0
“செம்மணி படுகொலை வழக்கில் சர்வதேச கண்காணிப்பு, விசாரணைக்கு ஜனாதிபதி அநுர உடன்பட வேண்டும். அதிலே, லான்ஸ் கோப்ரல் சோமரத்ன ராஜபக்ஷ சுதந்திரமாக சாட்சியம் அளிக்க வேண்டும். ஆனால், இவற்றுக்கு முன்னர், இன்று சிறையில் இருக்கும் லான்ஸ் கோப்ரல் சோமரத்ன ராஜபக்ஷவுக்கு உடனடியாக அதியுயர் விசேட பாதுகாப்பு வழங்கப்பட வேண்டும்.” – என்று வலியுறுத்தியுள்ளார் தமிழ் முற்போக்குக் கூட்டணியின் தலைவர் மனோ கணேசன்.
இது தொடர்பில் அவர் நேற்று வெளியிட்ட அறிக்கையில் தெரிவிக்கப்பட்டவை வருமாறு:-
“கிருஷாந்தி குமாரசுவாமி படுகொலை குற்றவாளி லான்ஸ் கோப்ரல் சோமரத்ன ராஜபக்ஷவின் மனைவி திருமதி எஸ்.சி. விஜயவிக்கிரம, ஜனாதிபதி அநுரகுமாரவுக்கு கடிதம் எழுதியுள்ளார். அதன் நகல்களை பிரதமர் ஹரிணி அமரசூரியவுக்கும் அனுப்பியுள்ளார். ஐ. நாவுக்கும் அனுப்பி யுள்ளார். அந்தக் கடிதத்தில் தனது கணவர் தன்னிடம் கூறிய விடயங்களை, அவர் எழுதியுள்ளார். ஆகவே, இன்று இந்தக் கடிதம், அநுரகுமார திஸநாயக்கவின் ‘கோர்ட்டில்’ நிற்கின்றது.
சர்வதேச கண்காணிப்பு விசாரணைக்கு ஜனாதிபதி அநுர உடன்பட வேண்டும். அதிலே லான்ஸ் கோப்ரல் சோமரத்ன ராஜபக்ஷ சுதந்திரமாக சாட்சியம் அளிக்க வேண்டும். ஆனால், இவற்றுக்கு முன், இன்று சிறையில் இருக்கும் லான்ஸ் கோப்ரல் சோமரத்ன ராஜபக்ஷவுக்கு, உடனடியாக அங்கே அதியுயர் விசேட பாதுகாப்பு வழங்கப்பட வேண்டும்.
இது தொடர்பில், அரசியல் சிவில் சமூகமாக நாம் கூட்டு மேல் நடவடிக்கைக்கு தயாராவோம். ஐ.நா. மனித உரிமைகள் ஆணையர் வோல்கர் டர்க்கிடம் நாம் அதிகாரபூர்வமாக கோரிக்கை விடுப்போம். பிரசித்தி பெற்ற சித்திரவதை, பாலியல் வல்லுறவு, படுகொலை வழக்கில் தண்டனை பெற்ற குற்றவாளி லான்ஸ் கோப்ரல் சோமரத்ன ராஜபக்ஷ, தனக்கு ஆணையிட்ட மேலதிகாரிகளை அடையாளம் காட்டத் தயார் என்கிறார். இலங்கை வரலாற்றில் இப்படியோர் இராணுவத்தைச் சேர்ந்த நபர் ஒப்புதல் வாக்குமூலம் அளித்து, தனக்கு ஆணை இட்ட மேலதிகாரிகளை அடையாளம் காட்டத் தயார் என்று கூறவில்லை.
ஆகவே, இதை ஏற்று மேல் நடவடிக்கை எடுக்க அநுரகுமார அரசாங்கம் முன் வர வேண்டும். சர்வதேச நெருக்குதல்களை முறையாகத் தர ஐ. நா. மனித உரிமைகள் ஆணையகமும் முன்வர வேண்டும். இதைச் செய்ய முடியா விட்டால், இது ஓர் அரசாங்கமாகவோ, அது ஓர் ஐ.நா. சபையாகவோ இருக்க முடியாது. இது இன்று சர்வதேச விவகாரம் ஆகி விட்டதை அநுரகுமாரவும் வோல்கர் டர்க்கும் உணர வேண்டும். அதனால்தான், அநுரவுக்கு செம்மணி விவகாரம் ஓர் அக்கினிப் பரீட்சை என்று அன்றே சொன்னேன். இன்று மீண்டும் கூறுகிறேன்.” – என்றுள்ளது.