“செம்பரம்பாக்கம் ஏரியைத் திறப்பதற்காக பூசணிக்காயை உடைத்து பூஜை போடுகிறீர்கள். தொலைக்காட்சிகளில் செய்தி வெளியாகியுள்ளது. ஆனால், தொகுதி எம்.எல்.ஏ, எம்.பி-க்கு தகவல் சொல்வதில் என்ன தயக்கம்?” என, அதிகாரிகளிடம் கோபத்தை வெளிப்படுத்தியிருக்கிறார், ஸ்ரீபெரும்புதூர் தொகுதி எம்.எல்.ஏ செல்வப்பெருந்தகை.
“இவர்கள்தான் தண்ணீர் திறக்க வேண்டும்.. இவர் தொடக் கூடாது என வெறிபிடித்துப் போய் இந்தத் துறை உள்ளது” எனவும் அவர் விமர்சித்துள்ளார்.
தண்ணீர் திறந்துவிடுவதில் சட்டமன்ற உறுப்பினர்களை அழைப்பது நடைமுறையில் உள்ளதா? பிபிசி தமிழிடம் செல்வப்பெருந்தகை கூறியது என்ன?
தமிழ்நாட்டில் வடகிழக்குப் பருவமழையின் காரணமாக காஞ்சிபுரம் மாவட்டத்தில் உள்ள சுமார் அறுபதுக்கும் மேற்பட்ட ஏரிகள் நிரம்பியுள்ளதாக, நீர்வள ஆதாரத்துறை அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
ஸ்ரீபெரும்புதூர் மாவட்டத்தில் பெய்த கனமழையின் காரணமாக, சென்னையின் முக்கிய குடிநீர் ஆதாரமாக உள்ள செம்பரம்பாக்கம் ஏரிக்கு நீர்வரத்து அதிகரித்துள்ளது.
புதன்கிழமை (அக்டோபர் 22) காலை நிலவரப்படி, செம்பரம்பாக்கம் ஏரிக்கு வரும் நீர்வரத்து விநாடிக்கு 1,800 கனஅடியாக இருந்து 2,170 கனஅடியாக அதிகரித்துள்ளதாக, நீர்வள ஆதாரத்துறை அதிகாரிகள் கூறியுள்ளனர்.
ஏரியின் நீர்மட்டமும் உயர்ந்து வருவதால், செவ்வாய்க்கிழமையன்று 100 கனஅடி நீர் வெளியேற்றப்பட உள்ளதாக அறிவிப்பு வெளியானது. தொடர்ந்து, ஏரியின் பாதுகாப்பு கருதி 500 கனஅடி நீர் திறந்துவிடப்பட்டுள்ளது.
“ஆனால், இதுகுறித்து தொகுதி எம்.எல்.ஏ என்ற முறையில் தன்னிடம் எந்தத் தகவலும் தெரிவிக்கப்படவில்லை” என, தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டித் தலைவர் செல்வப்பெருந்தகை தெரிவித்துள்ளார்.
‘சிறுமைப்படுத்த நினைக்கிறீர்கள்’ – செல்வப்பெருந்தகை
செம்பரம்பாக்கம் ஏரியில் புதன்கிழமையன்று ஆய்வு செய்த அவர், அங்கிருந்த நீர்வள ஆதாரத்துறை அதிகாரிகளிடம், “நான்கு மணிக்கு செம்பரம்பாக்கம் ஏரியைத் திறக்கப் போவதாக ஊடகங்களில் செய்தி வெளியாகியுள்ளது. பூசணிக்காயை உடைத்து பூஜை போடுகின்றனர். இந்தத் தொகுதிக்கு எம்.எல்.ஏ, எம்.பி இருக்கிறார்கள். அவர்களிடம் தகவல் சொல்வதில் என்ன தயக்கம்?” எனக் கேள்வி எழுப்பினார்.
“இவர்கள்தான் தண்ணீர் திறக்க வேண்டும்.. இவர் தொடக் கூடாது என வெறிபிடித்துப் போய் இந்தத் துறை உள்ளது. என்னை சிறுமைப்படுத்த வேண்டும் என நினைக்கிறீர்கள். மக்களுக்காக ஓடிக் கொண்டுதான் இருப்போம்” எனவும் அங்கிருந்த அதிகாரிகளிடம் அவர் தெரிவித்தார்.
செம்பரம்பாக்கம் ஏரியை மூன்று முறை தான் திறந்து வைத்துள்ளதாகக் கூறிய செல்வப்பெருந்தகை, ” கடந்த முறை ஏரியைத் திறந்தபோதும் என்னிடம் கூறவில்லை. அதிகாரிகளே திறந்துவிடட்டும், அதனால் தவறு இல்லை. ஆனால், கவனமாக இருக்குமாறு மக்களிடம் நாங்கள் தானே கூற வேண்டும்” எனவும் கோபத்தை வெளிப்படுத்தினார்.
மேலும், “பொறியாளர்கள் மட்டுமே அனைத்தையும் பார்த்துக் கொள்ள வேண்டும் என்றால் மக்கள் பிரதிநிதி எதற்காக? ஏரி திறக்கப்பட உள்ளதைத் தொலைக்காட்சியில் பார்த்த பிறகு பலமுறை தொடர்பு கொண்டும் அதிகாரிகள் அழைப்பை ஏற்கவில்லை. காலம்காலமாக கடைபிடிக்கப்படும் மரபை பின்பற்றுவதில் என்ன தவறு?” எனவும் அவர் கேள்வி எழுப்பினார்.
துறைரீதியான நடைமுறை என்ன?
“ஏரியைத் திறப்பதற்கு சட்டமன்ற உறுப்பினர்களை அழைப்பது விதிகளில் உள்ளதா?” என, நீர்வள ஆதாரத்துறையின் முன்னாள் துணைத் தலைவரும் பொதுப்பணித்துறையில் தலைமைப் பொறியாளராக பணியாற்றி ஓய்வுபெற்ற இளங்கோவனிடம் பிபிசி தமிழ் கேட்டது.
“அணை மற்றும் ஏரிகளைத் திறக்கும்போது அந்தந்த பகுதிகளில் உள்ள பாசன விவசாயிகள் சங்கங்களின் பிரதிநிதிகளிடம் அதிகாரிகள் கேட்பது வழக்கம். அவர்களும் தண்ணீர் திறக்கப்படும் நிகழ்வில் பங்கேற்பார்கள்” எனக் கூறுகிறார்.
“வெள்ள காலங்களில் சூழலுக்கு ஏற்ப அந்தந்த பகுதிகளைக் கண்காணிக்கும் பொறியாளர்களே நீரை திறந்துவிடலாம். இதற்காக சட்டமன்ற, நாடாளுமன்ற உறுப்பினர்களை அழைக்க வேண்டிய அவசியம் இல்லை. அது அவசியமற்றது எனத் தொடர்ந்து வலியுறுத்தி வந்தோம்” எனவும் இளங்கோவன் குறிப்பிட்டார்.
“குடிநீரை திறந்து விடுவதற்கு யாரிடமும் கேட்க வேண்டிய அவசியம் இல்லை. ஏரி, அணைகளில் நீர் திறப்பது தொடர்பாக வெளியிடப்படும் அரசாணையிலும் யார் திறக்க வேண்டும் என்ற விவரங்களைக் குறிப்பிடுவது இல்லை” எனவும் இளங்கோவன் தெரிவித்தார்.
தொடர்ந்து பேசும்போது, “ஏரிகள் நிரம்பும்போது செயற்பொறியாளர் அல்லது தலைமைப் பொறியாளரே திறந்து வைக்கலாம். இதற்கு யாரையும் அழைக்க வேண்டிய அவசியம் இல்லை” என்கிறார்.
“ஏரிகளைத் திறந்து வைக்கும் நிகழ்வில் அமைச்சர்கள், சட்டமன்ற, நாடாளுமன்ற உறுப்பினர்கள் கலந்து கொள்வது நடைமுறையாக உள்ளது. இது சட்டவிதிகளில் இல்லை” எனக் கூறுகிறார், விழுப்புரம் தொகுதியின் விடுதலைச் சிறுத்தைகள் கட்சி எம்.பி ரவிக்குமார்.
பிபிசி தமிழிடம் பேசிய அவர், “தண்ணீரை பராமரிப்பது பொறியாளர்களின் பணியாக உள்ளது. நீர்வரத்து அதிகமாக இருந்தால் அதை ஆய்வு செய்ய வேண்டிய பணியில் அதிகாரிகள் உள்ளனர். இதில் அமைச்சர்களுக்கும் சட்டமன்ற உறுப்பினர்களுக்கும் எந்தப் பங்கும் இல்லை” என்கிறார்.
‘அனுமதி அவசியம் இல்லை.. ஆனால்?’
தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டி தலைவர் செல்வப்பெருந்தகையிடம் பிபிசி தமிழ் பேசியது.
“அவசர காலங்களில் ஏரியைத் திறப்பதற்கு யாரிடமும் அனுமதி கேட்க வேண்டிய அவசியம் இல்லை. 2015-ஆம் ஆண்டு செம்பரம்பாக்கம் ஏரியைத் திறப்பதற்கு ஆட்சியாளரின் அனுமதி கிடைக்காததால் அசம்பாவிதம் ஏற்பட்டது. தற்போது சூழல் அப்படியில்லை” எனக் கூறுகிறார்.
“ஏரியைத் திறக்கும்போது உள்ளூரில் உள்ள ஊராட்சித் தலைவரை அழைத்து படையல் போடுவார்கள். தொகுதி எம்.எல்.ஏ, எம்.பி, அமைச்சர் ஆகியோரை அழைப்பது நடைமுறையாக உள்ளது” எனவும் அவர் தெரிவித்தார்.
“ஆனால், செம்பரம்பாக்கம் ஏரியைத் திறப்பதற்கு ஊராட்சி மன்றத் தலைவர் உள்பட யாரையும் அழைக்கவில்லை” எனக் கூறும் செல்வப்பெருந்தகை, “ஏரியை திறப்பதற்கு மக்கள் பிரநிதிகளை அழைக்க வேண்டாம் என உயர் அதிகாரிகள் கூறியுள்ளதாக தகவல் கிடைத்தது” என்கிறார் செல்வப்பெருந்தகை.
“எம்.எல்.ஏ, எம்.பி ஆகியோரை அழைப்பது விதிகளில் இல்லை என்கிறார்களே?” எனக் கேட்டபோது, “சட்டமன்ற உறுப்பினராக ஆன பின்பு முதல் மூன்று ஆண்டுகள் ஏரியைத் திறந்துவிட்டேன். மக்களிடம் நாங்கள்தான் சென்று பேச வேண்டும். தற்போது ஏரியைத் திறந்துவிட்டது தொடர்பாக மாவட்ட ஆட்சியருக்குக் கூட தெரிவிக்கவில்லை என்கிறார்கள்” எனக் கூறினார் செல்வப்பெருந்தகை.
‘வேதனைகளில் இதுவும் ஒன்று’
சாதிப் பாகுபாடு காட்டப்படுவதாக பேசியது குறித்துக் கேட்டபோது, ” அதிகாரிகளிடம் தனிப்பட்ட முறையில் அதைத் தெரிவித்தேன். எத்தனையோ வேதனைகள் உள்ளன. அதில் இதுவும் ஒன்று எனக் கடந்து போக வேண்டியதுதான்” எனக் கூறிய செல்வப்பெருந்தகை, “இதைப் பற்றி அதிகாரிகள் யாரும் என்னிடம் பேசவில்லை. இது அதைவிட வேதனையாக உள்ளது” என்கிறார்.
“ஏரிகளைத் திறந்துவிடும்போது ஆளும்கட்சியினரை மட்டும் அழைத்துவிட்டு மற்றவர்களைப் புறக்கணிக்கும் நிலை உள்ளது. இதுகுறித்து அந்தந்த பகுதிகளில் உள்ள மக்கள் பிரதிநிதிகள் கேள்வி கேட்கும் நிலை ஏற்படுகிறது” என்கிறார், விழுப்புரம் தொகுதி எம்.பி ரவிக்குமார்.
காவிரி நீரை பாசனத்துக்குத் திறக்கும்போது சடங்குபோல அரசு நடத்துவதாகக் கூறும் ரவிக்குமார் எம்.பி, “செம்பரம்பாக்கம் ஏரியில் இருந்து வெள்ள நீரை திறந்துவிடுவதற்கு எந்த சடங்குகளும் நடத்தப்படுவதில்லை. ஆனால், சிலரைத் தவிர்க்கும்போதுதான் பிரச்னை ஏற்படுகிறது” எனக் கூறினார்.
அதிகாரி கூறுவது என்ன?
செம்பரம்பாக்கம் ஏரியைக் கவனிக்கும் நீர்வள ஆதாரத்துறையின் உதவி பொறியாளர் தனசேகரனிடம் பிபிசி தமிழ் பேசியபோது, “இதைப் பற்றி பேச விரும்பவில்லை” என்று மட்டும் அவர் பதில் அளித்தார்.
“பாகுபாடு காட்டப்படுவதாக கூறுவதை ஏற்க முடியாது” எனக் கூறுகிறார், தி.மு.க செய்தித் தொடர்புத் துறை செயலாளர் பேராசிரியர் கான்ஸ்டன்டைன்.
“தமிழ்நாடு முழுவதும் நாற்பதுக்கும் மேற்பட்ட தனித்தொகுதிகள் உள்ளன. அங்கு பாகுபாடு காட்டப்படுவதாக எந்தப் புகார்களும் இல்லை. ஏரி திறப்புக்கு செல்வப்பெருந்தகையை அழைப்பதில் எந்த தயக்கமும் இல்லை” என்கிறார்.
“கோவில் விவகாரம் என்றால்கூட இவ்வாறு கூறுவதை ஏற்க முடியும்” எனக் கூறும் கான்ஸ்டன்டைன், “ஏரி திறப்பதை அவசர பணியாக மேற்கொள்ளும்போது தகவல் தெரிவிப்பதற்கு தவறியிருப்பார்கள். அதற்காக பாகுபாடு காட்டுவதாக கூறுவதை ஏற்க முடியாது. அதை முதலமைச்சரும் ஏற்க மாட்டார்” எனவும் அவர் தெரிவித்தார்.
– இது, பிபிசிக்காக கலெக்டிவ் நியூஸ்ரூம் வெளியீடு