இந்தியாவின் முக்கிய நாளிதழ்களில் வெளியான செய்திகள் சிலவற்றைத் தொகுத்து இங்கே வழங்கியுள்ளோம்.
கெட்டது நீங்கி நல்லது நடக்கும், தனது தொழில் வளர்ச்சி என்ற நம்பிக்கையில் மாந்திரீகத்தை நம்பி சென்ற அடகு கடை உரிமையாளர் ஒருவர் ஏமாற்றப்பட்டுத் தாக்கப்பட்டதாக தி டைம்ஸ் ஆப் இந்தியா செய்தி வெளியிட்டுள்ளது.
அடகு கடை உரிமையாளர் தியாகராஜன், திருச்சியைச் சேர்ந்த தன்னை மாந்திரீகர் என கூறிக்கொள்ளும் சிவா என்பவரை சமூக ஊடகம் மூலம் தொடர்புகொண்டதாக காவல்துறை கூறுகிறது. தொழில் வளர்ச்சிக்காகச் சிறப்புப் பூஜை செய்ய வேண்டும் எனத் தியாகராஜனை நம்ப வைத்த சிவா, அவரிடம் இருந்து 16 லட்ச ரூபாயை பறித்துள்ளார்.
கொடுக்கப்பட்ட வாக்குறுதி நிறைவேறாததால், தியாகராஜன் தனது பணத்தை திரும்பக் கேட்டார்.
பணத்தைத் திருப்பித் தருவதாகக் கூறி தியாகராஜனை பண்ணை வீட்டிற்குச் சிவா அழைத்துள்ளார். தியாகராஜன், தனது நண்பர்களுடன் அங்கு சென்றுள்ளார். அங்கிருந்த சிவா மற்றும் அவரது கூட்டாளிகள் தியாகராஜன் மற்றும் அவரது நண்பர்களைத் தாக்கி ₹3.7 லட்சம் மற்றும் மூன்று சவரன் செயினை பறித்து சென்றனர்.
தியாகராஜன் அளித்த புகாரின் பெயரில், குரோம்பேட்டை காவல் நிலையத்தின் தலைமைக் காவலரான குணசேகரன் உட்பட மூவரை காவல்துறையினர் கைது செய்துள்ளனர்.மேலும் சிவாவைத் தேடி வருகின்றனர் என அந்த செய்தி கூறுகிறது
மாணவி பாலியல் வன்கொடுமை வழக்கில் கைதான குணசேகரன் மீது குண்டர் சட்டம்
அண்ணா பல்கலைக்கழக மாணவி பாலியல் வன்கொடுமை வழக்கில் கைதான குணசேகரன் குண்டர் சட்டம் பாய்ந்தது என தினத்தந்தி செய்தி வெளியிட்டுள்ளது.
சென்னை அண்ணா பல்கலைக்கழக வளாகத்தில் மாணவி பாலியல் வன்கொடுமை செய்யப்பட்ட வழக்கில் ஞானசேகரன் என்பவரை காவல்துறையினர் கைது செய்தனர்.
தமிழ்நாடு முழுவதும் பெரும் அதிர்வலையை ஏற்படுத்திய இந்த சம்பவம் தொடர்பாக விசாரிக்க சிறப்பு புலனாய்வு குழுவை சென்னை உயர்நீதிமன்றம் அமைத்தது. 3 பெண் ஐ.பி.எஸ். அதிகாரிகள் அடங்கிய சிறப்பு புலனாய்வு குழு, ஞானசேகரன் வீட்டில் சில நாட்களுக்கு முன்பு சோதனை நடத்தியது.இந்த சோதனையில் சிக்கிய ஆவணங்களை அட்டை பெட்டிகளில் வைத்து அதிகாரிகள் எடுத்து சென்றனர்.
இந்த நிலையில், ஏற்கனவே பல குற்ற வழக்கு பின்னணியை கொண்ட ஞானசேகரனை, குண்டர் தடுப்பு சட்டத்தின் கீழ் சிறையில் அடைக்க வேண்டும் என்று சிறப்பு புலனாய்வு குழு அதிகாரிகள் சென்னை போலீஸ் கமிஷனர் அருணுக்கு பரிந்துரை செய்தனர். அதன்பேரில் அவர், ஞானசேகரனை குண்டர் தடுப்பு சட்டத்தின் கீழ் ஓராண்டு சிறையில் அடைப்பதற்கு உத்தரவிட்டு உள்ளார் என்கிறது தினத்தந்தி செய்தி.
அமலாக்கத்துறை சோதனை- அமைச்சர் துரைமுருகன் டெல்லி பயணம்
வேலூர் மற்றும் காட்பாடியில் தனக்கும் தனது மகனுக்கும் சொந்தமான இடங்களில் அமலாக்கத்துறை அதிகாரிகள் சோதனை நடத்திய நிலையில், அமைச்சர் துரைமுருகன் டெல்லி சென்றுள்ளார் என தினமணி செய்தி வெளியிட்டுள்ளது.
அவர் அரசு நிகழ்ச்சிகளில் கலந்துகொள்ள வரவில்லை என்றும், தனிப்பட்ட முறையில் வந்தார் என்றும் அரசு வட்டாரங்கள் தெரிவித்ததாக அந்த செய்தியில் குறிப்பிடப்பட்டுள்ளது.
கடந்த வெள்ளி மற்றும் சனி ஆகிய இரண்டு தினங்களாக அமைச்சர் துரைமுருகனின் வேலூர் வீடு, அவரது மகன் கதிர் ஆனந்துக்கு சொந்தமான இடங்கள் மற்றும் அவருக்கு நெருக்கமானவர்களின் வீடுகளில் அமலாக்கத்துறை அதிகாரிகள் சோதனை நடத்தினர். அதன் விவரம் இன்னும் வெளியாகவில்லை.
இந்தநிலையில் அமைச்சர் துரைமுருகன் சனிக்கிழமை இரவு சென்னையிலிருந்து புறப்பட்டு, டெல்லி சென்றார். அவருடன் நாடாளுமன்ற உறுப்பினர் ஜெகத்ரட்சகனும் சென்றுள்ளார். ஞாயிற்றுக்கிழமை இரவு இருவரும் சென்னை திரும்பியதாக அந்த செய்தி கூறுகிறது. எதற்காக இந்த பயணம் என்பது குறித்து அமைச்சர் தரப்பில் உறுதிப்படுத்தப்படவில்லை.
தமிழ்நாட்டில் 4.35 லட்சம் குழந்தைகளுக்கு உடல்நலக் குறைபாடுகள்
தமிழ்நாடு பொது சுகாதார இயக்குநரகம் (DPH- டிபிஎச்) கடந்த ஆண்டு நடத்திய பரிசோதனைகள் மூலம், 4.35 லட்சம் குழந்தைகள் வளர்ச்சி குறைபாடுகள், பிறப்பு குறைபாடுகள், மற்றும் நோய்களால் பாதிக்கப்பட்டுள்ளதாக கண்டறியப்பட்டுள்ளது என ‘தி இந்து’ ஆங்கில நாளிதழ் செய்தி வெளியிட்டுள்ளது.
டி.பி.எச் இயக்குநர் டி.எஸ்.செல்வநாயகம் சுகாதாரத் துறை அதிகாரிகளுக்கு எழுதிய கடிதத்தில், “1.14 லட்சம் குழந்தைகள் நிபுணத்துவ ஆலோசனைகளுக்காக மாவட்ட ஆரம்ப பயிற்சி மையங்களுக்கு அனுப்பப்பட்டனர், மீதமுள்ளவர்கள் ஆரம்ப சுகாதார நிலையங்களில் கவனிக்கப்பட்டனர்.” என்று கூறப்பட்டுள்ளது.
இந்த ஆய்விற்காக களப்பணியில் ஈடுபட்ட மாவட்ட சுகாதாரத்துறை அதிகாரிகள் மற்றும் ராஷ்டிரிய பால் ஸ்வஸ்திய கரியக்ரம் குழுவினரை செல்வவிநாயகம் பாராட்டியுள்ளார்.
அடுத்தகட்ட சோதனைகளுக்கான பயணத்தை திட்டமிடுமாறும், இது குறித்து பள்ளிக் கல்வித் துறைக்கு தெரிவிக்குமாறும் சுகாதாரத் துறை அதிகாரிகளுக்கு செல்வவிநாயகம் வலியுறுத்தியுள்ளார்.
இத்திட்டம் குறித்த விவரங்களை சுகாதார இயக்குநரக இணையதளத்தில் வெளியிட வேண்டும் என்றும் அறிவுறுத்தப்பட்டுள்ளதாக ‘தி இந்து’ ஆங்கில நாளிதழின் செய்தி தெரிவிக்கிறது.
தமிழகத்தில் ஜன.11 வரை மழைக்கு வாய்ப்பு
தமிழகத்தில் இன்று (ஜனவரி 6) முதல் 9ஆம் தேதி வரை ஓரிரு இடங்களிலும், 10, 11ஆம் தேதிகளில் கடலோர பகுதிகளில் பெரும்பாலான இடங்களிலும் லேசானது முதல் மிதமான மழைக்கு வாய்ப்புள்ளது என சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளதாக இந்து தமிழ் நாளிதழ் செய்தி வெளியிட்டுள்ளது.
“தமிழகம் நோக்கி வீசும் கிழக்கு திசை காற்றில் வேக மாறுபாடு நிலவுகிறது. இதன் காரணமாக கடலோர தமிழகத்தில் இன்று ஓரிரு இடங்களிலும், புதுச்சேரி, காரைக்கால் பகுதிகளிலும் லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும். உள் தமிழகத்தில் பொதுவாக வறண்ட வானிலை நிலவக்கூடும். நீலகிரி மாவட்டத்தில் இரவு நேரங்களில் ஓரிரு இடங்களில் உறைபனி நிலவ வாய்ப்புள்ளது.”
“நாளை (ஜனவரி 7) கடலோர தமிழகத்தில் ஓரிரு இடங்களிலும், 8ஆம் தேதி தமிழகத்தில் ஓரிரு இடங்களிலும், 9ஆம் தேதி ஒரு சில இடங்களிலும் லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும். 10, 11ஆம் தேதிகளில் கடலோர தமிழகத்தில் பெரும்பாலான இடங்களிலும், உள் தமிழகத்தில் ஒரு சில இடங்களிலும் லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும்” என சென்னை வானிலை ஆய்வு மைய செய்தி குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளதாக இந்து தமிழ் நாளிதழ் செய்தி வெளியிட்டுள்ளது.
‘மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் முதல் தலித் மாநில செயலாளர்’
விழுப்புரத்தில் ஞாயிற்றுக்கிழமை (ஜனவரி 5) அன்று நடைபெற்ற மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் 24-வது மாநில மாநாட்டில் கட்சியின் புதிய மாநிலச் செயலராக பெ. சண்முகம் தேர்வு செய்யப்பட்டுள்ளார் என்று தினமணி நாளிதழ் செய்தி வெளியிட்டுள்ளது.
மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் 24-வது மாநில மாநாடு விழுப்புரத்தில் வெள்ளிக்கிழமை (ஜனவரி 3) தொடங்கி நடைபெற்றது.
அதில், ‘தமிழ்நாடு விவசாய சங்கத்தின் மாநில தலைவராகவும், மார்க்சிஸ்ட் மத்திய குழு உறுப்பினராகவும் உள்ள பெ. சண்முகம், கட்சியின் புதிய மாநிலச் செயலராக தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளதாக, தற்போதைய மாநில செயலர் கே. பாலகிருஷ்ணன் அறிவித்தார். அவருக்கு கட்சியினர் வாழ்த்து தெரிவித்தனர்.
பெ. சண்முகம், தலித் சமுதாயத்தில் இருந்து மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மாநிலச் செயலராக தேர்ந்தெடுக்கப்பட்ட முதல் நபர் என்றும், வாச்சாத்தி வழக்கை முன்னின்று நடத்தி, தொடர்புடையவர்களை தண்டனை பெற்று தந்தவர் என்றும் தினமணி செய்தியில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
– இது, பிபிசிக்காக கலெக்டிவ் நியூஸ்ரூம் வெளியீடு