பட மூலாதாரம், Getty Images
-
- எழுதியவர், விஜயானந்த் ஆறுமுகம்
- பதவி, பிபிசி தமிழ்
-
தனது எட்டு சவரன் நகை திருடப்பட்ட சம்பவத்தில், குற்றத்தில் ஈடுபட்ட நபர்களைக் காவல்துறை கண்டறியாததால் இழப்பீடு கோரி வழக்கு தொடர்ந்த பெண்ணுக்கு 1 லட்ச ரூபாயை வழங்குமாறு உயர் நீதிமன்ற மதுரைக் கிளை அண்மையில் உத்தரவிட்டுள்ளது.
“தனி நபர்களுக்கு எதிராக குற்றங்களில் ஈடுபட்டாலும் அது அரசுக்கு எதிரான குற்றமாக வரையறுக்கப்பட்டுள்ளதால் இழப்பீடு வழங்குவது கட்டாயமாக்கப்பட்டுள்ளது’ என, சட்ட வல்லுநர்கள் கூறுகின்றனர்.
குற்ற நிகழ்வுகளில் பாதிக்கப்பட்டோர் இழப்பீடு பெறுவது தொடர்பாக சட்டம் சொல்வது என்ன? எந்தெந்த வழக்குகளில் இழப்பீடு கோரலாம்?
திருச்சி மாவட்டம், சிந்தாமணியைச் சேர்ந்த ஜோன் ஆன்ட்ரூஸ் பூர்ணிமா என்பவர் உயர் நீதிமன்ற மதுரைக் கிளையில் வழக்கு ஒன்றைத் தாக்கல் செய்திருந்தார்.
அவர் தனது மனுவில், ‘2022 ஆம் ஆண்டு திருச்சியில் இருந்து அரசுப் பேருந்தில் கீரனூருக்குப் பயணம் செய்தேன். அப்போது தனது எட்டு சவரன் நகை திருடு போய்விட்டது. இதுதொடர்பாக கீரனூர் காவல்நிலையத்தில் புகார் மனு அளித்தேன். தற்போது வரை எந்த நடவடிக்கையும் இல்லை’ எனக் கூறியிருந்தார்.
இதனால் தனக்கு இழப்பு ஏற்பட்டதாகக் கூறி உரிய இழப்பீட்டை வழங்குவதற்கு உத்தரவிடுமாறு மனுவில் குறிப்பிட்டிருந்தார்.
வழக்கு விசாரணைக்கு வந்தபோது, ‘நகைப் பறிப்பு வழக்குகளில் குற்றத்தில் ஈடுபட்ட நபர்களைக் கண்டறிய முடியவில்லை என்றாலும் பாதிக்கப்பட்ட நபருக்கு, சட்டப்படி நிவாரணம் அளிக்க வேண்டும்’ என நீதிபதிகள் தெரிவித்தனர்.
‘பாதிக்கப்பட்ட பெண்ணுக்கு இழப்பீடு திட்டத்தின்கீழ் ஒரு லட்ச ரூபாயை வழங்க வேண்டும்’ எனவும் உயர் நீதிமன்ற மதுரைக் கிளை உத்தரவிட்டுள்ளது.
குற்ற நிகழ்வுகளில் பாதிக்கப்படும் நபர்கள் நீதிமன்றத்தை அணுகும்போது உரிய நிவாரணம் கிடைப்பதை உறுதி செய்யும் வகையில் நீதிமன்றத்தின் தீர்ப்பு அமைந்துள்ளதாகக் கூறுகிறார், மதுரை உயர்நீதிமன்ற வழக்கறிஞர் இராபர்ட் சந்திரகுமார்.
குற்றச் சம்பவங்களில் பாதிக்கப்பட்டோர், காயம் அடைந்தோர், அவர்களைச் சார்ந்துள்ளவர்கள் மற்றும் அவர்களின் சட்டப்பூர்வ வாரிசுகளின் குறைகளைத் தீர்ப்பதற்கும் குற்றவியல் நடைமுறைச் சட்டத்தில் வழிவகை செய்யப்பட்டுள்ளதாகவும் அவர் பிபிசி தமிழிடம் தெரிவித்தார்.
‘குற்றவியல் நடைமுறைச் சட்டம் பிரிவு 357அ–வின் கீழ் இழப்பீடு வழங்கப்படுகிறது. இதற்கான நிதி, பட்ஜெட் மூலமாக ஒதுக்கப்படுகிறது’ என, தமிழ்நாடு காவல்துறை வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பு கூறுகிறது.
பட மூலாதாரம், Getty Images
‘அரசே வழக்கை ஏற்று நடத்துவது ஏன்?’
“ஒருவரை மற்றொருவர் தாக்கினால், அடித்தவர் குற்றவாளியாகவும் அடிபட்டவர் பாதிக்கப்பட்டவராகவும் இருப்பார். இதில் பாதிக்கப்பட்டவர் காவல்நிலையம் சென்று புகார் கொடுப்பார். அதன்பேரில் விசாரணை நடத்தப்பட்டு முதல் தகவல் அறிக்கை பதிவு செய்யப்படுகிறது” எனக் கூறுகிறார், வழக்கறிஞர் இராபர்ட் சந்திரகுமார்.
“அவ்வாறு முதல் தகவல் அறிக்கை தாக்கல் செய்யப்பட்டுவிட்டால் பாதிக்கப்பட்ட நபரை ‘de facto complainant’ என்கின்றனர். இதன்படி புகார்தாரர் என்பவர் ‘அரசு’ என்பதாக எடுத்துக் கொள்ளப்படுகிறது. வழக்கு நீதிமன்ற விசாரணைக்குச் செல்லும்போது அரசே வழக்கை நடத்துகிறது” எனவும் அவர் குறிப்பிட்டார்.
தொடர்ந்து பேசிய அவர், “திருடுவது, அடிப்பது, கொலை செய்வது, பாலியல் வன்கொடுமையில் ஈடுபடுவது போன்றவை அரசுக்கு எதிரான குற்றங்களாகப் பார்க்கப்படுகின்றன. இவற்றை தனி நபர்கள் செய்தாலும் அது அரசுக்கு எதிரான குற்றம் தான்” என்கிறார்.
“அதுவே, சொத்துப் பிரச்னை, வீட்டு வாடகைப் பிரச்னை அல்லது வரப்புத் தகராறு போன்றவை சிவில் குற்றமாகப் பார்க்கப்படுவதால் இதில் அரசுக்கு எதிரான குற்றமாகப் பார்க்கப்படுவதில்லை” என்கிறார்.
ஒருவரின் குற்றத்துக்கு நீதிமன்றம் தண்டனை விதிக்கிறது. அந்த நபரால் பாதிக்கப்பட்டவருக்கு நிவாரணம் அளிப்பது தொடர்பாக குற்றவியல் நடைமுறைச் சட்டம் 1973ல் கூறப்பட்டுள்ளது. (இந்தச் சட்டத்தை 2024 ஆம் ஆண்டு பிஎன்எஸ்எஸ் (Bharatiya Nagarik Suraksha Sanhita) என்ற பெயரில் இந்திய அரசு மாற்றியது).
இந்தச் சட்டத்தில் 2009 ஆம் ஆண்டு திருத்தம் கொண்டு வரப்பட்டதாகக் கூறும் வழக்கறிஞர் இராபர்ட் சந்திரகுமார், “ஏராளமான வழக்குகளில் குற்றவாளியைக் கண்டறிய முடியவில்லை. ஆனால், பாதிக்கப்பட்டவர்கள் அதிகளவில் உள்ளனர். இவர்களின் நலனுக்காக இத்திருத்தம் கொண்டு வரப்பட்டது” என்கிறார்.

இழப்பீடு திட்டம் சொல்வது என்ன?
அதன்படி, குற்றங்களில் பாதிக்கப்பட்டோருக்கு இழப்பீடு கொடுக்கும் வகையில் இழப்பீடு திட்டம் (state victim compensation scheme) கொண்டு வரப்பட்டது.
நாடு முழுவதும் 2009 ஆம் ஆண்டு டிசம்பர் 31 அன்று இந்தத் திருத்தம் அமல்படுத்தப்பட்டது. அதனைத் தொடர்ந்து தமிழ்நாட்டில் 2013ஆம் ஆண்டு நவம்பர் 30 அன்று அதற்கென தனியாக திட்டம் உருவாக்கப்பட்டது.
“இந்தத் திட்டத்தின்படி, குற்றத்தால் பாதிக்கப்பட்டவர் என்று உறுதி செய்யப்பட்டால் போதும். குற்றவாளி கண்டறியப்பட்டிருக்க வேண்டும் என்றோ, தண்டிக்கப்பட்டிருக்க வேண்டும் என்றோ அவசியம் இல்லை” எனக் கூறுகிறார், வழக்கறிஞர் இராபர்ட் சந்திரகுமார்.
“முன்பு தண்டனை கொடுக்கும்போது தான் இழப்பீடு என்ன என்பதைக் கூறுவார்கள். ஆனால், புதிய திருத்தத்தால் பாதிப்பு உறுதி செய்யப்பட்டாலே இழப்பீட்டைக் கொடுத்தாக வேண்டும்” எனவும் அவர் குறிப்பிட்டார்.
பிஎன்எஸ்எஸ் சட்டப்பிரிவு 395, 396, 326(ஏ), 326 (ஏ) (பி) ஆகிய பிரிவுகளின்படி அமில வீச்சு, காயம் ஏற்படுத்துதல், பாலியல் வன்கொடுமை, கூட்டுப் பாலியல் வன்கொடுமை, பாலியல் வன்கொடுமையில் 16 வயதுக்குட்பட்டோர் மற்றும் 12 வயதுக்குட்பட்டோர் எனக் குற்றத்தின் தன்மை பிரிக்கப்பட்டு இழப்பீடு வழங்கப்படுவதாகக் கூறுகிறார், வழக்கறிஞர் இராபர்ட் சந்திரகுமார்.
தொடர்ந்து பேசிய அவர், “வழக்கின் தன்மையைப் பொறுத்து இழப்பீடு வழங்கப்படுகிறது. காயம், சொத்து இழப்பு, உயிரிழப்பு, மருத்துவம் என மறுவாழ்வு தேவையுள்ள எவருக்கும் இழப்பீடு பெறுவதற்கு இந்தத் திட்டம் வழிவகை செய்கிறது” என்கிறார்.
பட மூலாதாரம், Getty Images
இழப்பீட்டைப் பெறுவது எப்படி?
“குற்றங்களால் பாதிக்கப்பட்ட பொதுமக்கள், மாநிலம் மற்றும் மாவட்ட அளவில் உள்ள சட்டப் பணிகள் ஆணைக் குழுமத்தில் முறையிட்டால் உரிய நிவாரணம் கிடைக்கும்” எனவும் அவர் தெரிவித்தார்.
அதன்படி, இழப்பீடு பெற விரும்பும் நபர் மாநில, மாவட்ட சட்ட ஆணைக் குழுமத்தில் விண்ணப்பிக்கலாம்.
- பாதிக்கப்பட்டவருக்கு ஏற்பட்ட இழப்பு, காயம் தொடர்பான வழக்குகளை சட்ட ஆணைக் குழுமம் ஆய்வு செய்யும்.
- மாநகர காவல் ஆணையர்கள், மாவட்ட காவல் கண்காணிப்பாளர்கள் மூலம் இழப்பீட்டு நிதியை அனுமதிப்பதற்கான முன்மொழிவை அனுப்ப வேண்டும்.
- மாவட்ட சட்டப் பணிகள் ஆணைக் குழுமம் (DLSA) வழங்கிய தொகையை பாதிக்கப்பட்ட நபரின் வங்கிக் கணக்கில் செலுத்துவதற்கு டிஜிபி உத்தரவின்படி காவல் ஆணையர், மாவட்ட காவல் கண்காணிப்பாளர் வழங்கலாம்.
‘இவை அதிக காலத்தை எடுத்துக் கொள்வதால் காவல்துறை தலைமை அலுவலகத்தில் பெறப்படும் கோப்புகளை ஒன்பது வேலை நாட்களுக்குள் சம்பந்தப்பட்ட பிரிவு அதிகாரிகளுக்கு கணினி மூலம் செயல்முறை உத்தரவு வழங்கப்படுகிறது’ என தமிழ்நாடு காவல்துறை தலைமையகம் வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பு ஒன்றில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
தமிழ்நாட்டில் ஒவ்வொரு காலகட்டத்திலும் குற்றங்களால் பாதிக்கப்பட்டோருக்கு இழப்பீடு திட்டத்தின்படி அரசு இழப்பீடு வழங்கி வருகிறது.
பட மூலாதாரம், Getty Images
காவல்துறை டிஜிபி கூறியது என்ன?
கடந்த ஜனவரி 13 அன்று, இதுதொடர்பாக தமிழ்நாடு காவல்துறை தலைமை இயக்குநர் அலுவலகம் செய்தி அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளது. அதில்,
- 2023 ஜூன் முதல் 2024 டிசம்பர் வரை 355 கொலைச் சம்பவங்களில் இறந்தவர் குடும்பங்களுக்கு 8 கோடியே 25 லட்சத்து 73 ஆயிரம் ரூபாய் வழங்கப்பட்டுள்ளது.
- இதே காலகட்டத்தில் பாலியல் வன்கொடுமை வழக்குகளில் பாதிக்கப்பட்ட 105 பேருக்கு 60 லட்சத்து 75 ஆயிரம் வழங்கப்பட்டுள்ளது.
- வரதட்சனை கொடுமையால் பாதிக்கப்பட்டவர்களுக்கு 2023 ஜூன் முதல் 2024 டிசம்பர் வரையில் 7 லட்சத்து 55 ஆயிரம் வழங்கப்பட்டுள்ளது.
- விபத்து வழக்குகளில் இதே காலகட்டங்களில் 9 நபர்களுக்கு 52 லட்சத்து 65 ஆயிரத்து 460 ரூபாய் வழங்கப்பட்டுள்ளது.
- காயங்களால் பாதிக்கப்பட்டவர்களுக்கு ஜூன் 2023 முதல் டிசம்பர் 2024 வரையில் 80 பேருக்கு 68 லட்சத்து 49 ஆயிரத்து 771 ரூபாய் வழங்கப்பட்டுள்ளது.
இதுதவிர, குழந்தைகள் காணாமல் போனது, தீண்டாமைக் கொடுமை, குழந்தைத் தொழிலாளர் வழக்குகள், அமில வீச்சு ஆகியவற்றால் பாதிக்கப்பட்டவர்களுக்கு இழப்பீட்டுத் தொகையை தாமதமின்றி வழங்கியதாக தமிழ்நாடு காவல்துறை தலைமை இயக்குநர் அலுவலகம் வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

‘ஒரே ஆண்டில் 13 கோடி ரூபாய்’
தேசிய சட்டப் பணிகள் ஆணைக் குழுமத்தின் (National Legal services authority) இணையதளத்திலும் இதுதொடர்பான தரவுகள் வெளியிட்டுள்ளன.
தமிழ்நாட்டில் ஏப்ரல் 2025 முதல் மார்ச் 2025 வரையிலான காலகட்டத்தில் நீதிமன்ற உத்தரவு மற்றும் சட்டப்பணிகள் ஆணைக் குழுமம் மூலம் 815 புகார்கள் பெறப்பட்டுள்ளதாக அதில் கூறப்பட்டுள்ளது.
இவற்றில் 626 விண்ணப்பங்களுக்கு தீர்வு கொடுக்கப்பட்டுள்ளதாகவும் தற்போது வரை 15049 மனுக்கள் நிலுவையில் உள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதற்காக 13 கோடியே 87 லட்சத்து 815 ரூபாயை இழப்பீடாக வழங்கியுள்ளதாக தேசிய சட்டப் பணிகள் ஆணைக் குழுமம் குறிப்பிட்டுள்ளது.
இழப்பீடு கோரலாம்… ஆனால்?
“பாதிக்கப்பட்ட பொதுமக்களுக்கு இழப்பீடு வழங்குவதற்காக மத்திய, மாநில அரசுகள் நிதியை ஒதுக்குகின்றன. இழப்பீடு கோருவதற்கான தொகைக்கு அளவுகோல் என எதுவும் நிர்ணயிக்கப்படவில்லை. அது இழப்பின் தன்மையைப் பொறுத்தது” எனக் கூறுகிறார், வழக்கறிஞர் இராபர்ட் சந்திரகுமார்.
“இழப்பீடு தருவதற்கு மாவட்ட நீதிமன்றம், உயர் நீதிமன்றம், உச்ச நீதிமன்றம் ஆகியவற்றுக்கு அதிகாரங்கள் உள்ளன. ஆனால், மாவட்ட நீதிமன்றத்தில் இழப்பீடு கேட்டு நேரடியாக சென்று வழக்கு தொடர முடியாது” எனக் கூறும் இராபர்ட் சந்திரகுமார், “வழக்கில் இறுதித் தீர்ப்பு அளிக்கும்போது மட்டுமே மாவட்ட நீதிமன்றத்தால் இழப்பீட்டை அறிவிக்க முடியும்” என்கிறார்.
“அதேநேரம், உயர் நீதிமன்றம், உச்ச நீதிமன்றம் ஆகியவற்றுக்கு வானளாவிய அதிகாரங்கள் உள்ளன. அவை பாதிக்கப்பட்ட நபருக்கு உரிய இழப்பீட்டை அளிக்கலாம். அதற்கு முன்னதாக சட்டப் பணிகள் ஆணைக் குழுமம் உள்பட உரிய அமைப்புகளை அணுகிவிட்டு உயர் நீதிமன்றம் வருவதே சரியானதாக இருக்கும்” எனவும் அவர் தெரிவித்தார்.
– இது, பிபிசிக்காக கலெக்டிவ் நியூஸ்ரூம் வெளியீடு