திருவள்ளூர்: செம்பரம்பாக்கம் ஏரியின் நீர் இருப்பு, அதன் முழுக் கொள்ளளவை நெருங்குகிறது. ஆகவே, பூண்டி ஏரியிலிருந்து செம்பரம்பாக்கம் ஏரிக்கு நீர் திறப்பு நிறுத்தப்பட்டுள்ளது.
சென்னையின் குடிநீர் தேவையை பூர்த்தி செய்யும் முக்கிய ஏரிகளில் ஒன்று பூண்டி ஏரி. இந்த ஏரியில் ஆந்திர மாநிலம்- கண்டலேறு அணையிலிருந்து பெறப்படும் கிருஷ்ணா நதி நீர் மற்றும் மழைக்காலங்களில் நீர்ப்பிடிப்பு பகுதிகளிலிருந்து வரும் நீர் சேமித்து வைக்கப்பட்டு, தேவைக்கேற்ப இணைப்புக் கால்வாய்கள் மூலம் செம்பரம்பாக்கம் மற்றும் புழல் ஏரிகளுக்கு திறந்து விடப்படுவது வழக்கம்.
கடந்த வடகிழக்கு பருவமழையால் பூண்டி, செம்பரம்பாக்கம், புழல், சோழவரம், கண்ணன் கோட்டை- தேர்வாய் கண்டிகை ஏரிகள் நிரம்பின. எனவே அப்போது இந்த ஏரிகளிலிருந்து உபரி நீர் வெளியேற்றப்பட்டது. இச்சூழலில், பூண்டி ஏரியிலிருந்து, இணைப்புக் கால்வாய் மூலம் செம்பரம்பாக்கம் ஏரிக்கு கடந்த 5-ம் தேதிமுதல் விநாடிக்கு 250 கன அடி நீர் திறக்கப்பட்டு வந்தது.
எனவே 3,645 மில்லியன் கன அடி கொள்ளளவு கொண்ட செம்பரம்பாக்கம் ஏரியின் நீர் இருப்பு முழுக் கொள்ளளவை நெருங்கி வருகிறது. ஆகவே, நேற்று முன்தினம் மதியம் நீர் திறப்பை நீர் வள ஆதாரத் துறையினர் நிறுத்தினர்.
இதனால், நேற்று காலை நிலவரப்படி, செம்பரம்பாக்கம் ஏரியின் நீர் இருப்பு 3,443 மில்லியன் கன அடி மற்றும் நீர்மட்டம் 23.25 அடியாக உள்ளது. இதில், சென்னைக் குடிநீர் தேவை உள்ளிட்டவற்றுக்காக விநாடிக்கு 133 கன அடி நீர் வெளியேற்றப்பட்டு வருகிறது.
மேலும், நேற்று காலை நிலவரப்படி 3,231 மில்லியன் கன அடி கொள்ளளவு, 35 அடி உயரம் கொண்ட பூண்டி ஏரியின் நீர் இருப்பு, 2,861 மில்லியன் கன அடியாகவும், நீர்மட்டம் 34.12 அடியாகவும் உள்ளது.