சென்னையில் சட்டவிரோத செயல்களில் ஈடுபட்டதாக இரண்டு காவலர்கள் இடைநீக்கம் செய்யப்பட்டுள்ளனர்.
வருமான வரி அதிகாரிகளுடன் இணைந்து வழிப்பறியில் ஈடுபட்டதாக ராஜாசிங் என்ற சிறப்பு காவல்துறை துணை ஆய்வாளரும் போதைப்பொருள் விற்றதாக அருண் பாண்டியன் என்ற காவலரும் கைது செய்யப்பட்டுள்ளனர்.
குற்றம் நிகழாமல் தடுக்க வேண்டிய காவல்துறையினரே இதுபோன்ற சட்டவிரோத செயல்களில் ஈடுபட்டது ஏன்?
சென்னையில் லைஃப்லைன் என்ற பெயரில் மருத்துவ பரிசோதனை மையம் (Lab) ஒன்றை ஜூனைத் அகமது நடத்தி வருகிறார். அவர் தனது பணத்தைப் பறித்து வருமான வரித்துறை அதிகாரிகளிடம் சிறப்பு துணை ஆய்வாளர் ஒருவர் கொடுத்ததாக திருவல்லிக்கேணி காவல் நிலையத்தில் முகமது கௌஸ் புகார் கொடுத்துள்ளார்.
அவரது புகார் மனுவில், “புதிதாக சி.டி ஸ்கேன் இயந்திரம் வாங்குவதற்காக என்னிடம் பணிபுரியும் முகமது கௌஸ் என்பவரிடம் சுமார் 20 லட்சம் ரூபாய் கொடுத்தேன். இந்தப் பணத்துடன் கடந்த திங்கள்கிழமை (டிசம்பர் 16) இரவு ஓமந்தூரார் பல்நோக்கு அரசு மருத்துவமனை வழியாக முகமது கௌஸ் சென்றுள்ளார். அப்போது மருத்துவமனையின் எதிர் புறத்தில் ரோந்துப் பணியில் இருந்த சிறப்பு காவல்துறை துணை ஆய்வாளர் ஒருவர், கவுஸிடம் இருந்து பணத்தைப் பறிமுதல் செய்துள்ளார். பணம் பறிமுதல் செய்தது தொடர்பாக, எந்த ஆவணங்களும் எனக்குத் தரப்படவில்லை” என்று அவர் குறிப்பிட்டிருந்தார்.
காவல் உதவி ஆணையர் சொல்வது என்ன?
“முகமது கௌஸின் வாகனத்தை சிறப்பு துணை ஆய்வாளர் ராஜாசிங் மடக்கியுள்ளார். அதிக அளவில் பணம் இருப்பது தெரியவந்தால், அதைப் பற்றி உயர் அதிகாரிகளுக்குத் தெரிவித்திருக்க வேண்டும். ஆனால், அவர் அவ்வாறு செய்யவில்லை” என பிபிசி தமிழிடம் பேசிய திருவல்லிக்கேணி காவல் உதவி ஆணையர் அழகு தெரிவித்தார்.
முகமது கௌஸிடம் லட்சக்கணக்கில் பணம் இருப்பதை அறிந்த ராஜாசிங், வருமான வரித்துறை கண்காணிப்பாளர் பிரபு, வருமான வரித்துறை ஆய்வாளர் தாமோதரன், வருமான வரித்துறை அலுவலர் பிரதீப் ஆகியோருக்குத் தகவல் கொடுத்திருக்கிறார்.
“வருமான வரித்துறை அதிகாரிகளுக்கும் சிறப்பு துணை ஆய்வாளர் ராஜாசிங்கிற்கும் இடையே ஏற்கெனவே நட்பு இருந்துள்ளது. இந்தப் பணத்தை அபகரிக்க வேண்டும் என்பது அவர்களின் நோக்கமாக இருந்துள்ளது” என்றார் உதவி ஆணையர் அழகு.
இதன் பிறகு முகமது கௌஸை தங்கள் வாகனத்தில் அழைத்துச் சென்ற வருமான வரித்துறை அதிகாரிகள், அவரிடம் இருந்து 15 லட்ச ரூபாயைப் பறித்துவிட்டு, 5 லட்ச ரூபாயை அவரிடமே மட்டும் திருப்பிக் கொடுத்துவிட்டதாகக் கூறிய அழகு, “கௌஸிடம் இருந்து பறிமுதல் செய்யப்பட்ட பணத்துக்கு உரிய ஆவணத்தை வருமானவரித் துறை அதிகாரிகள் கொடுக்கவில்லை” என்றார்.
வருமான வரித் துறை அதிகாரிகள் மீது வழக்கு
ராஜாசிங் அளித்த தகவல் மூலமாக, வருமான வரித்துறை அதிகாரிகளை திருவல்லிக்கேணி காவல் துறையினர் கைது செய்துள்ளனர். அப்போது, ‘இரவு நேரம் என்பதால் பணத்தை அலுவலகத்துக்குக் கொண்டு செல்ல முடியவில்லை. மறுநாள்(டிசம்பர் 17) வேறு ரெய்டு வேலை இருந்ததால் இந்த பணத்தைக் கொண்டு செல்ல முடியவில்லை’ என்று வருமான வரித் துறை அதிகாரிகள் கூறியுள்ளனர்.
“இதே கருத்தை கைதுக்குப் பின்னர் மாஜிஸ்திரேட்டிடமும் வருமான வரித்துறை அதிகாரிகள் கூறினர். அப்படியானால், ‘இவர்கள் ஏன் 5 லட்ச ரூபாயை கௌஸிடம் திருப்பித் தர வேண்டும். இதில் உள்நோக்கம் உள்ளது’ என்றோம். அதை மாஜிஸ்திரேட் ஏற்றுக் கொண்டார்” என்கிறார் காவல் உதவி ஆணையர் அழகு.
கைதான நான்கு பேர் மீதும் வழிப்பறி பிரிவின் கீழ் திருவல்லிக்கேணி காவல் துறையினர் வழக்குப்பதிவு செய்துள்ளதாகக் கூறும் அழகு, “கைதான சிறப்பு துணை ஆய்வாளர் ராஜாசிங், முன்னதாக போக்குவரத்துப் பிரிவில் வேலை பார்த்தபோது வருமான வரித்துறை அதிகாரிகளுடன் நட்பு ஏற்பட்டுள்ளது. அதை வைத்து இப்படியொரு செயலில் ஈடுபட்டுள்ளார்” என்றார்.
போதைப்பொருள் விற்றதாக காவலர் கைது
இந்த சம்பவம் நடந்த அதேநாளில் (டிசம்பர் 16) மெத்தம்பெட்டமைன் போதைப்பொருளை விற்ற குற்றச்சாட்டில் பழைய வண்ணாரப்பேட்டை காவல் நிலையத்தில் பணிபுரியும் அருண் பாண்டியன் என்ற காவலரை எழும்பூர் காவல் துறையினர் கைது செய்தனர்.
முன்னதாக, மெத்தம்பெட்டமைன் என்ற போதைப்பொருளை விற்ற புகாரில் சென்னை அசோக் நகர் காவல் நிலையத்தில் பணிபுரியும் காவலர் ஜேம்ஸ், அயனாவரம் காவல்நிலைய காவலர் பரணி மற்றும் மத்திய போதைப் பொருள் கடத்தல் தடுப்புப் பிரிவில் (NCB) பணியாற்றும் காவலர்கள் ஆனந்த், சபீர் ஆகியோர் கைது செய்யப்பட்டனர்.
இவர்களில் ஜேம்ஸ் மற்றும் ஆனந்த் ஆகியோரை காவல்துறை காவலில் எடுத்து விசாரித்த போது, நைஜீரிய நாட்டைச் சேர்ந்த போதைப் பொருள் கும்பலுடன் இவர்களுக்கு பழக்கம் இருந்ததாக விசாரணையில் தெரியவந்துள்ளது.
இதன் பின்னணி குறித்து காவல்துறை விசாரணை நடத்தி வரும் நிலையில், எழும்பூர் ரயில் நிலையம் அருகே டிசம்பர் 16 ஆம் தேதி அன்று நடந்த வாகன சோதனையில் 700 கிராம் அளவுள்ள மெத்தம்பெட்டமைனும் ஆறு கிலோ கஞ்சாவும் பிடிபட்டதாக காவல்துறை தெரிவித்தது.
இந்த வழக்கில் ஒரு பெண் உள்பட இரண்டு பேர் கைது செய்யப்பட்டனர். இவர்களுக்கு மெத்தம்பெட்டமைனை கொடுத்ததாக, பழைய வண்ணாரப்பேட்டை காவலர் அருண்பாண்டியன் கைது செய்யப்பட்டுள்ளார்.
போதைப்பொருள் விற்றதாகக் கூறப்பட்ட புகாரில் அடுத்தடுத்து ஐந்து காவலர்கள் கைது செய்யப்பட்டிருப்பது, காவல்துறை வட்டாரத்தில் அதிர்வலைகளை ஏற்படுத்தியுள்ளது.
கண்காணிப்பில் குறைபாடா? – முன்னாள் ஐ.ஜி கண்ணப்பன் விளக்கம்
இந்த விவகாரம் தொடர்பாக பிபிசி தமிழிடம் பேசிய முன்னாள் ஐ.ஜி கண்ணப்பன், “தவறு செய்த ஒருவரை இடைநீக்கம் செய்வதை வரவேற்கலாம். ஆனால், அது நிரந்தர தீர்வா எனப் பார்க்க வேண்டும். தவறு செய்கிறவர்களை இடைநீக்கம் செய்ததோடு அந்தச் செய்தி முற்றுப் பெற்றுவிடுகிறது. அந்த நபரும் அடுத்த மூன்று மாதங்களில் மீண்டும் வேலைக்கு வந்துவிடுவார். மீண்டும் தவறு நடக்கவே வாய்ப்புகள் அதிகம்” என்கிறார்.
தொடர்ந்து பேசிய கண்ணப்பன், “தவறு செய்தால் இழிவு என்ற நிலை தற்போது மாறிவிட்டது. அது தன்னை பாதிக்காத வகையில் மாற்றிக் கொள்ளலாம் என்ற எண்ணம் அதிகரித்துவிட்டது. இதற்கான காரணத்தை ஆராய வேண்டியது அவசியம். காவல் நிலையங்களில் காவலரைக் கண்காணிக்க எஸ்.ஐ., அவரைக் கண்காணிக்க இன்ஸ்பெக்டர் என டி.ஜி.பி வரையில் பல படிநிலைகள் உள்ளன. அதிகாரம் உள்ள இடங்களில் கண்காணிப்பு இல்லாவிட்டால் காலப்போக்கில் சிலர் வழிதவறிப் போகும் சூழல் ஏற்படும்” என்றார்.
காவலர்கள் குற்றம் புரிவது ஏன்?
“காவல்துறைக்குள் ஒரு குற்ற சம்பவம் கூட நடந்துவிடக் கூடாது என்பது தான் எங்களின் விருப்பம். ஆனால், இதுபோன்ற சம்பவங்கள் அவ்வப்போது நடந்து கொண்டு தான் உள்ளன” என்கிறார் முன்னாள் டி.ஜி.பி ரவி.
பிபிசி தமிழிடம் பேசிய ரவி, “காவலர் பணிக்கு ஆட்களை எடுத்த பின்னர், பயிற்சியின்போது உளவியல் ரீதியான கவுன்சிலிங் கொடுக்கப்படுகிறது. ஒரு மனிதனுக்கு கிரிமினல் மனநிலை இருக்கிறதா என்ற சோதனை நடத்தப்படும். அதையும் மீறி கைதாவதற்கு பேராசை தான் காரணம். காவலர்களின் நன்னடத்தைகளை தொடர்ந்து ஆய்வு செய்ய வேண்டும். அப்போது தான் இதுபோன்ற நபர்களை அடையாளம் காண முடியும்” என்றார்.
பணிநீக்கம் செய்யும் நடைமுறை என்ன?
குற்றச்செயல்களில் ஈடுபட்டதாக காவலர்கள் அடுத்தடுத்து கைதாகியிருப்பது தொடர்பாக தமிழ்நாடு போதைப்பொருள் தடுப்பு நுண்ணறிவுப் பிரிவின் அரசு வழக்கறிஞர் கே.ஜே.சரவணனிடம் பிபிசி தமிழ் சார்பில் பேசினோம்.
“குற்றம் நிரூபிக்கப்பட்ட பிறகு சம்பந்தப்பட்ட காவலரை பணியில் இருந்து நீக்கம் செய்வது நடைமுறை. அதேநேரம், குற்றத்தின் தன்மையைப் பொறுத்து துறை ரீதியாகவும் விசாரணை நடக்கும். அதன்படியும், அவர்கள் பணியில் இருந்து நீக்கப்படுகின்றனர். அதன் பின்னர், ஒருவேளை குற்றம் சுமத்தப்பட்ட நபரை, வழக்கில் இருந்து நீதிமன்றம் விடுதலை செய்தால் தனக்கு நிவாரணம் கேட்டு வழக்கு தொடரலாம்” என்று அவர் கூறினார்.
மேலும் தொடர்ந்த அவர், “போதைப்பொருள் தொடர்பான வழக்குகள் விரைந்து முடிக்கப்படுகின்றன. இந்த வழக்குகளில் குற்றம் சுமத்தப்பட்ட காவலர்கள் மீதான நடவடிக்கைகளும் விரைந்து எடுக்கப்படுகின்றன” என்றார்.
– இது, பிபிசிக்காக கலெக்டிவ் நியூஸ்ரூம் வெளியீடு.