சென்னை: சென்னை விமான நிலையத்தில் பயணியின் சூட்கேஸ் கைப்பிடியில் பாம்பு சுற்றி கொண்டு இருந்ததால் பரபரப்பு ஏற்பட்டது. சென்னையை சேர்ந்தவர் சதீஷ் (35) என்பவர் சவூதி அரேபியாவில் தனியார் நிறுவனத்தில் பணிபுரிந்து வருகிறார்.
கோடை விடுமுறைக்காக கல்ப் ஏர்வேஸ் விமானத்தில் சென்னைக்கு நேற்று வந்தார். குடியுரிமை, சுங்க சோதனைகளை முடித்துவிட்டு, தனது உடமைகளை எடுத்துக்கொண்டு வெளியில் வந்தார். விமான நிலையத்தின் வெளிப்பகுதியில், பிக்கப் பாயிண்ட் அருகே நிறுத்தப்பட்டிருந்த காருக்கு உடமைகளை டிராலியில் வைத்து தள்ளி கொண்டு சென்றார்.
கார் அருகே டிராலியை நிறுத்தி டிராவல் பேக்கை எடுத்து காரில் வைக்க சதீஷ் முயன்றபோது, பேக்கின் கைப்பிடியில் பாம்பு ஒன்று சுற்றிக்கொண்டு இருந்தது. இதனால், அதிர்ச்சி அடைந்த சதீஷ் மற்றும் அவரது குடும்பத்தினர், சக பயணிகள் பாம்பு என்று கூச்சல் போட்டனர். உடனே அங்கிருந்த போலீசார், தீயணைப்பு துறைக்கும் தகவல் தெரிவித்தனர்.
தாம்பரம் தீயணைப்பு துறையினர் சென்னை விமான நிலையத்துக்கு விரைந்து வந்தனர். அவர்கள் பாம்பை பார்த்துவிட்டு, இது விஷம் இல்லாத தண்ணீர் பாம்பு வகையை சேர்ந்தது. பயப்பட வேண்டாம் என்று தெரிவித்தனர். பின்னர், பாம்பு பிடிக்கும் கருவி மூலம் டிராவல் பேக் கைப்பிடியில் சுற்றி இருந்த 3 அடி நீளமுள்ள பாம்பை பிடித்து பிளாஸ்டிக் டிரம்மில் போட்டு மூடினர்.
இதையடுத்து, தீயணைப்பு துறையினர், அந்தப் பாம்பை எடுத்துச் சென்று வனத்துறை அதிகாரிகளிடம் ஒப்படைத்தனர். விமான நிலையத்தின் போர்டிகோ பகுதியில் இருந்த டிராலி வழியாக டிராவல் பேக்கில் பாம்பு ஏறி இருக்கலாம் என்று கூறப்படுகிறது. சென்னை விமான நிலையத்தில் ஏற்கெனவே நாய், குரங்கு, கொசு தொல்லைகள் இருக்கும் நிலையில், இப்போது புதிதாக பாம்பு தொல்லையும் சேர்ந்துள்ளது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.