சென்னை ராயப்பேட்டை பகுதியில் வெறிநாய் கடித்த பிறகு சிகிச்சை பெற்றும், 40 நாட்களுக்குப் பிறகு நோய் தாக்கி ஒருவர் உயிரிழந்திருக்கிறார். இந்த விவகாரத்தில் என்ன நடந்தது? வெறிநாய்க் கடிக்கு தடுப்பூசிகளை எப்படி முறையாகச் செலுத்துவது?
ராயப்பேட்டை பகுதியைச் சேர்ந்தவர் ஏ. முகமது நஸ்ருதீன். இவர் ஆட்டோ ஓட்டுநராக பணியாற்றி வந்தார். இவரை கடந்த ஜூலை மாதம் 28-ஆம் தேதி மீர் சாகிப் பேட்டை மார்க்கெட் அருகே அவரது வலது காலில் வெறி நாய் ஒன்று கடித்திருக்கிறது.
இதையடுத்து அவர் ராயப்பேட்டையில் உள்ள அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்றார்.
இதற்கு ஒரு மாதத்திற்குப் பிறகு அவருக்கு மீண்டும் காய்ச்சல் ஏற்பட்டது. இதையடுத்து அவர் ராஜீவ்காந்தி அரசு தலைமை மருத்துவமனையில் சேர்க்கப்பட்டார். அங்கு அவருக்கு ரேபிஸ் தொற்று உறுதியானதை அடுத்து தனியறையில் வைத்து சிகிச்சையளிக்கப்பட்டு வந்தது. தொடர்ந்து சிகிச்சையளிக்கப்பட்டுவந்த நிலையிலும் அவர் செப்டம்பர் 14-ஆம் தேதியன்று உயிரிழந்தார்.
பட மூலாதாரம், Getty Images
படக்குறிப்பு, மருத்துவர்கள் பரிந்துரைத்த இடைவெளியில் தடுப்பூசிகளைப் செலுத்தியதாக குடும்பத்தினர் கூறுகின்றனர்.
“அவருக்கு நாய் கடிபட்ட உடன் அன்று மாலை ராயப்பேட்டை அரசு மருத்துவமனைக்கு அழைத்துச்சென்றோம். அவரது உடலில் இரண்டு பல் பதிந்திருந்தது. மருத்துவமனையில் காயத்தைச் சுற்றி ஊசி போட்டார்கள். முதல் ரேபிஸ் தடுப்பூசியும் போடப்பட்டது. அதற்குப் பிறகு அவர்கள் சொன்ன இடைவெளியில் தடுப்பூசிகளைப் போட்டுவந்தோம். நன்றாகக் குணமடைந்துதான் வந்தார்.” என்று அவருடைய மருமகள் ஹர்ஷத் நிஷா பிபிசியிடம் தெரிவித்தார்.
இந்த நிலையில், கடந்த வாரம் புதன்கிழமையிலிருந்து சிக்கல்கள் ஆரம்பித்ததாகவும் அவர் விவரித்தார்.
“முதலில் முதுகில் வலி ஏற்பட்டது. அடுத்த நாள் இடுப்பு போன்ற பகுதிகளில் வலி அதிகரித்தது. அரிப்பும் ஏற்பட்டது. ஒரு தனியார் மருத்துவமனையில் சிகிச்சை அளிக்கப்பட்டது. பிறகு காய்ச்சல் வந்தது.” எனக் கூறினார்.
பின் வெள்ளிக்கிழமையன்று ரேபிஸ் நோய்க்கான அறிகுறிகள் தென்பட்டது என்கிறார் அவர்.
“அவரால் தண்ணீர் குடிக்க முடியவில்லை. அன்று இரவு ராஜீவ்காந்தி அரசு மருத்துவமனையில் சேர்த்தோம். சில மணி நேரங்களில் சனிக்கிழமை அதிகாலை உயிரிழந்துவிட்டார்” என ஹர்ஷத் நிஷா விவரித்தார்.
முகமது நஸ்ருதீனைப் பொறுத்தவரை அவர், நாய் கடித்த பிறகு செலுத்திக்கொண்டிருக்க வேண்டிய எல்லா தடுப்பு ஊசிகளையும் முறையாகப் போட்டுக்கொண்டதாக அவருடைய குடும்பத்தினர் தெரிவிக்கின்றனர்.
இருந்தபோதும், அவருக்கு மரணம் நிகழ்ந்திருக்கிறது. இதில் எங்கே தவறு நடந்தது?
இந்த நிகழ்வு குறித்து விசாரணை நடத்தி வருவதாக தமிழக பொது சுகாதாரத் துறையின் இயக்குநர் டாக்டர் ஏ. சோமசுந்தரம் பிபிசியிடம் தெரிவித்தார்.
இது குறித்து பேசுகையில், “இந்த நிகழ்வு குறித்து விசாரணை நடத்தவருகிறோம். வெறிநாய்க் கடியைப் பொறுத்தவரை, அன்றைய தினமே முதல் ஊசியைப் போட வேண்டும். பிறகு நான்கு ஊசிகளைப் போட்டுக்கொள்ள வேண்டும். அவர்கள் அதனைச் சரியாகச் செய்ததாகச் சொல்கிறார்கள்.” என சோமசுந்தரம் தெரிவித்தார்.
தொடர்ந்து பேசிய அவர், “ஒவ்வொரு ஊசியும் எப்போது போடப்பட்டது என்பது குறித்து பரிசோதிக்க வேண்டும். ஏதாவது ஒரு நாள் தவறியிருக்கிறதா என்பதையும் பார்க்க வேண்டும். அவருக்கு வேறு ஏதாவது உடல் நலப் பிரச்னைகள் இருந்தனவா என்பதையும் அறிய வேண்டும்.” என்றார்.
“ஒருவேளை தடுப்பூசிகள் சரியாகப் போடப்பட்டிருந்தால் இப்படி நிகழ்வதற்கான வாய்ப்புகள் மிகக் குறைவு. இருந்தாலும் விசாரணையின் முடிவில்தான் விவரங்கள் தெரியவரும்” என பிபிசியிடம் கூறினார்.
பட மூலாதாரம், Getty Images
படக்குறிப்பு, தமிழ்நாட்டில் இந்தாண்டு இதுவரை ரேபிஸ் நோயால் 22 பேர் உயிரிழந்துள்ளனர்.
தமிழ்நாட்டில் 2025-ஆம் ஆண்டில் ரேபிஸ் நோயால் ஏற்பட்டிருக்கும் 22வது மரணம் இது.
ரேபிஸ் நோய்க்கான தடுப்பூசிகளைப் போட்ட பிறகும் நிகழ்ந்ததாகச் சொல்லப்படும் இந்த மரணம், இந்த தடுப்பூசிகளை எப்படிப் போட்டுக்கொள்ள வேண்டும், எந்தக் கால இடைவெளியில் போட்டுக்கொள்ள வேண்டும் என்பது குறித்தும் கவனம் செலுத்த வேண்டியதன் அவசியத்தைச் சுட்டிக்காட்டியிருக்கிறது.
நாய்க் கடித்த பின் எப்படி தடுப்பூசி போட்டுக்கொள்ள வேண்டும்?
ஒருவரை நாய் கடித்த பிறகு, சரியான முறையில் சிகிச்சை மேற்கொண்டால் ரேபிஸ் நோய் தாக்குதலில் இருந்து முழுமையாகத் தப்பலாம். அதில் தவறுகள் நிகழும்பட்சத்தில் நோய் தாக்கும் வாய்ப்புகள் ஏற்படுகிறது என்கிறார் ரேபிஸ் தடுப்பு மருந்து உற்பத்தியில் முக்கியப் பங்கு வகிக்கும் குன்னூரில் உள்ள பாஸ்டர் இன்ஸ்ட்டிடியூட் ஆஃப் இந்தியாவின் முன்னாள் இயக்குநரான பி. சேகர்.
நாய்க் கடிகளின் வகை, சிகிச்சை முறை என ஒவ்வொன்றிலும் கவனம் செலுத்த வேண்டும் என்கிறார் அவர்.
இது குறித்து பேசிய அவர், “பொதுவாக நாய்களின் தாக்குதலை மூன்று வகையாகப் பிரிக்க வேண்டும். முதல் வகை வெறும் நக்குதல். நாய்களின் எச்சிலில்தான் ரேபிஸ் வைரஸ் இருக்கும் என்றாலும், உடலில் திறந்தவெளி காயங்கள் ஏதும் இல்லாத நிலையில், நாய்கள் நக்குவதற்கு சிகிச்சை தேவையில்லை.” என்றார்.
இரண்டாவது ரத்தம் இல்லாத கீறல். இதற்கு கட்டாயம் ரேபிஸ் தடுப்பூசி போட வேண்டும் எனக் கூறும் அவர், “மூன்றாவது, கடுமையான காயங்கள். இதற்கு ரேபிஸ் தடுப்பூசி செலுத்துவதோடு, இம்யூனோகுளோபுலின்களையும் செலுத்த வேண்டும்” என்கிறார்.
பட மூலாதாரம், Getty Images
படக்குறிப்பு, நாய் கடித்த உடன், காயத்தை ஓடும் நீரில் கழுவ வேண்டும் என மருத்துவர்கள் அறிவுறுத்தல்.
மேலும் நாய் கடித்ததும் செய்யவேண்டிய முதலுதவி குறித்தும் விளக்கினார் பி. சேகர்.
நாய் கடித்த உடன், காயத்தை ஓடும் நீரில் கழுவிவிட்டு உடனடியாக மருத்துவமனைக்கு செல்ல வேண்டும் என்றார் அவர்
மேலும், “ரேபிஸ் தடுப்பூசியைப் பொறுத்தவரை, தோலுக்கு உள்ளே போடுவதாக இருந்தால் கடித்த தினம், மூன்றாவது நாள், ஏழாவது நாள், 28வது நாள் என நான்கு ஊசிகளைச் செலுத்த வேண்டும். தசைக்குள் செலுத்துவதாக இருந்தால் கடித்த தினம், மூன்றாவது நாள், ஏழாவது நாள், 14வது நாள், 28வது நாள் என ஐந்து ஊசிகளைச் செலுத்த வேண்டும்.” என்றார்.
“மூன்றாவது வகை காயம் அதாவது மிகப் பெரிய காயமாக இருந்தால், கடிபட்ட இடத்தில் இம்யூனோகுளோபுலின்களைச் செலுத்த வேண்டும். இதை முதல் நாளே செலுத்த வேண்டும். இதற்குப் பிறகு தொடர்ச்சியாக ரேபிஸ் தடுப்பூசிகளைப் போட வேண்டும். இவற்றையெல்லாம் சரியாகச் செய்தால்தான் வெறிநாய்க் கடியால் ஏற்படும் ரேபிஸைத் தடுக்க முடியும்” என்கிறார் பி. சேகர்.
ரேபிஸ் வைரஸைப் பொறுத்தவரை, மனித உடலில் ஒரு மணி நேரத்தில் முன்று மில்லி மீட்டர் தூரத்திற்கு நகரும் தன்மையுடையது. அந்த வைரஸ் மத்திய நரம்பு மண்டலத்தைச் சென்றடைவதற்குள் இந்த தடுப்பு நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டும் சேகர். தெரிவித்தார்.
மேலும், எல்லா நாய் கடி சம்பவங்களையும் வெறி நாய் கடி சம்பவமாகவே அணுக வேண்டும் என்கிறார்.
தமிழ்நாட்டின் பொது சுகாதாரத் துறை அளிக்கும் தகவல்களின்படி, மாநிலத்தில் 2024-ஆம் ஆண்டில் மட்டும் ரேபிஸ் நோயால் 43 பேர் இறந்துள்ளனர். 2023-ஆம் ஆண்டில் 121 பேர் இறந்துள்ளனர்.