பட மூலாதாரம், BBC/ Xiqing Wang
எட்டு வயதான டிம்மி, மிகவும் பதற்றத்துடன், தனக்குள் முணுமுணுத்துக் கொண்டு, செஸ் விளையாட்டில் செயற்கை நுண்ணறிவால் இயங்கும் ஒரு ரோபோவை வெல்ல முயற்சி செய்கிறார்.
இந்த நிகழ்வு நடப்பது, ஒரு செயற்கை நுண்ணறிவு ஷோரூமிலோ அல்லது ஓர் ஆய்வகத்திலோ இல்லை. இந்த ரோபோ சீனாவின் தலைநகரான பெய்ஜிங்கில் உள்ள ஓர் அடுக்குமாடிக் குடியிருப்பில் டிம்மியுடன் வசித்து வந்தது.
இந்த ரோபோ வீட்டிற்கு வந்த முதல் நாள், இரவு தூங்கச் செல்வதற்கு முன்பு, தனது சிறிய ரோபோ நண்பரை டிம்மி கட்டிப் பிடித்தார். அப்போது அதற்குப் பெயர் எதுவும் வைக்கப்படவில்லை.
“இந்த ரோபோ ஒரு ஆசிரியர் அல்லது ஒரு நண்பரைப் போன்றது” என்று டிம்மி கூறினார். செஸ் விளையாட்டில், அவர் எடுக்கவுள்ள அடுத்த நகர்வை டிம்மி தனது அம்மாவிடம் காட்டினார்.
சில நிமிடங்கள் கழித்து திரையில் வட்டமான அதன் கண்களைச் சிமிட்டியபடி, அந்த ரோபோ “வாழ்த்துகள்! நீங்கள் வெற்றி பெற்றீர்கள்” என்று கூறியது.
அது அடுத்த ஆட்டத்தைத் தொடங்க, செஸ் காய்களை மீண்டும் அடுக்கி வைக்கத் தொடங்கியது. மேலும் மாண்டரின் மொழியில், “உங்களின் திறமையை நான் பார்த்தேன், அடுத்த முறை நான் சிறப்பாகச் செயல்பட முயல்கிறேன்” என்று ரோபோ கூறியது.
சீனா, 2030ஆம் ஆண்டுக்குள் தொழில்நுட்ப வல்லரசாக மாற முயற்சி செய்து வருகிறது. அதன் ஒரு பகுதியாக செயற்கை நுண்ணறிவை அந்நாடு பயன்படுத்தி வருகின்றது.
சீனாவில் தயாரிக்கப்பட்ட செயற்கை நுண்ணறிவு சாட்பாட்டான டீப்சீக், கடந்த ஜனவரி மாதம் உலகின் கவனத்தை ஈர்த்தது. இது சீனாவுடைய லட்சியத்தின் முதல் படியாகவே கருதப்பட்டது.
செயற்கை நுண்ணறிவு வனிகங்களில் அதிக அளவில் முதலீடு செய்யப்படுகிறது. இதனால் இந்த நிறுவனங்களுக்கு இடையே போட்டிகள் பெறுகியுள்ளன. செயற்கை நுண்ணறிவை உருவாக்கி விற்பனை செய்யும் 4,500க்கும் மேற்பட்ட நிறுவனங்கள் தற்போது உள்ளன.
சீனாவில் பெய்ஜிங்கில் உள்ள பள்ளிகளில், இந்த ஆண்டின் இறுதியில் தொடக்க மற்றும் நடுநிலைப் பள்ளி மாணவர்களுக்கு செயற்கை நுண்ணறிவுப் பாடங்கள் அறிமுகப்படுத்தப்பட உள்ளன. மேலும் பல்கலைக் கழகங்களில் செயற்கை நுண்ணறிவு படிப்புக்கான இடங்கள் அதிகரிக்கப்பட்டுள்ளன.
“நாம் செயற்கை நுண்ணறிவுடன் இணைந்து வாழ வேண்டும். இதை கண்டிப்பாகத் தவிர்க்க முடியாது. குழந்தைகள் இதை விரைவாகக் கற்றுக்கொள்ள வேண்டும். நாமும் அதை நிராகரிக்கக்கூடாது” என்று டிம்மியின் தாயார் யான் ஸூ கூறினார்.
தனது மகன், செஸ் போன்ற விளையாட்டுகளைக் கற்றுக்கொள்ள வேண்டும் என்று யான் ஸூ ஆர்வமாக இருக்கிறார். இந்த ரோபோவால் இந்த விளையாட்டுகளை விளையாட முடிகிறது. இதனால் இந்த ரோபோவை 800 அமெரிக்க டாலர்கள் கொடுத்து வாங்கியது ஒரு நல்ல முதலீடு என்று யான் ஸூ கருதுகிறார். ரோபோவை உருவாக்கியவர்கள், அதில் மொழிகளைக் கற்றுக்கொடுக்கும் திட்டத்தையும் சேர்க்கத் திட்டமிட்டுள்ளனர்.
தற்போதுள்ள நிலைமையை எதிர்நோக்கியே, 2017ஆம் ஆண்டு சீன கம்யூனிஸ்ட் கட்சி, நாட்டின் முன்னேற்றத்திற்கு செயற்கை நுண்ணறிவு, “முக்கிய உந்து சக்தியாக” இருக்கும் என்று அறிவித்தது. மந்த நிலையில் உள்ள சீனாவின் பொருளாதாரம், அதன் மிகப்பெரிய வர்த்தக கூட்டாளியான அமெரிக்காவின் வரி விதிப்பால் போராடி வருகிறது. இந்நிலையில் அதிபர் ஷி ஜின்பிங் தற்போது செயற்கை நுண்ணறிவை மலை போல நம்பியுள்ளார்.
மேம்பட்ட தொழில்நுட்பத்தில் முன்னிலை பெறுவதற்காக அமெரிக்காவுடன் போட்டியிடும் சீனா, அடுத்த 15 ஆண்டுகளில் 10 டிரில்லியன் சீன யுவானை இதற்காக முதலீடு செய்யத் திட்டமிட்டுள்ளது.
சீன அரசின் வருடாந்திர அரசியல் கூட்டத்தில் செயற்கை நுண்ணறிவு நிதிக்கு மற்றுமோர் ஊக்கம் கிடைத்தது. சீனா மேம்பட்ட கணினி சிப்புகளை பெறுவதை அமெரிக்கா கடினமாக்கிய பிறகும், சீன நிறுவனங்களை வர்த்தகத் தடுப்புப் பட்டியலில் வைத்த பிறகும், சீனா அதன் சொந்த செயற்கை நுண்ணறிவு வளர்ச்சியில் முதலீடு செய்ய 60 பில்லியன் யுவான் நிதியை உருவாக்கியது.
ஆனால் சீன நிறுவனங்களால் இந்தத் தடைகளைத் தகர்க்க முடியும் என்பதற்கான உதாரணமாக டீப்சீக் இருக்கிறது. இதன் வளர்ச்சி தொழில்நுட்ப வல்லுநர்களையும் திகைக்க வைத்தது. சீனா இவ்வளவு வேகமாக முன்னேறும் என்பதை அவர்கள் எதிர்பார்க்கவில்லை.
டிராகன்களுக்கு இடையே ஒரு பந்தயம்
பட மூலாதாரம், BBC/ Joyce Liu
தனது நிறுவனம் தயாரித்த செஸ் விளையாடும் ரோபோவை பல்வேறு போட்டிகளில் ஆறு மாதங்களாகச் சந்தைப்படுத்திய பிறகு, டாமி டாங் மக்கள் பயன்பாட்டிற்கு வழங்கியுள்ளார்.
டிம்மியின் ரோபோ, சென்ஸ்ரோபோட் என்ற அதே நிறுவனத்தில் இருந்து வருகிறது. இது பல்வேறு செயல் திறன்களை உள்ளடக்கியது. 2022ஆம் ஆண்டில் செஸ் கிராண்ட் மாஸ்டர்களை விளையாட்டில் தோற்கடித்த மேம்பட்ட ரோபோக்களை சீன அரசு ஊடகங்கள் பாராட்டின.
“பெற்றோர்கள் ரோபோவின் விலையைப் பற்றிக் கேட்பார்கள். பின்னர் நான் எங்கிருந்து வருகிறேன் என்று கேட்பார்கள். அவர்கள் நான் அமெரிக்கா அல்லது ஐரோப்பாவில் இருந்து வருவேன் என்று எதிர்பார்க்கிறார்கள். நான் சீனாவில் இருந்து வருகிறேன் என்று சொன்னால் அவர்கள் ஆச்சரியப்படுவார்கள்,” என்று டாமி டாங் சிரித்துக் கொண்டே கூறினார்.
“நான் சீனாவில் இருந்து வருகிறேன் என்று சொன்னால் ஒன்று அல்லது இரண்டு விநாடிகள் அவர்கள் வாயடைத்துப் போவார்கள்.”
டாமி டாங்கின் நிறுவனம் 100,000க்கும் மேற்பட்ட ரோபோக்களை விற்பனை செய்துள்ளது. தற்போது அமெரிக்காவின் முக்கிய பல்பொருள் அங்காடி சங்கிலியான காஸ்ட்கோவுடன் ஒப்பந்தம் செய்துள்ளது.
பொறியியல் துறையில் சீனாவின் வெற்றிக்கான ரகசியங்களில் ஒன்று அந்நாட்டின் இளைஞர்கள். 2020ஆம் ஆண்டில், அந்நாட்டில் 3.5 மில்லியனுக்கும் அதிகமான மாணவர்கள் அறிவியல், தொழில்நுட்பம், பொறியியல், கணிதம் (STEM) ஆகியவற்றில் பட்டப் படிப்புகளை முடித்தனர்.
இது உலகின் வேறு எந்த நாட்டையும்விட அதிக எண்ணிக்கை. மேலும் சீனா இவர்களின் திறனை முழுமையாகப் பயன்படுத்த விழைகின்றது. “கல்வி, அறிவியல் மற்றும் திறமைகளை உருவாக்குவது ஒரு பகிரப்பட்ட பொறுப்பு,” என்று சீன அதிபர் கடந்த வாரம் அவரது கட்சித் தலைவர்களிடம் கூறினார்.
கடந்த 1970களின் பிற்பகுதியில் சீனா தனது பொருளாதாரத்தை உலக நாடுகளுக்குத் திறந்துவிட்டது. அதிலிருந்து, “திறமை மற்றும் தொழில்நுட்பத்தை மேம்படுத்தும் செயல்முறைகளைச் செய்து வருகின்றது,” என்று ஷாங்காயை தளமாகக் கொண்ட வேல்ஸ்போட் நிறுவனத்தின் துணைத் தலைவர் அபோட் லியு கூறுகிறார்.
இந்த நிறுவனம் செயற்கை நுண்ணறிவு பொம்மைகளை உருவாக்குகிறது.”செயற்கை நுண்ணறிவின் இந்த சகாப்தத்தில், எங்களிடம் ஏராளமான பொறியாளர்கள் உள்ளனர், அவர்கள் கடினமாக உழைப்பவர்கள்” என்றும் அபோட் லியு கூறினார்.
பட மூலாதாரம், BBC/ Xiqing Wang
மூன்று வயது குழந்தைகள்கூட கணினி குறியீடுகளைக் கற்க உதவும் பொம்மைகளை இந்த நிறுவனம் உருவாக்கி வருகிறது. இந்த பொம்மைகளின் ஒவ்வொரு பாகத்துடனும் ஒரு கணினி குறியீடு புத்தகம் வருகிறது.
குழந்தைகள் என்ன மாதிரியான பொம்மைகளைக் கட்டமைக்க விரும்புகிறார்கள் என்பதைத் தேர்ந்தெடுத்து அதை எப்படிச் செய்வது என்று அவர்களே கற்றுக்கொள்ளலாம். ஒரு பொம்மையின் விலை குறைந்தபட்சம் 40 டாலர்கள்.
“மற்ற நாடுகளும் செயற்கை நுண்ணறிவு ரோபோக்களை தயாரித்துள்ளன. ஆனால் அதன் செயல்திறனைப் பொறுத்தவரை, சீனாவின் ரோபோக்கள் சிறப்பாகச் செயல்படுகின்றன” என்று லியு வலியுறுத்துகிறார்.
டீப்சீக் சாட்பாட்டின் வெற்றி அதன் தலைமை நிர்வாக அதிகாரியான லியாங் வென்ஃபெங்கை அந்நாட்டில் பிரபலமாக்கியுள்ளதாகவும் இது சீனாவின் செயற்கை நுண்ணறிவு வணிகத்திற்கு 10 பில்லியன் யுவான் மதிப்புள்ள இலவச விளம்பரத்தைப் போன்றது என்றும் அவர் கூறினார்.
“செயற்கை நுண்ணறிவு ஒரு கண்டுபிடிப்பு மட்டும்அல்ல, அது அதைவிட அதிகமானது என்பதை பொதுமக்களுக்கு நிரூபித்துள்ளது. இது மக்களின் வாழ்க்கையை மாற்றும் ஆற்றலைக் கொண்டுள்ளது. இதனால் மக்கள் மத்தியில் அதிக ஆர்வத்தை இது உருவாக்கியுள்ளது.”
டீப்சீக், யூனிட்ரீ ரோபோடிக்ஸ், டீப் ரோபோடிக்ஸ், பிரெய்ன்கோ, கேம் சயின்ஸ், மனிகோர் டெக் போன்ற ஆறு உள்நாட்டு செயற்கை நுண்ணறிவு நிறுவனங்கள் தற்போது சீனாவின் ஆறு சிறிய டிராகன்கள் என்று இணையத்தில் பரவலாக அழைக்கப்படுகின்றன.
அவற்றில் சில, சமீபத்தில் ஷாங்காயில் நடந்த செயற்கை நுண்ணறிவுக் கண்காட்சியில் பங்கேற்றன. இந்தக் கண்காட்சியில் செயற்கை நுண்ணறிவு வணிகத்தில் உள்ள மிகப்பெரிய சீன நிறுவனங்கள் தயாரித்த மேம்பட்ட கண்டுபிடிப்புகள் பார்வையாளர்களுக்குக் காட்சிபடுத்தப்பட்டன.
இந்தக் கண்காட்சியின் ஒரு பகுதியில், சிவப்பு மற்றும் நீல ஜெர்சிகளை அணிந்த மனித உருவம் போன்ற ரோபோக்கள் இரண்டு அணிகளாகப் பிரிந்து கால்பந்து விளையாடி கொண்டிருந்தன. ரோபோக்கள் மோதிக் கொண்டபோது அவை கீழே விழுந்தன. இதில் நகைச்சுவையூட்ட, அடிபட்ட ரோபோக்களில் ஒன்று ஸ்ட்ரெச்சரில் மைதானத்தில் இருந்து வெளியே கொண்டு செல்லப்பட்டது.
டீப்சீக்கின் வெற்றிக்குப் பிறகு, செயற்கை நுண்ணறிவுத் துறையில் பணியாற்றும் அனைவரும் மிகவும் உற்சாகமடைந்தனர். “டீப்சீக் எங்களுக்கு உலக அளவிலான அடையாளத்தைப் பெற்றுக் கொடுத்தது” என்று 26 வயது பொறியாளர் யு ஜிங்ஜி கூறினார்.
பட மூலாதாரம், BBC/Joyce Liu
செயற்கை நுண்ணறிவில் சீனாவின் திறனை உலகம் அறிந்து கொள்ளும்போது, அதைப் பயன்படுத்துபவர்களைப் பற்றிய தகவல்களை அதிக அளவில் சேகரிக்க சீன அரசு அனுமதிக்கிறது என்பது பற்றிய கவலைகளும் உள்ளன.
செயற்கை நுண்ணறிவுக்கு தரவுகள் தேவைப்படுகின்றன. அது எவ்வளவு அதிகமாகப் பெறுகிறதோ, அவ்வளவு புத்திசாலித்தனமாக அது தன்னைத் தானே மாற்றிக் கொள்கிறது. சீனா அமெரிக்காவைவிட அதிகமான தொலைபேசி பயனர்களைக் கொண்டுள்ளது. எனவே இந்தத் தரவுகளைப் பெறுவதில் சீனாவுக்கு ஒரு பெரிய நன்மை இருக்கிறது.
டீப்சீக், ரெட்நோட் அல்லது டிக்டோக் போன்ற சீன செயலிகள் சேகரிக்கும் தரவுகளை சீன கம்யூனிஸ்ட் கட்சி அணுக முடியும் என்று மேற்குலக நாடுகள் மற்றும் அதன் கூட்டாளி நாடுகளில் உள்ள பல நிபுணர்கள் நம்புகின்றனர். இதற்குச் சான்றாக அந்நாட்டின் தேசிய புலனாய்வுச் சட்டத்தைச் சிலர் சுட்டிக்காட்டுகின்றனர்.
ஆனால் டிக்டோக்கின் உரிமையாளரான பைட் டான்ஸ் உள்ளிட்ட சீன நிறுவனங்கள், தனியார் நிறுவனங்கள் மற்றும் தனிப்பட்ட தரவைப் பாதுகாக்க சட்டம் அனுமதிக்கிறது என்று கூறுகின்றன. இருப்பினும், டிக்டோக்கில் உள்ள அமெரிக்க பயனர்களின் தரவு சீன அரசின் கைகளுக்குச் செல்லக்கூடும் என்ற சந்தேகம் அமெரிக்காவுக்கு எழுந்ததால், அமெரிக்கா இந்த செயலியைத் தடை செய்யும் முடிவைத் தூண்டியது.
தனியுரிமை குறித்த கவலைகள் தேசிய பாதுகாப்பு சிக்கல்களைச் சந்திக்கும்போது, இது டீப்சீக் சாட்பாட்டின் பயன்பாட்டைப் பாதிக்கிறது. தென் கொரியா டீப்சீக்கின் புதிய பதிவிறக்கங்களைத் தடை செய்தது. அதே நேரத்தில் தைவானும் ஆஸ்திரேலியாவும் அரசாங்கத்தால் வழங்கப்பட்ட ஸ்மார்ட்போன்களில் இருந்து டீப்சீக்கின் பயன்பாட்டைத் தடை செய்துள்ளன.
சீன நிறுவனங்கள் இந்தச் சிக்கல்களை அறிந்துள்ளன. டாமி டாங் தனது நிறுவனத்திடம், “தனியுரிமையை எந்தச் சூழ்நிலையிலும் மீற முடியாத ஒன்று” என்பதை வழியுறுத்தியுள்ளார். செயற்கை நுண்ணறிவில் முன்னிலை வகிக்கும் சீனாவும் இது சவாலாக இருக்கும் என்பதை உணர்ந்துள்ளது.
“டீப்சீக்கின் விரைவான வளர்ச்சி மேற்கத்திய நாடுகள் சிலவற்றிடம் இருந்து விரோதமான எதிர்வினைகளைத் தூண்டியுள்ளது,” என்று அரசு நடத்தும் பெய்ஜிங் டெய்லியின் ஒரு செய்தி தெரிவித்தது.
“சீனாவின் செயற்கை நுண்ணறிவு மாதிரிகளுக்கான மேம்பாட்டு சூழல் மிகவும் நிச்சயமற்றதாக உள்ளது” என்று மேலும் கூறியது.
ஆனால் சீனாவின் செயற்கை நுண்ணறிவு நிறுவனங்கள் சோர்வடையவில்லை. மாறாக, மலிவு விலையில் தயாரிப்புகளைக் கண்டுபிடிப்பதன் மூலம் வெற்றி பெறலாம் என்று அவர்கள் நினைக்கிறார்கள். அதனால் டீப்சீக், குறைந்த செலவில் சாட்ஜிபிடியை போலவே சிறப்பாகச் செயல்பட்டு இந்தத் தொழில்துறையை அதிர்ச்சிக்குள்ளாக்கியது.
பட மூலாதாரம், BBC/ Joyce Liu
குறைந்த விலையில் அதிகமாக எப்படித் தயாரிப்பது என்பது முக்கிய சவாலாக இருக்கிறது. “இதுதான் எங்கள் குறிக்கோள்” என்று டாமி டாங் கூறுகிறார்.
செஸ் காய்களை நகர்த்தப் பயன்படுத்தப்படும் ரோபோக்களின் கைகளை உற்பத்தி செய்வது மிகவும் விலை உயர்ந்தது. இதனால் ரோபோவின் விலை 40 ஆயிரம் டாலர்களாக உயரும் என்பதை அவரது நிறுவனம் மதிப்பிட்டது.
எனவே, பொறியாளர்களின் பணிகளைச் செய்யவும், உற்பத்தி செயல்முறையை மேம்படுத்தவும் அவர்கள் செயற்கை நுண்ணறிவைப் பயன்படுத்த முயன்றனர். இதன் மூலம் செலவை 1000 டாலர்களாக குறைத்துள்ளதாக டாமி டாங் கூறுகிறார்.
“இதுவொரு புதிய கண்டுபிடிப்பு. செயற்கை பொறியியல் இப்போது உற்பத்தி செயல்முறையில் ஒருங்கிணைக்கப்பட்டுள்ளது” என்றும் அவர் தெரிவித்தார்.
சீனா பரந்த அளவில் செயற்கை நுண்ணறிவைப் பயன்படுத்துவதால், இது மிகப்பெரிய தாக்கங்களை ஏற்படுத்தக்கூடும். அரசு ஊடகங்கள் ஏற்கெனவே மனித உருவ ரோபோக்கள் நிறைந்த தொழிற்சாலைகளைப் பற்றிய செய்திகளை வெளியிட்டுள்ளன.
ஜனவரியில், சீன அரசு வேகமாக முதிர்ச்சி அடைந்து வரும் மக்கள் தொகையைக் கவனித்துக் கொள்ள உதவும் வகையில் செயற்கை நுண்ணறிவு மூலம் இயங்கும் மனித ரோபோக்களின் வளர்ச்சியை ஊக்குவிப்பதாகக் கூறியது.
“தொழில்நுட்ப சுயசார்பு” சீனாவின் முக்கியக் குறிக்கோள் என்று அதிபர் ஷி ஜின்பிங் பலமுறை அறிவித்துள்ளார். அதாவது அமெரிக்க ஏற்றுமதி கட்டுப்பாடுகளை ஈடுசெய்ய, மேம்பட்ட கணினி சிப்புகளை சீனா சொந்தமாகத் தயாரிக்க விரும்புகிறது.
செயற்கை நுண்ணறிவு வளர்ச்சி நீண்ட காலம் எடுக்கும் என்பதை சீன அதிபர் அறிந்துள்ளார். டீப்சீக் வெற்றி பெற்றாலும், அவர்கள் அதிகமாகக் கொண்டாடுவதில்லை. சீனா, இன்னும் செயற்கை நுண்ணறிவில் முன்னணியில் இருக்கும் நாடுகளுடன் ஈடாக இருக்க முயல்கிறது என்று பெய்ஜிங் டெய்லி சமீபத்தில் தெரிவித்தது.
சீனா இறுதியில் வெற்றி பெறும் என்று நம்பும் ஒரு மாரத்தானுக்கு தயாராகும் வகையில், அதிபர் ஷி ஜின்பிங் செயற்கை நுண்ணறிவு, ரோபோக்கள் மற்றும் மேம்பட்ட தொழில்நுட்பத்தில் அதிக முதலீடு செய்து வருகிறார்.
– இது, பிபிசிக்காக கலெக்டிவ் நியூஸ்ரூம் வெளியீடு.