சென்னை: சென்னை எழும்பூர் – திருநெல்வேலி இடையே இயக்கப்படும் வந்தே பாரத் ரயிலில் 8 பெட்டிகளில் இருந்து 16 பெட்டிகளாக மாற்ற ரயில்வே வாரியம் ஒப்புதல் அளித்துள்ளது. இந்த ரயிலில் இரு மார்க்கத்திலும் வரும் 11-ம் தேதி முதல் 16 பெட்டிகளாக இணைத்து இயக்கப்பட உள்ளன.
தென் மாவட்டங்களில் இருந்து சென்னைக்கு பகல் நேரத்தில் சென்று திரும்பும் விதமாக, வந்தே பாரத் ரயில் சேவை கடந்த 2023-ம் ஆண்டு செப்.24-ம் தேதி தொடங்கப்பட்டது. இந்த ரயில் திருநெல்வேலியில் இருந்து காலை 6 மணிக்கு புறப்பட்டு அதேநாள் மதியம் 1.50 மணிக்கு சென்னை எழும்பூர் வந்தடைகிறது. மறுமார்க்கமாக, எழும்பூரில் இருந்து பிற்பகல் 2.50 மணிக்கு புறப்பட்டு அதேநாள் இரவு 10.40 மணிக்கு திருநெல்வேலியை அடைகிறது.
இந்த ரயிலில் 7 ஏசி சேர் கார் பெட்டிகளும், ஒரு எக்ஸிகியூட்டிவ் சேர் கார் பெட்டியும் என மொத்தம் 8 பெட்டிகள் இணைக்கப்பட்டுள்ளன. ரயில் சேவை தொடங்கியது முதல் இந்த ரயிலுக்கு பயணிகள் மத்தியில் நல்ல வரவேற்பு கிடைத்து வருகிறது. எனவே, இந்த ரயிலில் கூடுதல் பெட்டிகள் இணைக்க பயணிகள் கோரிக்கை விடுத்து வந்தனர். இந்நிலையில், இந்த ரயிலில் 8 பெட்டிகளில் இருந்து 16 பெட்டிகளாக மாற்ற ரயில்வே வாரியம் ஒப்புதல் அளித்துள்ளது.
இது குறித்து தெற்கு ரயில்வே அதிகாரிகள் கூறும்போது, “எழும்பூர் – திருநெல்வேலி வந்தே பாரத் ரயிலில், பயணிகள் தேவை பல மடங்கு அதிகரித்து உள்ளது. எனவே, இந்த ரயிலில் இரு மார்க்கத்திலும், வரும் 11-ம் தேதி முதல் 16 பெட்டிகளாக இணைத்து இயக்கப்பட உள்ளன. இதனால், கூடுதல் பயணிகள் செல்ல முடியும். இதுபோல, கேரள மாநிலத்தில் திருவனந்தபுரம் - காசர்கோடு இடையே இயக்கப்படும் வந்தே பாரத் ரயிலில் 16 பெட்டிகளில் இருந்து 20 பெட்டிகளாக அதிகரித்து, வரும் 10-ம் தேதி முதல் இயக்கப்படும்” என்று அவர்கள் கூறினர்.