்பத்தூர் விநாயகபுரத்தைச் சேர்ந்த தினேஷ் என்பவர் சென்னை பெருநகர வளர்ச்சிக் குழுமத்தில் (சிஎம்டிஏ) பணிபுரிந்து வருகிறார். இவர்தான், திருப்போரூர் கந்தசுவாமி கோவில் உண்டியலில் ஐபோனை தவறவிட்டதாகக் கூறி தற்போது அதனை திரும்பப் பெற முயன்று வருகிறார்.
பிபிசி தமிழிடம் பேசிய அவர், “திருப்போரூர் முருகன் கோவிலுக்குச் சென்றிருந்த போது, என்னுடைய ஐபோன் (13 புரோ மேக்ஸ்) தவறி உண்டியலில் விழுந்துவிட்டது. இதுகுறித்து கோவில் செயல் அலுவலருக்கு கடிதம் அனுப்பியிருந்தேன். டிசம்பர் 19-ஆம் தேதியன்று உண்டியல் திறக்கும்போது தகவல் தெரிவிப்பதாக, கோவில் நிர்வாகம் கூறியது. அதன்படி உண்டியல் திறக்கப்பட்ட போது ஐபோன் கிடைத்தாலும் கூட, அது என்னிடம் ஒப்படைக்கப்படவில்லை. மாறாக, அறநிலையத்துறை விதிகளின்படி கோவில் உண்டியலில் எது விழுந்தாலும் அது சுவாமிக்கே சொந்தம’ என அதிகாரிகள் கூறிவிட்டனர்” என்றார்.
ஆறடி உயர உண்டியலில் ஐபோன் விழுந்தது எப்படி?
“அன்றைய தினம் மதிய நேரத்தில் சாமி கும்பிடுவதற்காக கந்தசாமி கோவிலுக்கு சென்றேன். அப்போது தவறுதலாக உண்டியலில் ஐபோன் விழுந்துவிட்டது” என்கிறார் தினேஷ்.
பிபிசி தமிழிடம் பேசிய அவர், “அதிகாரிகள் ‘உண்டியலில் எது விழுந்தாலும் அது சுவாமிக்கே சொந்தம்’ என்று கூறிவிட்டதால் நான் வீட்டிற்குச் சென்றுவிட்டேன். அதன் பிறகு அதிகாரிகள் அவர்களுக்குள் ஆலோசித்துவிட்டு, ‘ஐபோனில் உள்ள தரவுகளை வேண்டுமானால் எடுத்துக் கொள்ளுங்கள்’ என்று என்னை தொடர்பு கொண்டு கூறினர். ஆனால், என்னால் மீண்டும் கோவிலுக்குச் செல்ல முடியாததால் ஐபோனில் உள்ள தரவுகளை நான் எடுக்கவில்லை.” என்றார்.
கோவில் செயல் அலுவலர் சொல்வது என்ன?
“கோவிலின் ராஜ கோபுரத்துக்கு அருகில் ஆறு அடி உயரத்தில் உண்டியல் உள்ளது. அந்த உண்டியலில் ஐபோன் தவறி, உள்ளே விழுவதற்கு வாய்ப்பே இல்லை” என்கிறார் திருப்போரூர் கந்தசாமி கோவிலின் செயல் அலுவலர் குமரவேல்.
பிபிசி தமிழிடம் பேசிய அவர், “கோவிலுக்கு ஆகஸ்ட் மாதம் சாமி கும்பிடுவதற்காக தினேஷ் வந்துள்ளார். ஆனால், ஐபோனை காணவில்லை என செப்டம்பர் மாதம் தான் அறநிலையத் துறைக்குக் அவர் கடிதம் கொடுத்தார்” என்கிறார்.
அறநிலையத் துறைக்கு அவர் எழுதியுள்ள கடிதத்தில், ‘உண்டியலில் செல்போன் விழுந்திருக்கலாம். நீங்கள் உண்டியலை திறக்கும் போது சொல்லுங்கள். வந்து பார்க்கிறேன்’ என்று தினேஷ் குறிப்பிட்டிருந்தார். “உண்டியல் திறக்கும்போது பொதுமக்களுக்குத் தகவல் தெரிவிப்போம். அதன்படியே அவருக்கும் தகவல் தெரிவிக்கப்பட்டது” என்கிறார் குமரவேல்.
`கடவுளுக்கே சொந்தம்’
கடந்த வியாழன் அன்று திருப்போரூர் முருகன் கோவிலின் உண்டியல்களை இந்து சமய அறநிலையத்துறை இணை ஆணையர் ராஜலட்சுமி, கோவில் செயல் அலுவலர் குமரவேல் ஆகியோர் முன்னிலையில் திறக்கப்பட்டது.
அப்போது, 52 லட்ச ரூபாய் ரொக்கம் 289 கிராம் தங்கம், 6,920 கிராம் வெள்ளி ஆகியவற்றுடன் ஐபோன் ஒன்றும் கண்டெடுக்கப்பட்டதாக, அறநிலையத்துறை அதிகாரிகள் தெரிவித்தனர்.
“தினேஷ் கடந்த 19-ஆம் தேதி கோவிலுக்கு வரும் போதே புகைப்படம் மற்றும் வீடியோ எடுப்பவரை தன்னுடன் அழைத்து வந்திருந்தார். ராஜகோபுரம் அருகில் உள்ள உண்டியலில் ஐபோன் கிடைத்தது. அந்த ஐபோனை கொடுக்குமாறு தினேஷ் கேட்டார். ‘அப்படியெல்லாம் உடனே கொடுக்க முடியாது. உங்கள் ஐபோன் என்பதற்கான விவரங்களை ஆதாரங்களுடன் எழுத்துப்பூர்வமாக கொடுங்கள். உயர் அதிகாரிகளிடம் விவாதித்துவிட்டு பதில் சொல்கிறோம்’ என்று நாங்கள் கூறினோம்” என்கிறார் கோவில் செயல் அலுவலர் குமரவேல்.
விதிகள் என்ன சொல்கின்றன?
“தமிழ்நாடு இந்து சமய அறநிலையத்துறை விதிகளின்படி, காணிக்கையாக விழுந்த பொருள்கள் அனைத்தும் கோவிலின் கட்டுப்பாட்டில் இருக்கும்” என்று கூறும் குமரவேல், “உண்டியலில் யார் வேண்டுமானாலும் என்ன வேண்டுமானாலும் போடலாம். அதன் பிறகு. அந்த பொருள் கோவிலுக்கு சொந்தமானதாகவே கருதப்படும். உண்டியலில் காணிக்கையாக வரும் பொருட்கள் அனைத்தையும் பதிவு செய்ய வேண்டும். அந்த ஐபோன் அவருடையது தானா என்பதற்கான ஆதாரங்களை எழுத்துப்பூர்வமாக கேட்டுள்ளோம்” என்கிறார்.
“இதற்கு முன்பு இப்படியொரு சம்பவத்தைக் கேள்விப்பட்டதில்லை. எலக்ட்ரானிக் உபகரணங்களுக்கு சிறப்பு விதிவிலக்காக உரியவர்களிடம் திருப்பி ஒப்படைக்கலாமா என்பது குறித்து உயர் அதிகாரிகள் தான் முடிவெடுக்க வேண்டும்” எனக் கூறுகிறார் குமரவேல்.
ஆறடி உயர உண்டியலில் ஐபோன் தவறி விழுவதற்கு வாய்ப்பே இல்லை என்று கோவில் செயல் அலுவலர் கூறியது பற்றி தினேஷிடம் மீண்டும் தொடர்பு கொண்டு கேட்டபோது, “தவறுதலாக உள்ளே விழுந்துவிட்டது” என்று மட்டும் பதில் அளித்தார். மேலதிக கேள்விகளுக்குப் பதில் அளிக்க அவர் மறுத்துவிட்டார்.
தமிழ்நாடு அமைச்சர் கூறியது என்ன?
ஐபோன் விவகாரம் தொடர்பாக திருவள்ளூரில் செய்தியாளர்களிடம் பேசிய தமிழ்நாடு இந்து சமய அறநிலையத்துறை அமைச்சர் சேகர்பாபு, “அதுகுறித்து தீர விசாரித்த பிறகு முடிவுக்கு வருவோம்” என்றார்.
“உண்டியலில் எதாவது பொருள் விழுந்துவிட்டால் அது சுவாமியின் கணக்கில் வரவு வைப்பது வழக்கம். இதற்கு சட்ட ரீதியாக நிவாரணம் கொடுக்க முடியுமா என்பது குறித்து ஆராயப்படும்” என்றார் சேகர்பாபு.
–இது, பிபிசிக்காக கலெக்டிவ் நியூஸ்ரூம் வெளியீடு