• Tue. Aug 5th, 2025

24×7 Live News

Apdin News

செம்மணிப் புதைகுழி சாட்சியங்களைப் பாதுகாக்க நடவடிக்கை எடுப்போம்! – இலங்கை மனித உரிமைகள் ஆணைக்குழு உறுதி

Byadmin

Aug 4, 2025


செம்மணி மனிதப் புதைகுழிகள் தொடர்பான சாட்சிகளுக்கு இலங்கை மனித உரிமைகள் ஆணைக்குழு பாதுகாப்பு வழங்க நடவடிக்கை எடுக்கும் என்று அந்த ஆணைக்குழுவின் ஆணையாளர்கள் தெரிவித்துள்ளனர்.

செம்மணி மனிதப் புதைகுழிகளின் அகழ்வுப் பணிகளை இலங்கை மனித உரிமைகள் ஆணைக்குழுவின் ஆணையாளர்கள் தலைமையிலான குழுவினர் இன்று நேரில் பார்வையிட்டனர்.

புதைகுழிகளைப் பார்வையிட்ட பின்னர் அவர்கள் ஊடகங்களுக்குக் கருத்துத் தெரிவிக்கையில்,

“செம்மணி மனிதப் புதைகுழி அகழ்வுப் பணிகளை நேரில் பார்வையிட்டோம். அகழ்வுப் பணிகள் தொடர்பிலும் கேட்டறிந்தோம்.” – என்றனர்.

அதன்போது ஊடகவியலாளர் ஒருவர், ‘செம்மணிப் புதைகுழிகள் தொடர்பில் சாட்சியம் சொல்லத் தயார் என கிருஷாந்தி கொலை வழக்கில் குற்றவாளியாகச் சிறையில் இருக்கும் லான்ஸ் கோப்ரல் சோமரத்ன ராஜபக்ஷ என்பவர் கூறியுள்ளார். சிறையில் அவரது பாதுகாப்பு தொடர்பில் இலங்கை மனித உரிமைகள் ஆணைக்குழு நடவடிக்கை எடுக்குமா?’ எனக் கேள்வி எழுப்பினார்.

அதற்கு, “அவருக்குச் சிறையில் அச்சுறுத்தல் இருப்பதாக எமக்கு முறைப்பாடு கிடைக்கப் பெற்றால் நிச்சயமாக அவரது பாதுகாப்பு தொடர்பில் நடவடிக்கை எடுப்போம்.” – என்று அவர்கள் பதிலளித்தனர்

‘யாழ்ப்பாணத்தில் 1996ஆம் ஆண்டு காலப் பகுதியில் காணாமல் ஆக்கப்பட்டவர்கள் தொடர்பில் மேற்கொண்ட விசாரணைகள் தொடர்பான அறிக்கையை வெளியீடு செய்வீர்களா?’ எனக் கேட்ட போது,

“யாழ்ப்பாணத்தில் 1996 – 1997 ஆம் ஆண்டு காலப் பகுதியில் காணாமல் ஆக்கப்பட்டோர் தொடர்பான விசாரணைகளை மேற்கொண்டு 2003ஆம் ஆண்டு வெளியிட்ட அறிக்கையை இலங்கை மனித உரிமைகள் ஆணைக்குழுவின் உத்தியோகபூர்வ இணைத்தளத்தில் பதிவேற்ற நடவடிக்கை எடுத்துள்ளோம்.” – என்று அவர்கள் பதிலளித்தனர்.

By admin