மழை தொடர்பான இந்தச் செய்தி தொடர்ந்து புதுப்பிக்கப்பட்டு வருகிறது.
சென்னை மற்றும் அதன் புறநகர்ப் பகுதியில் இடியுடன் கூடிய கனமழை பெய்து வருகிறது.
காலையில் வெயிலுடன் தொடங்கிய இன்றைய தினத்தில், 10 மணி முதல் சட்டென்று குளிர்ந்த வானிலை நிலவத் தொடங்கியது.
கடந்த சில நாட்களாக சென்னையில் இரவு நேரங்களில் மழை பெய்து வந்தது. இந்நிலையில், நேற்று மாலை சென்னை மற்றும் புறநகர்ப் பகுதிகளில் மழை கொட்டித்தீர்த்தது.
இதையடுத்து, இன்று காலையில் தூரலுடன் தொடங்கிய மழை சற்று நேரத்தில் கனமழையாக வேகமெடுத்தது.
அண்ணா நகர், பாடி, வளசரவாக்கம் உள்ளிட்ட பகுதிகளில் ஒரு மணிநேரத்தில் 10செ.மீ மழை பெய்துள்ளதாக வானிலை ஆய்வு மைய தகவல்கள் கூறுகின்றன.
அண்ணா மேம்பாலத்தின் கீழ், கனமழை காரணமாக மழைநீர் சூழ்ந்து, வாகனங்கள் செல்வது சிரமமாகியுள்ளது. சென்னையின் பல்வேறு பகுதிகளில் சுரங்கப் பாதைகளில் மழைநீர் நிரம்பியிருந்தது.
கனமழை காரணமாக சென்னையின் பல்வேறு பகுதிகளில் கடுமையான போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டுள்ளது.
வானிலை ஆய்வு மையம் கூறியது என்ன?
தமிழ்நாடு வானிலை ஆய்வு மையத் தகவலின்படி, மதியம் 12 மணி முதல் 1 மணிவரை அண்ணா நகர் மேற்கில் 9 செ.மீ மழை பெய்துள்ளது. புதிய மணலி டவுன், கொளத்தூர், பெரம்பூர், அமைந்தகரை ஆகிய பகுதிகளில் 6செ.மீ மழை பதிவாகியுள்ளது.
ஆனால், கடலோர தமிழகத்தில் ஒரு சில இடங்களிலும், தமிழகத்தின் உள் மாவட்டங்களிலும் ஓரிரு இடங்களில் இடி, மின்னலுடன் கூடிய மிதமான மழை பெய்ய வாய்ப்புள்ளதாக வானிலை ஆய்வு மையம் முன்பு தெரிவித்திருந்தது.
இந்நிலையில், தற்போது வெளியிட்டுள்ள அறிக்கையில், சென்னை, திருவள்ளூர், காஞ்சிபுரம், செங்கல்பட்டு, கடலூர், மயிலாடுதுறை, நாகப்பட்டினம், புதுக்கோட்டை, தஞ்சாவூர், சிவகங்கை, ராமநாதபுரம் மாவட்டங்கள் மற்றும் காரைக்காலின் ஓரிரு இடங்களில் கனமழைக்கு வாய்ப்புள்ளதாகத் தெரிவித்துள்ளது.
மேலும், நவம்பர் 1-ம் தேதி, நீலகிரி, கோவை, திருப்பூர், ஈரோடு, கிருஷ்ணகிரி, தருமபுரி, சேலம், நாமக்கல், கரூர், திருச்சிராப்பள்ளி, தேனி, திண்டுக்கல், தென்காசி, மதுரை, விருதுநகர், புதுக்கோட்டை, சிவகங்கை மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் கனமழை பெய்ய வாய்ப்புள்ளதாகவும் வானிலை ஆய்வு மையம் கூறியுள்ளது.
அதோடு, நவம்பர் 2-ம் தேதியன்று, நீலகிரி, கோவை, திருப்பூர், ஈரோடு, தேனி, திண்டுக்கல், தென்காசி, திருநெல்வேலி, கன்னியாகுமரி, மதுரை, விருதுநகர் ஆகிய மாவட்டங்களில் கனமழை பெய்ய வாய்ப்புள்ளதாகவும் தெரிவித்துள்ளது.
இதற்கிடையே, சென்னையில் இரண்டு நாட்களுக்கு ஒரு சில இடங்களில் மிதமான மழை பெய்யக்கூடும் என்றும் தீபாவளி தினத்தன்று வானம் ஓரளவு மேகமூட்டத்துடன் காணப்படும் எனவும் வானிலை ஆய்வு மையம் நேற்று தெரிவித்திருந்தது. இந்நிலையில், தற்போது கனமழை பெய்துள்ளது.
இதுகுறித்துப் பேசிய தனியார் வானிலை ஆய்வாளரான பிரதீப் ஜான், “இன்று பெய்த கனமழை கணிக்க முடியாத ஒன்று” எனக் கூறினார்.
திடீர் மழைக்கு என்ன காரணம்?
பிபிசி தமிழிடம் பேசிய பிரதீப் ஜான், கிழக்கு திசையில் இருந்து வந்த மேகங்கள் காரணமாக மழை பெய்து வருவதாகவும், காற்றின் திசைவேக மாறுபாடு காரணமாகப் பெய்த இந்தத் திடீர் மழையைக் கணிக்க முடியவில்லை எனவும் கூறினார்.
“இதை முன்கூட்டியே கணிக்க முடியவில்லை. அதிலும், சென்னை அண்ணா நகர் மேற்குப் பகுதியில் 1 மணிநேரத்திற்கும் குறைவான நேரத்தில் 100மி.மீ அளவுக்கு மழை பெய்துள்ளதை எதிர்பார்க்கவில்லை,” என்று கூறினார்.
மேலும், “கொளத்தூர், அம்பத்தூர், கொரட்டூர், முகப்பேர், பாடி, வளசரவாக்கம் ஆகிய பகுதிகளில் குறுகிய காலத்தில் கனமழை பெய்துள்ளது.” இது எதிர்பாராத ஒன்று என்கிறார் பிரதீப் ஜான்.