• Tue. Oct 8th, 2024

24×7 Live News

Apdin News

சென்னை: விமானப்படை சாகசத்தை காண மெரினா கடற்கரை சென்ற 5 பேர் உயிரிழக்க என்ன காரணம்? கள ஆய்வு

Byadmin

Oct 8, 2024


சென்னை மெரினா கடற்கரை, விமான சாகசம்
படக்குறிப்பு, கார்த்திகேயன் உயிரிழந்த வேதனையில் அவரது தாயும் உறவுகளும்.

  • எழுதியவர், முரளிதரன் காசிவிஸ்வநாதன்
  • பதவி, பிபிசி தமிழ்

சென்னை மெரினா கடற்கரையில் விமான சாகச நிகழ்ச்சியைப் பார்க்கச் சென்று, உயிரிழந்த கார்த்திகேயனின் குடும்பம் நிலைகுலைந்து நிற்கிறது. இந்த நிகழ்வையொட்டி மொத்தம் ஐந்து பேர் உயிரிழந்திருக்கின்றனர். எங்கே பிரச்னை ஏற்பட்டது?

சென்னை மெரினா கடற்கரையில் நடந்த விமான சாகசத்தைப் பார்ப்பதற்காக திருவொற்றியூரில் இருந்து கணவருடனும் குழந்தையுடனும் வந்த சிவரஞ்சனி இப்போது நொறுங்கிப் போய் நிற்கிறார். விமான சாகச நிகழ்ச்சி முடிந்த பிறகு, கூட்டம் அதிகமாக இருந்ததால் மனைவியையும் குழந்தைதையும் ஓரிடத்தில் நிற்கச் சொல்லிவிட்டு, இருசக்கர வாகனத்தை எடுக்கச் சென்ற கணவர் கார்த்திகேயன் திரும்ப வரவேயில்லை.

திருவொற்றியூர் ஆர்.எம்.வி. நகர் பகுதியைச் சேர்ந்த 34 வயதான கார்த்திகேயன் ஒரு தனியார் நிறுவனத்தில் பணியாற்றிவந்தார். அவருக்கு சிவரஞ்சனி என்ற மனைவியும் வேதிக் கிருஷ்ணா என்ற இரண்டரை வயது மகனும் இருக்கின்றனர். விமான சாகசக் காட்சியைப் பார்ப்பதற்காக தங்களுடைய இரு சக்கர வாகனத்தில் கார்த்திகேயன், சிவரஞ்சனி, அவர்களுடைய குழந்தை ஆகிய மூவரும் மெரினாவுக்கு வந்தனர்.

விமான சாகசம் முடிந்ததும், எல்லோரும் ஒரே நேரத்தில் வெளியேறியதால் பல இடங்களிலும் நெரிசல் ஏற்பட்ட நிலையில், மனைவியை சென்னை பல்கலைக்கழகத்திற்கு எதிரில் நிற்கச் சொல்லிவிட்டு, சற்று தூரத்தில் நிறுத்தப்பட்டிருந்த தனது இரு சக்கர வாகனத்தை எடுத்துவருவதற்காகச் சென்றிருக்கிறார் கார்த்திகேயன்.

By admin