பட மூலாதாரம், Getty Images
-
- எழுதியவர், மோகன்
- பதவி, பிபிசி தமிழ்
-
சென்னையைச் சேர்ந்த 20 வயதான முகுந்தன் மொட்டை மாடியில் செல்போன் பேசிக் கொண்டிருந்திருக்கிறார். அப்போது மின்னல் தாக்கியத்தில் உயிரிழந்துள்ளார். அவரின் செல்போனும் எரிந்த நிலையில் மீட்கப்பட்டதாக காவல்துறை தெரிவித்துள்ளது.
முகப்பேரைச் சேர்ந்த மூன்றாம் ஆண்டு கல்லூரி மாணவரான முகுந்தன் திங்கட்கிழமை திருமங்கலத்தில் உள்ள அவரது நண்பர் தனுஷின் வீட்டிற்குச் சென்றுள்ளார்.
நண்பர்கள் அவரது வீட்டின் மொட்டை மாடியில் நேரத்தை செலவிட்டுக் கொண்டிருந்தனர். அப்போது முகுந்தன் செல்போனில் பேசிக் கொண்டிருக்கையில் மின்னல் தாக்கியதால் உயிரிழந்தார்.
தமிழ்நாட்டில் பருவமழை நெருங்கி வரும் சூழலில் மின்னல் தாக்கி உயிரிழப்பு ஏற்படும் சம்பவங்கள் தொடர்ந்து பதிவாகி வருகின்றன.
இந்த சம்பவத்தை ஒட்டி மின்னல் நேரங்களில் செய்ய வேண்டியது என்ன, மின்னனு சாதனங்களைப் பயன்படுத்தலாமா என்கிற கேள்வியும் எழுந்துள்ளது.
பொதுவெளிகளில் தான் மின்னல் மரணங்கள் நிகழும் என்கிற கருத்து இருந்தாலும் வீடுகளில் இருக்கும்போது மின்னல் ஏற்படும் சாத்தியங்கள் இருப்பதாக வல்லுநர்கள் தெரிவிக்கின்றனர்.
சமீபத்தில் மின்னல் தாக்கி ஏற்பட்ட உயிரிழப்பு சம்பவங்கள்
ஆகஸ்ட் 23: ராமநாதபுரம் மாவட்டம் பரமக்குடியைச் சேர்ந்த சகோதரிகளான அஸ்பியா பானு (13 வயது) மற்றும் சபிக்கா பானு (9 வயது) விடுமுறை தினத்தன்று வெளிவே சென்றுள்ளார். அப்போது திடீரென மழை பெய்யவே மரத்தின் கீழ் ஒதுங்கியுள்ளனர். அப்போது மின்னல் தாக்கி இருவரும் சம்பவம் இடத்திலே உயிரிழந்தனர்.
செப்டம்பர் 18: ராமநாதபுரம் பரமக்குடியைச் சேர்ந்த கட்டடத் தொழிலாளியான ரமேஷ் மழைக்கு மரத்தின் கீழ் ஒதுங்கியபோது மின்னல் தாக்கி உயிரிழந்தார்.
செப்டம்பர் 23: மயிலாடுதுறை மாவட்டம் சீர்காழியைச் சேர்ந்தவர் கொளஞ்சியம்மாள். விவசாயியான இவர் மேய்ச்சலுக்கு சென்ற ஆடுகளை கவனிக்கச் சென்றபோது மின்னல் தாக்கியதில் உயிரிழந்தார்.
மின்னல் தாக்கினால் மிகக் கடுமையான காயங்கள் மற்றும் மரணம் கூட ஏற்படலாம் என தேசிய பேரிடர் மேலாண்மை ஆணையம் (என்.டி.எம்.ஏ) தெரிவிக்கிறது.
இந்தியாவில் கடந்த 2023-ஆம் ஆண்டு மட்டும் மின்னல் தாக்கியதில் 2,560 பேர் உயிரிழந்தனர். இயற்கை சீற்றங்களால் உயிரிழந்தவர்களில் கிட்டத்தட்ட 40% பேர் மின்னல் தாக்கியதால் உயிரிழந்ததாக தேசிய குற்ற ஆவணக் காப்பகத்தின் தரவுகள் தெரிவிக்கின்றன.
பட மூலாதாரம், Getty Images
கடலை ஒட்டிய பகுதிகளில் தான் மின்னல் பாதிப்பு அதிகமாக இருக்கும் என்கிறார் சென்னை வானிலை ஆய்வு மையத்தின் முன்னாள் இயக்குநரான ரமணன்.
மின்னல்கள் 7000 டிகிரி வரை வெப்பத்தை உருவாக்கக்கூடும் என்று கூறும் அவர் திறந்தவெளிகளில் தான் மின்னல் தாக்குதவதற்கான ஆபத்துகள் அதிகம் இருக்கிறது எனக் குறிப்பிடுகிறார்.
“மின்னல் மற்றும் மழை பெய்கிறபோது திறந்தவெளிகளில் இருக்கக்கூடாது. குறிப்பாக ஒற்றை மரத்தின் கீழ் நிற்கக்கூடாது. நிறைய மரங்கள் இருக்கும் இடங்களில் உயரமான மரங்களின் கீழ் நிற்கக்கூடாது. அதே போல ஈரமான சுவர்களின் மீது சாய்ந்து நிற்கக்கூடாது. ஈரம் மூலமாகவும் மின்சாரம் கடத்தப்படுவதற்கு வாய்ப்புண்டு.” என்று தெரிவித்தார் ரமணன்.
அதே வேளையில் வீடுகளில் இருக்கிறபோதும் மின்னல் தாக்கும் வாய்ப்பு இருப்பதால் கதவு மற்றும் ஜன்னல்களை மூடி வைக்க வேண்டும் எனவும் குறிப்பிட்டார்.
மலைப்பகுதிகளில் நேரடி மின்னல் தாக்குதல் நிகழும் வாய்ப்புகள் அதிகம் என்கிறார் பொது மருத்துவரும் எஸ்.ஆர்.எம் குளோபல் மருத்துவமனையின் மூத்த ஆலோசகருமான ஆர்.நந்தகுமார்.
பொதுவெளிகளில் தான் மின்னல் மரணங்கள் நிகழும் என்கிற கருத்து இருந்தாலும் வீடுகளில் இருக்கும்போது மின்னல் ஏற்படும் சாத்தியங்கள் இருப்பதாக வல்லுநர்கள் தெரிவிக்கின்றனர்.
மின்னல்கள் தாக்குவது நான்கு விதங்களில் நடக்கும் என்று விவரிக்கிறார்.
- நேரடியாக ஒருவர் மீது மின்னல் தாக்குவது
- மரம் அல்லது ஒரு சுவர் மீது மின்னல்பட்டு அருகில் இருப்பவரை தாக்குவது
- மின்னல் தாக்கிய இடத்திலிருந்து நிலத்தின் வழியாக அருகில் இருப்பவர்களை பாதிப்பது.
- மின்னல் தாக்கிய இடத்தில் உலோகங்களுடன் தொடர்பு கொள்வதன் மூலம் பாதிப்பது
மின்னணு சாதனங்களை மின்னல் தாக்குமா?
செல்போன் உள்ளிட்ட மின்னணு சாதனங்களை இடி, மின்னல் சமயங்களில் பயன்படுத்தலாமா என்பது தொடர்பான கேள்விகளும் இதனையொட்டி எழுகின்றன. இதற்கான விளக்கத்தை பிபிசியிடம் முன்வைத்தார் விஞ்ஞான் பிரசார் அமைப்பின் முன்னாள் முதுநிலை விஞ்ஞானியும் தற்போது மொஹாலியில் உள்ள இந்திய அறிவியல் கல்வி ஆராய்ச்சி நிறுவனத்தில் பேராசிரியராகவும் பணியாற்றும் த.வி. வெங்கடேஸ்வரன்.
“உராய்வினால் மின்னல் ஏற்படுகிறபோது நிலையான மின்சாரம் (static electricity) இறங்குவதற்கான ஒரு தளம் தேவைப்படுகிறது. அவை ஒன்று நிலத்தில் இறங்கும் அல்லது துருதுருத்திக் கொண்டிருக்கும் கம்பி போன்ற உலோகங்களில் இறங்கும். நாம் தரையில் நிற்கிறபோது நமது காலுக்கு அடியில் ஈரம் இருந்தாலும் அங்கு இறங்கும். அதனால் தான் பொதுவெளிகளில் இருப்பதை தவிர்க்குமாறு அறிவுறுத்தப்படுகிறது.”
“மின்னல் என்பது மின்னணு சாதனங்களில் இறங்காது. அதனால் மின்னல் தாக்குதலால் நமது கைகளில் அல்லது பயன்பாட்டில் இருக்கும் மின்னணு சாதனங்களுக்கு எந்த பாதிப்பும் ஏற்படாது. வீடுகளில் இருக்கின்றபோது சார்ஜிங்கில் உள்ள செல்போனை பயன்படுத்தக்கூடாது. வெளியிலும் பாதுகாப்பான இடத்தில் இருந்தால் செல்போன் பயன்படுத்துவதில் எந்த ஆபத்தும் இல்லை.” எனத் தெரிவித்தார்.
எனவே மின்னணு சாதனங்களை பயன்படுத்தவது பிரச்னை இல்லை. அவற்றை எங்கிருந்து எப்படி பயன்படுத்தப்படுகின்றன என்பதைப் பொறுத்தே மின்னல் ஆபத்து உள்ளது.
இடி, மின்னல் சமயத்தில் என்ன செய்ய வேண்டும்?
இடி மற்றும் மின்னல் ஏற்படுகிறபோது மேற்கொள்ள வேண்டிய வழிகாட்டுதல்களையும் தேசிய பேரிடர் மேலாண்மை ஆணையம் (என்.எம்.டி.ஏ) வழங்கியுள்ளது.
வீட்டில் இருப்பவர்கள் என்ன செய்ய வேண்டும்?
- மொட்டை மாடி மற்றும் பால்கனிக்குச் செல்வதை தவிர்க்க வேண்டும்.
- கதவுகள் மற்றும் ஜன்னல்களிலிருந்து விலகி இருக்க வேண்டும்
- குழாய்களில் மின்சாரம் கடத்தப்பட வாய்ப்பு இருப்பதால் அவற்றுடனான தொடர்பை தவிர்க்க வேண்டும்
- குளிக்கவோ, கை கழுவவோ, பாத்திரங்களை சுத்தம் செய்யவோ கூடாது
- லேண்ட்லைன் அலைபேசிகளைப் பயன்படுத்தக்கூடாது.
- சார்ஜிங்கில் இல்லாத திறன்பேசி, டேப்லட் போன்ற மின்னணு சாதனங்களை வீடுகளில் பயன்படுத்தலாம்.
வெளியில் இருப்பவர்கள் என்ன செய்ய வேண்டும்?
- முழுவதுமாக மூடப்பட்ட கட்டடங்கள் அல்லது காருக்குள் செல்ல வேண்டும்
- திறந்தவெளி வாகனங்களில் இருக்கக்கூடாது
- தகரத்தால் ஆன கூடாரங்கள், திறந்தவெளி வாகன நிறுத்தம், கட்டுமானத்தின் கீழ் உள்ள கட்டிடங்கள் ஆகிய இடங்களை தவிர்க்க வேண்டும்
- மறைவான இடங்களில் எங்கும் ஒதுங்க முடியவில்லையென்றால் நிலத்தில் கால்கள் இரண்டையும் அருகருகே வைத்து காதுகளை அடைத்துக் கொண்டு குனிய வேண்டும்
- நிலத்தில் படுப்பதை தவிர்க்க வேண்டும்
- நீர்நிலைகளிலிருந்து உடனடியாக வெளியேற வேண்டும்.
பட மூலாதாரம், Getty Images
மின்னல் தாக்குதலால் ஏற்படும் பாதிப்புகள் என்ன?
உயிரிழப்பைத் தாண்டி மின்னல் தாக்குவதால் நீண்ட கால காயங்கள் மற்றும் குறைபாடு ஏற்படலாம் எனவும் என்.டி.எம்.ஏ தெரிவிக்கிறது.
மின்னல் தாக்குதலில் வெளிப்புற காயங்கள், உட்புற காயங்கள் இரண்டு வகைகளாகவும் பாதிப்புகள் இருக்கும் என்கிறார் நந்தகுமார் “தோல், தசை தொடங்கி அனைத்து உறுப்புகளையும் மின்னல் தாக்குதல் பாதிக்கும். ஒரு தீக்காயம் ஏற்பட்டால் என்ன பாதிப்புகள் எல்லாம் நிகழுமோ அவை அனைத்தும் உருவாகும். தசைகளை கடுமையாக பாதிக்கும்.” என்றார்.
“பார்வை மற்றும் செவித் திறன் குறைபாடு, மூச்சுத் திணறல், சீரற்ற இதய துடிப்பு, நெஞ்சு வலி, தலைவலி, தூங்குவதில் பிரச்னை, தலைசுற்றல், தசை பிடிப்பு மற்றும் உடல் சோர்வு ஏற்படும்.” என்றும் குறிப்பிட்டார்.
மின்னல் தாக்குவதில் மூளை மற்றும் இதயம் சார்ந்த பாதிப்புகள் தான் அதிகம் நிகழ்வதாகக் குறிப்பிடுகிறார் நந்தகுமார். “மிக தீவிரமாக தாக்கினால் மூளைச் சாவு அடைவதற்கும் வாய்ப்புகள் உண்டு. காயமடைபவர்களுக்கு மறதி போன்ற நீண்டகால சிக்கல்கள் ஏற்படும்.”
“இதயத்தில் ரத்த அழுத்தம் கடுமையாகப் பாதிக்கப்படும். உடனடியாக மாரடைப்பு ஏற்படுவதற்கும் ரத்த குழாய்கள் பாதிக்கப்பட வாய்ப்புண்டு. இதனால் தான் மின்னல் தாக்குதலில் உயிர் பிழைப்பவர்கள் விகிதம் மிக குறைவாக இருக்கிறது.” என்றார்.
மின்னல் தாக்கியவர்களுக்கு வழங்க வேண்டிய முதலுதவிகளையும் என்.டி.எம்.ஏ பட்டியலிட்டுள்ளது. அவை,
- மின்னல் தாக்கியவருக்கு மூச்சு இல்லையென்றால் மாரடைப்பு ஏற்பட்டிருக்கும். அதனால் அவசர உதவி கிடைக்கும் வரை பாதிக்கப்பட்டவருக்கு சி.பி.ஆர் வழங்க வேண்டும்.
- மின்னல் தாக்கியவருக்கு நினைவிருந்தால், அவரை தரையில் படுக்க வைத்து காலை உயரமான இடத்தில் வைக்க வேண்டும்.
– இது, பிபிசிக்காக கலெக்டிவ் நியூஸ்ரூம் வெளியீடு