சாத்தூர்: சென்னை மாநகராட்சி முழுவதும் போலி வாக்காளர்களால் மட்டுமே திமுக வெற்றி பெறுகிறது என்று அதிமுக பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிசாமி குற்றம்சாட்டியுள்ளார்.
அதிமுக பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிசாமி தனது ‘மக்களைக் காப்போம், தமிழகத்தை மீட்போம்’ பிரச்சாரப் பயணத்தில் இன்று சாத்தூர் பேருந்து நிறுத்தம் அருகே பொதுமக்கள் மத்தியில் பேசியது: “திமுக ஆட்சி பொறுப்பேற்று 50 மாதங்களை கடந்துள்ளது. இந்த காலக்கட்டத்தில் சொல்லி கொள்ளும் அளவுக்கு உருப்படியான திட்டங்கள் எதுவும் செய்யவில்லை. ஆனால் தமிழகம் வளர்ந்துவிட்டது என்பது போன்ற தோற்றத்தை திமுகவும், அதன் கூட்டணி கட்சிகளும் உருவாக்குகிறார்கள்.
இன்று வாக்காளர் பட்டியல் திருத்தத்துக்கு இபிஎஸ் வாய்த்திறக்காதது ஏன் என்று துரைமுருகன் கேள்வி கேட்கிறார். 86 வயதில் பொய்யான அறிக்கை வெளியிடுகிறார். இப்போது ஆட்சியில் இருப்பது திமுகதானே… அவர்களிடம் தானே அதிகாரம் இருக்கிறது. ஸ்டாலினுக்குக் கீழே தானே அதிகாரிகள் உள்ளனர். ஸ்டாலின் உத்தரவின்பேரில், அமைச்சரின் கட்டுப்பாட்டில் தானே அவர்கள் செயல்படுகின்றனர். வாக்காளர் பட்டியலில் பெயர் சேர்த்தல், நீக்கம் போன்றவை மாவட்ட ஆட்சியரின் பணி. அதில் இப்போது அதிமுக என்ன செய்ய முடியும்?
அதிமுக, பாஜக கூட்டணி வைத்ததும் திமுகவுக்குப் பயம் வந்துவிட்டது. அவர்களுக்கு வெற்றி பெற முடியாது என்று எண்ணம் வந்துவிட்டது. அதனால் தான் மடைமாற்றம் செய்கிறார். துரைமுருகன் அவர்களே, ஆட்சி உங்களிடம் உள்ளது, நீங்கள்தான் போலி வாக்காளர்களை சேர்க்கிறீர்கள். உண்மையிலேயே தைரியம் இருந்தால் நான் கேட்பதற்குப் பதில் சொல்லுங்கள். அவர் வயதில் மூத்தவர் என்பதால் மதிக்கிறோம். அதேநேரம், தவறான தகவல் வெளியிட்டால் நிச்சயம் கண்டிப்போம்.
சென்னை மாநகராட்சியில் ஆர்.கே.நகர் தொகுதியில் 27,779 வாக்கு நீக்கப்பட்டது. நீதிமன்றம் நாடி, மாவட்டச் செயலாளர்கள் புகார் கொடுத்தோம், அதையும் கண்டுகொள்ளவில்லை. போலி வாக்காளர்களை நீக்கவில்லை. உடனே நீதிமன்றம் சென்று ஆதாரத்தோடு வாதாடி இப்போது நீக்க செய்துள்ளோம். ஒரு தொகுதியில் 27,779 பேர் என்றால், இந்த ஆட்சியில் எத்தனை போலி வாக்காளர்கள் என்பதை எண்ணிப் பாருங்கள்.
பெரம்பூர் தொகுதியில் 12,085 வாக்காளர்கள் முறைகேடாக சேர்க்கப்பட்டதாக நாங்கள் கொடுத்த புகார் விசாரணையில் உள்ளது. தி.நகர் தொகுதியில் பல்லாயிரக்கணக்கான போலி வாக்காளர்கள் சேர்க்கப்பட்டுள்ளதாக புகார் கொடுத்திருக்கிறோம்.
சென்னை மாநகராட்சி முழுவதும் திமுக போலி வாக்காளர்களால் மட்டுமே வெற்றி பெறுகிறது. இது உண்மை. ஆதாரபூர்வமாக நீதிமன்ற உத்தரவின் பேரில் சம்பந்தபட்ட அதிகாரிகள் வீடு வீடாகச் சென்று போலி வாக்காளர்களை நீக்கியுள்ளனர். இது திமுகவின் பித்தலாட்டம் தானே? திமுக மக்களின் செல்வாக்கை இழந்துவிட்டது. அதனால் 2026 தேர்தலில் திமுக கூட்டணி படுதோல்வி அடையும்.
சென்னை மாநகராட்சித் தேர்தலில் கள்ள ஓட்டு போட முயன்ற ஒருவரை முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார் பிடித்து போலீஸில் ஒப்படைத்தார். ஆனால், அன்று ஒப்படைத்தவரை கைது செய்து, கள்ள ஓட்டு போட்டவரை விடுவித்தார்கள். இப்படிப்பட்ட கட்சிக்கு எங்களைப் பற்றி விமர்சனம் செய்ய அருகதை கிடையாது. ஜெயலலிதா இருக்கும்போது சென்னை மாநகராட்சி தேர்தல் நடந்தது, அப்போது ஒன்றரை மணி நேரத்தில் 1,200 ஓட்டுகளை பதிவு செய்தார்கள். நீதிமன்றம் சென்றோம், ஒன்றரை மணி நேரத்தில் எப்படி இவ்வளவு ஓட்டு பதிவாகும் என்று கேட்டு, முறைகேடு தேர்தலை ரத்து செய்தது நீதிமன்றம். கூட்டுறவு சங்கத் தேர்தல் நடத்தியதிலும் முறைகேடு நடந்தது. திமுக அரசாங்கமே அந்த தேர்தலை ரத்து செய்துவிட்டது.
இன்று ஊழல் இல்லாத துறையே இல்லை. எதற்கெடுத்தாலும் பணம் தான். ஊழலில் ஸ்டாலின் அரசுக்கு நோபல் பரிசு கொடுக்கலாம். டாஸ்மாக் கடையில் ஒரு பாட்டிலுக்கு 10 ரூபாய் கூடுதலாக விற்பனை செய்வதன் மூலம் மட்டும் ஆண்டிற்கு 5,400 கோடி ரூபாய் ஊழல் நடக்கிறது. மேலிடத்து உத்தரவு என்று சேல்ஸ்மேன் சொல்கிறார். இந்த நான்காண்டில் 22 ஆயிரம் கோடி ரூபாய் திமுக அரசு கொள்ளையடித்திருக்கிறது. 10 ரூபாய் அமைச்சர் செந்தில் பாலாஜி என்று மக்களே பெயர் வைத்துவிட்டனர்.
போதைப் பொருள் விற்பனை படுஜோராக நடக்கிறது. இளைஞர்கள் சீரழிகிறார்கள் என்று நான் பலமுறை சொன்னதை முதல்வர் காதில் வாங்கிக்கொள்ளவில்லை. இந்த போதை ஆசாமிகளால் கொலை, கொள்ளை, பாலியல் சீண்டல்கள் நடக்காத நாளே இல்லை. 2022-ம் ஆண்டு காவல் துறை மானியம் வந்தபோது, கொள்கை விளக்க குறிப்பில் 20-வது பக்கத்தில், பள்ளி – கல்லூரிக்கு அருகில் 2,348 பேர் கஞ்சா விற்றதாக கண்டறியப்பட்டது, ஆனால் கைது செய்யப்பட்டது 148 பேர். மற்றவர்கள் எல்லாம் யார்? அவர்கள் எல்லாம் திமுககாரர்கள். அப்புறம் எப்படி கஞ்சாவை கட்டுப்படுத்த முடியும்?
ஸ்டாலின் அவரது கட்சிப் பொதுக்குழு கூட்டத்தில் பேசும்போது, காலையில் கண் விழிக்கும் போது எங்க கட்சிக் காரர்களால் என்ன நடக்குமோ என்று பதறிப்போகிறேன் என்கிறார். அவருடைய கட்சிக்காரரையே கட்டுப்படுத்த முடியாதவர், நாட்டில் குற்றங்களை எப்படிக் கட்டுப்படுத்துவார்? பொம்மை முதல்வரை பிடித்து உட்கார வைத்திருக்கிறார்கள். எந்த கேள்வி கேட்டாலும் பதிலே கிடையாது. நான் சட்டமன்றத்தில் 2 மணி நேரம் 50 நிமிடம் பேசினேன். அப்போது அவர், இவ்வளவு நேரம் பேசிவிட்டீர்கள். நான் போய் பதிலுக்காக குறிப்பெடுக்க வேண்டும் என்று கேட்டுக்கொண்டார். அதனால் பேச்சை நிறுத்திக்கொண்டேன்.
இவ்வளவு நேரம் ஏன் பேசுகிறேன்? ஆட்சியில் நடக்கும் குறைகளைத்தானே சுட்டிக்காட்டுகிறேன். திமுக ஆட்சி அமைந்ததில் இருந்து இன்றுவரை மக்கள் போராடுகிறார்கள். ஆசிரியர்கள், செவிலியர்கள், போக்குவரத்து ஊழியர்கள், தூய்மைப் பணியாளர்கள் என எல்லா தரப்பினரும் போராடுகிறார்கள். ஆனால் ஸ்டாலின் எதைப் பற்றியும் கவலைப்படுவதில்லை. வீட்டில் உள்ளவர்களை மட்டும்தான் கவனிப்பார்.
கடன் வாங்குவதில் தமிழகத்தின் சூப்பர் முதல்வர் ஸ்டாலின்தான். இந்த ஐந்தாண்டில் 5 லட்சத்து 38 ஆயிரம் கோடி கடன் சுமை. மக்களிடம் தான் வசூல் செய்வார்கள். ஒருநாள் திமுக அரசு தமிழ்நாட்டையே கடன் வாங்கியதற்கு அடமானம் வைக்கப்போகிறது. அப்படிப்பட்ட காலம் வந்துவிடும், எதிர்க்கட்சித் தலைவராக இருந்தபோது கடனை குறைக்க நிபுணர் குழு அமைக்கப்படும் என்றார். ஆனால், அதற்காக அமைத்தார்களா? கடன் வாங்குவதற்கே நிபுணர் குழு அமைத்தார்கள். பொருளாதார வளர்ச்சி 11.19% என்கிறார். புள்ளி விவரம் மாறிக்கொண்டே இருக்கும். இந்த புள்ளி விவரத்தால் மக்களுக்கு நன்மை கிடைக்குமா?
சிவகாசியில் பட்டாசு தொழிற்சாலை போயிருந்தேன், பெண்களிடம் பேசினேன். இதற்கு என்னிடம் வீடியோ ஆதாரமே உள்ளது. அதிமுக ஆட்சியில் ஒருநாளைக்கு 700 – 800 ரூபாய் ஊதியம் கிடைத்தது. இந்த திமுக ஆட்சியில் 150 ரூபாய் தான் கிடைக்கிறது என்றனர். நீங்கள் புள்ளி விவரம் சொல்கிறீகள். வெளியே வந்து நாட்டு மக்களைப் பாருங்கள், மக்கள் கஷ்டத்தை பார்த்து தெரிந்துகொண்ட பின்னர் முதல்வர் ஸ்டாலின் பேச வேண்டும்.
மன்னர் ஆட்சி காலத்தில் அமைச்சர்களைப் பார்த்து, ‘நாடு எப்படி இருக்கிறது?’ என்று மன்னர் கேட்பார். உடனே அமைச்சர்கள், ‘’நாடு சுபிட்சமா இருக்கிறது, மும்மாரி மழை பெய்கிறது’ என்று பொய் சொல்வார்கள். அப்படி சொல்வதையே நம் முதல்வர் நம்பிக்கொண்டிருக்கிறார். சட்டம் – ஒழுங்கு சீர்கேடு, விலைவாசி உயர்வு விண்ணை முட்டிவிட்டது. விலை குறைப்பதற்கு திமுக என்ன நடவடிக்கை எடுத்தது? இதே அதிமுக ஆட்சியில் விலை கட்டுப்பாட்டு நிதியம் அமைத்து 100 கோடி ரூபாய் ஒதுக்கி, உணவுத்துறை மூலமாக எங்கு விலை குறைவாக இருக்கிறதோ, அங்கிருந்து வாங்கி வந்து, இங்கு விற்பனை செய்தோம். அண்டை மாநிலத்தில் இருந்தும் கூட வாங்கி வந்து விலையைக் கட்டுப்பாட்டில் வைத்தோம். அப்படி ஏதாவது இந்த ஆட்சியில் செய்தார்களா? இப்போது கட்டுமானப் பொருட்களின் விலையும் உயர்ந்துவிட்டது.
அதிமுக ஆட்சி அமைந்ததும் ஏழை, தாழ்த்தப்பட்ட மக்களுக்கு கான்கிரீட் வீடு கட்டிக் கொடுப்போம். அதிமுக ஆட்சியில் பொங்கல் அன்று பொங்கல் தொகுப்பு, 2,500 ரூபாய் கொடுத்தோம். திமுக ஒழுகிற வெல்லம் கொடுத்தனர். திருவண்ணாமலையில் 2 டன் கெட்டுப்போன வெல்லம் வைத்திருந்தனர். திமுக 525 அறிவிப்புகள் வெளியிட்டனர். அவற்றில் 98% நிறைவேற்றிவிட்டோம் என்று பச்சை பொய் சொல்கிறார்கள். 100 நாள் வேலைத் திட்டத்தை 150 நாளாக உயர்த்தவில்லை. ரேஷன் கடையில் 2 கிலோ சர்க்கரை, கேஸ் சிலிண்டருக்கு மானியம், பெட்ரோல், டீசல் விலை குறைப்பு, மாணவர் கல்விக் கடன் ரத்து என்றெல்லாம் ஏராளமான திட்டங்களைச் சொல்லி, ஏமாற்றி கொள்ளைப் புறமாக ஆட்சிக்கு வந்ததும் எல்லாவற்றையும் மறந்துவிட்டனர்.
அதிமுக ஆட்சியில் கொண்டு வந்த அம்மா மினி கிளினிக் திட்டத்தை நிறுத்திவிட்டார். மீண்டும் அதிமுக ஆட்சியில் அத்திட்டம் செயல்படுத்தப் படும். நலம் காக்கும் ஸ்டாலின் என்று இப்போதுதான் மக்களை பற்றி சிந்திக்கிறார். பெயர் வைப்பதில் தான் அவர் பிரபலம். பெயர் வைப்பதற்கு ஸ்டாலினுக்கு நோபல் பரிசு கொடுக்கலாம். அதிமுக ஆட்சியில் 15 லட்சம் மருத்துவ முகாம் நடத்தினோம். அதற்கு ஸ்டிக்கர் ஒட்டிவிட்டார். அதுதான் நலம் காக்கும் ஸ்டாலின் திட்டம். ஆரம்ப சுகாதார நிலையம், மேம்படுத்தப்பட்ட ஆரம்ப சுகாதார நிலையம், நடமாடும் மருத்துவ குழு ஆகியவற்றை அதிமுக ஆட்சியில் அமைத்தோம். இப்படி அதிமுக ஆட்சியின் திட்டத்துக்குப் பெயர் மட்டும் மாற்றிவிடுகிறார்.
அரசு பள்ளி மாணவர்களும் மருத்துவராக 7.5% உள் இடஒதுக்கீடு கொண்டுவந்தோம். அவர்களில் 2,818 பேர் இலவசமாகப் படித்து மருத்துவர் ஆகிவிட்டனர். திமுக ஆட்சியில் வேட்டி, சேலை கொடுப்பதில்லை. மீண்டும் அதிமுக ஆட்சியில் வேட்டி, சேலை உரிய நேரத்தில் கொடுப்போம். தீபாவளி அன்று பெண்களுக்கு சேலை கொடுப்போம். கரோனா காலத்தில் மக்களுக்கு ரேஷன் கடையில் விலையில்லா பொருள் கொடுத்தோம், விலையில்லா உணவு கொடுத்தோம். மேலும் மாணவர்கள் நலன் கருதி ஆல் பாஸ் போட்டோம். கல்லூரி மாணவர்களுக்கு ஆன்லைன் தேர்வு நடத்தினோம்.
அதிமுக ஆட்சியில் நாங்கள் எந்த ஒரு திட்டத்தையும் நிறைவேற்றவில்லை என்கிறார் ஸ்டாலின். இந்த சாத்தூர் தொகுதிக்கு அதிமுக ஆட்சியில் செயல்படுத்தப்பட்டதை மட்டும் சொல்கிறேன். சாத்தூரில் அதி நவீன மருத்துவமனை, தாலுகா அலுவலகம், ஒருங்கிணைந்த நீதிமன்றம், கல்லூரி கட்டிடம், வைப்பாற்றில் தடுப்பணை, பாலம், குடிநீர் திட்டம், 520 கோடியில் விருதுநகர் – சாத்தூர் – அருப்புக்கோட்டை தாமிரபரணி நீரை ஆதாரமாகக் கொண்டு கூட்டுக் குடிநீர் திட்டத்திற்கு அதிமுக ஆட்சியில் அடிக்கல் நாட்டினோம்.
அந்த கூட்டுக் குடிநீர் பணிகளும் திமுக ஆண்ட இந்த நான்கு ஆண்டுகளில் ஆமை வேகத்தில் நடக்கிறது. மீண்டும் அதிமுக ஆட்சி அமைந்தவுடன் துரிதமாக பணிகள் முடிக்கப்பட்டு, அதை பயன்பாட்டுக்குக் கொண்டுவருவோம். சாத்தூர் வைப்பாற்றில் கழிவுநீர் கலக்காத வண்ணம், 50 கோடி மதிப்பீட்டில் பாதாளச் சாக்கடை திட்டம் கொண்டுவந்தோம், கோட்டாட்சியர் அலுவலகம், அதிநவீன மின் விளக்குகள், தரமான சாலைகள், ஒவ்வொரு கிராமத்திலும் தனித்தனி நீர்த்தேக்கம் அமைத்தோம்.
இப்போது நீங்கள் இருக்கன்குடி அணை, வெம்பக்கோட்டை அணை தூர் வார வேண்டும் என்று கோரிக்கை விடுத்துள்ளனர். அதிமுக ஆட்சியில் நிச்சயம் தூர்வாரப்படும். சாத்தூர், சிவகாசி, ராஜபாளையம் ஆகிய ஊர்களை இணைக்கும் வகையில் ஆலங்குளத்தில் பேருந்து நிலையம் கோரியுள்ளனர். அதுவும் அதிமுக ஆட்சி அமைந்ததும் அமைக்கப்படும். ஆலங்குளம் முதல் நிலை ஊராட்சியில் ஆரம்ப சுகாதார நிலையம் அமைக்கப்படும். உங்கள் மற்ற கோரிக்கைகளும் அதிமுக ஆட்சியில் நிறைவேற்றப்படும்” என்று எடப்பாடி பழனிசாமி பேசினார்.