• Fri. Nov 7th, 2025

24×7 Live News

Apdin News

செம்மணியில் மீட்கப்பட்ட பிற பொருட்கள் தொடர்பில் CID விசாரணை அறிக்கையும் சமர்ப்பிப்பு

Byadmin

Nov 7, 2025


இலங்கையின் இரண்டாவது பெரிய மனிதப் புதைகுழியில் இருந்து மீட்கப்பட்ட பிற பொருள் ஒன்று, நான்கு ஜனாதிபதிகளின் ஆட்சிக் காலப்பகுதியில் தயாரிக்கப்பட்டிருக்கலாம் என குற்றப் புலனாய்வுத் திணைக்களம் தெரிவித்துள்ளது.

யாழ்ப்பாணத்தில் உள்ள செம்மணி சித்துப்பாத்தி இந்து மயான மனிதப் புதைகுழி தொடர்பான வழக்கு, நவம்பர் 3, 2025 திங்கட்கிழமை, யாழ்ப்பாணம் நீதிபதி செல்வநாயகம் லெனின்குமார் முன்னிலையில் விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்பட்டது.

மனிதப் புதைகுழியில் இருந்து மீட்கப்பட்ட பிற பொருட்களில் ஒன்றான செருப்பு 1980 மற்றும் 1995 க்கு இடையில் தயாரிக்கப்பட்டிருக்கலாம் என குற்றப் புலனாய்வுத் திணைக்களம் நீதிமன்றத்தில் அறிக்கை சமர்ப்பித்துள்ளதாக, நீதிமன்ற நடவடிக்கைகள் நிறைவடைந்த பின்னர், ஊடகங்களுக்கு கருத்து வெளியிட்ட பாதிக்கப்பட்டவர்கள் சார்பான சட்டத்தரணி வி.எஸ். நிரஞ்சன் தெரிவித்துள்ளார்.

“குற்றப்புலனாய்வு பிரிவினரால் அறிக்கை ஒன்று தாக்கல் செய்யப்பட்டது. 25ஆவது சான்று பொருளான செருப்பு குறித்த அறிக்கை தாக்கல் செய்யப்பட்டது. அந்த அறிக்கையில் அந்த பாட்டா நிறுவனத்தினால் 39 ரூபாய் 90 சதம் என விலை குறிக்கப்பட்ட அந்த செருப்பு, 1980 இற்கும் 1995ஆம் ஆண்டுக்கும் உட்பட்டதாக இருக்கலாம் என அறிக்கை ஒன்று தாக்கல் செய்யப்பட்டுள்ளது. ”

1986ஆம் ஆண்டு இராணுவ உறுப்பினர்கள் குழுவால் பாலியல் வன்கொடுமை செய்யப்பட்டு கொல்லப்பட்ட மாணவி கிருஷாந்தி குமாரசாமி மீதான விசாரணையின்போது செம்மணியில் பல மனிதப் புதைகுழிகள் இருப்பது முதன்முதலில் தெரியவந்தது.

மனித எலும்புகளுடன், செம்மணி புதைகுழியிலிருந்து இதுவரை மீட்கப்பட்ட பிற பொருட்களில் குழந்தை பால் போத்தல், ஒரு பொம்மை உள்ளிட்ட  விளையாட்டுப் பொருட்கள, சிறுவர் காலணிகள் மற்றும் பாடசாலைப் பை ஆகியவை அடங்கும்.

45 நாட்கள் நீடித்த இரண்டாம் கட்ட அகழ்வாய்வு செப்டெம்பர் 6, 2025 அன்று நிறைவடைந்த நேரத்தில், ஒரு குழந்தையின் எலும்பு உட்பட 239 எலும்புக்கூடுகள் புதைகுழியிலிருந்து மீட்கப்பட்டன.

மீட்கப்பட்ட மனித எலும்புகள் குறித்த மேலதிக ஆய்வுகளுக்கான பாதீட்டை, சட்ட வைத்திய அதிகாரி செல்லையா பிரணவன் நீதிமன்றில் சமர்ப்பித்துள்ளதாக சட்டத்தரணி வி.எஸ். நிரஞ்சன் தெரிவித்துள்ளார்.

“ஏற்கனவே எடுக்கப்பட்ட 240 மனித எலும்புக்கூடுகளை ஆய்வு செய்து அது குறித்து அறிக்கை சமர்ப்பிப்பதற்கான பாதீடு இன்று நீதிமன்றில் சமர்ப்பிக்கப்பட்டது. மேலும் அதற்கென பணியாற்றுவதற்காக, சட்ட வைத்திய அதிகாரிகளான செல்லையா பிரணவன், மயூரதன்  உள்ளிட்ட 7  நிபுணர்களின் பெயர்களும் பரிந்துரைக்கப்பட்டு அறிக்கை நீதிமன்றில் சமர்ப்பிக்கப்பட்டது. இந்த விடயம் குறித்து ஆராய்வதற்காக டிசம்பர் 15ஆம் திகதி வழக்கு விசாரணை இடம்பெறவுள்ளது.”

இந்த விடயம் குறித்து ஆராய்வதற்காக டிசம்பர் 15, 2025 அன்று நீதிமன்றில் விசாரணை இடம்பெறவுள்ளதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

நீதிமன்ற நடவடிக்கைகள் முடிவடைந்த பின்னர், யாழ்ப்பாண நீதிபதி எஸ். லெனின்குமார், சட்ட வைத்திய அதிகாரி செல்லையா பிரணவன், சட்டத்தரணிகளான வி.எஸ். நிரஞ்சன் மற்றும் ஞா.ரணிதா மற்றும் காணாமல் போன ஆட்கள் பற்றிய அலுவலகத்தின் (OMP) பிரதிநிதிகள் ஆகியோர் செம்மணி மனித புதைகுழியை பார்வையிட்டனர்.

மழைநீரால் ஏற்கனவே வெள்ளத்தில் மூழ்கியுள்ள செம்மணி மனித புதைகுழியில் மீண்டும் அகழ்வாய்வைத் ஆரம்பிப்பது குறித்த தீர்மானத்தை ஜனவரி 19, 2026 வரை ஒத்திவைக்க நீதிபதி உத்தரவிட்டுள்ளார்.

செம்மணி மனித புதைகுழி தொடர்பான வழக்கு, ஒக்டோபர் 13, 2025 அன்று யாழ்ப்பாணம் நீதிபதி செல்வநாயகம் லெனின்குமார் முன்னிலையில் விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்பட்டது.

அகழ்வாய்வுப் பணிகளுக்காகக் கோரப்பட்ட 1.9 மில்லியன் ரூபாய் கிடைக்கப்பெற்றுள்ளதாக காணாமல் போன ஆட்கள் பற்றிய அலுவலகத்தின் (OMP) சட்டத்தரணி பூரணி ஜோசப் மரியநாயகம், வழக்கு விசாரணையின் பின்னர் ஊடகங்களுக்குத் தெரிவித்தார்.

“மூன்றாம் கட்ட அகழ்வாய்வுப் பணிகளுக்கான நிதி எங்களுக்குக் கிடைத்துள்ளது. நீதி அமைச்சிலிருந்து கோரப்பட்ட 19 மில்லியன் ரூபாய் எங்களுக்குக் கிடைத்துள்ளது.”

By admin