சென்னை: பாதாள சாக்கடை குழியில் தவறி விழுந்த சிறுவன் நல்வாய்ப்பாக உயிர் தப்பினார். சென்னை அமைந்தகரை, வெள்ளாளர் தெருவைச் சேர்ந்தவர் ராஜன் (12). அதே பகுதியில் உள்ள தனியார் பள்ளியில் 7-ம் வகுப்பு படிக்கிறார். இச்சிறுவன் கடந்த 3 நாட்களுக்கு முன் விளையாடுவதற்காக, வெள்ளாளர் தெரு வழியாக நண்பர்களுடன் கிரிக்கெட் பேட்டுடன் நடந்து சென்று கொண்டிருந்தார்.
அப்போது, சாலையின் நடுவே, சீரமைப்பு பணிக்காக திறந்து வைக்கப்பட்டிருந்த பாதாள சாக்கடை குழியில் எதிர்பாராத விதமாக தவறி விழுந்தார். உடனிருந்த நண்பர்கள் கூச்சலிடவே, அங்கிருந்தோர் விரைந்து ஏணி மூலம் சிறுவனை மீட்டனர். இந்த விபத்தில் சிறுவனின் காலில் காயம் ஏற்பட்டது. கழிவுநீர் இணைப்பு வழங்காமல் இருந்ததால் அசம்பாவிதம் எதும் நடக்கவில்லை.
இந்நிலையில், சிறுவன் பாதாள சாக்கடை குழியில் விழுந்த சிசிடிவி காட்சிகள் நேற்று சமூக வலைதளங்களில் வைரலாக பரவியது. இதையடுத்து, இந்த விவகாரம் குறித்து போலீஸார் விசாரணை நடத்தி வருகின்றனர்.