பட மூலாதாரம், Getty Images
அமெரிக்காவில், தான் செய்யாத ஒரு கொலைக்காக 43 ஆண்டுகள் சிறையில் இருந்த சுப்ரமண்யம் ‘சுப்பு’ வேதம் இப்போது விடுவிக்கப்பட்டிருக்கிறார்.
தன்னுடன் தங்கியவரை கொன்றதாக குற்றம் சாட்டப்பட்ட வழக்கில் புதிய ஆதாரம் கிடைத்ததால் இந்த மாத தொடக்கத்தில் அவர் விடுவிக்கப்பட்டார்.
ஆனால், அவர் தன்னுடைய குடும்பத்தினரோடு சேர்வதற்கு முன்பே, அமெரிக்க குடியேறுதல் மற்றும் சுங்க அமலாக்கத் துறை (ICE) அவரைக் காவலில் எடுத்து இந்தியாவுக்கு நாடு கடத்தப்போவதாகக் கூறியிருக்கிறது. குழந்தைப் பருவத்தில் இருந்தே வேதம் இந்தியாவில் வசித்ததில்லை.
இப்போது வேதத்தின் வழக்கறிஞர்கள் அவரை நாடு கடத்தும் உத்தரவுக்கு எதிராகப் போராடிக்கொண்டிருக்கிறார்கள். அதேபோல், அவரை முழுமையாக விடுவிக்க முடியும் என்ற நம்பிக்கையோடு அவரது குடும்பமும் காத்திருக்கிறது.
ஒரு புதிய, “மிகவும் வித்தியாசமான” சூழ்நிலையை கடந்து வருவதற்காக அவரது குடும்பம் திட்டமிட்டுக்கொண்டிருக்கிறது என்று அவரது சகோதரி சரஸ்வதி வேதம் பிபிசியிடம் தெரிவித்தார்.
வேதம் முன்பு இருந்த ஒரு சிறையில் அங்கு அவருக்கு கைதிகளையும் காவலர்களையும் நன்கு தெரியும். அங்கு அவருக்கென்று தனி அறை இருந்திருக்கிறது. அவர் சக கைதிகளுக்கு வழிகாட்டியாகவும் இருந்திருக்கிறார்.
ஆனால், இப்போது அவர் மாற்றப்பட்டிருக்கும் ‘ஐசிஇ’ (ICE) சிறையில் அவர் 60 கைதிகளுடன் அறையை பகிர்ந்துகொள்ள வேண்டிய சூழ்நிலை ஏற்பட்டுள்ளது. மேலும், மற்றவர்களுக்கு வழிகாட்டியாகத் திகழ்ந்த அவருடைய நற்குணம் பற்றியும் அங்கு யாருக்கும் தெரிந்திருக்கவில்லை.
தன் தங்கையிடமும் மற்ற குடும்பத்தினருடமும் இந்த புதிய சூழ்நிலை பற்றி வேதம் கூறுவது, “நான் வெற்றி பெறுவதில் கவனம் செலுத்த வேண்டும்” என்கிற ஒரேயொரு விஷயம் தான்.
“நான் நிரபராதி என்று அறிவிக்கப்பட்டுவிட்டது. நான் இதற்கு மேலும் கைதி கிடையாது. நான் அடைத்துவைக்கப்பட்டிருக்கிறேன்” என்றும் கூறினார்.
1980-இல் நிகழ்ந்த கொலை
நாற்பது ஆண்டுகளுக்கு முன்பு அப்போது தன்னுடைய அறையில் தங்கியிருந்த 19 வயது கல்லூரி மாணவர் டாம் கிஸ்னரை கொன்றதாக குற்றம் சாட்டப்பட்டார் வேதம்.
காணாமல் போயிருந்த கிஸ்னரின் உடல் 9 மாதங்கள் கழித்து மரங்கள் நிறைந்த ஒரு பகுதியில் கண்டெடுக்கப்பட்டது. அவரது மண்டையோட்டில் துப்பாக்கி குண்டு தாக்கிய காயம் இருந்தது.
கிஸ்னர் காணாமல் போன நாளன்று வேதம் அவரிடம் சவாரிக்கு உதவி கேட்டிருக்கிறார். கிஸ்னரின் வண்டி அவருடைய வழக்கமான இடத்துக்குத் திரும்பியிருந்தாலும், அது அங்கு கொண்டுவந்து விடப்பட்டதை யாரும் பார்க்கவில்லை.
கிஸ்னரை கொன்றதாக வேதம் மீது குற்றம் சுமத்தப்பட்டது. அவருக்கு ஜாமீன் மறுக்கப்பட்டது. அவருடைய கடவுச்சீட்டு, கிரீன் கார்ட் இரண்டும் கைப்பற்றப்பட்டு, ‘தப்பிச்செல்ல வாய்ப்புள்ள வெளிநாட்டவர்’ என்று முத்திரை குத்தப்பட்டார்.
இரண்டு ஆண்டுகள் கழித்து அவர் மீது சுமத்தப்பட்ட குற்றம் உறுதி செய்யப்பட்டு ஆயுள் தண்டனை கொடுக்கப்பட்டது. 1984-ஆம் ஆண்டு போதைப்பொருள் சம்பந்தப்பட்ட தனி வழக்கு ஒன்றில் அவருக்கு இரண்டரை ஆண்டுகள் சிறைத்தண்டனை விதிக்கப்பட்டது. அதை அவர் தன்னுடைய ஆயுள் தண்டனையோடு சேர்ந்து ஒரே நேரத்தில் அனுபவிக்குமாறு முடிவு செய்யப்பட்டிருந்தது.
இந்த முழு காலகட்டமும் அந்தக் கொலை குற்றத்தில் தான் ஒரு நிரபராதி என்றே அவர் சொல்லிவந்தார்.
அவர் குற்றத்ததை செய்ததாக நிரூபிப்பதற்கு எந்த ஆதரமும் இல்லை என அவருடைய குடும்பமும், ஆதரவாளர்களும் தொடர்ந்து வலியிறுத்தி வந்தார்கள்.
பட மூலாதாரம், Getty Images
வேதத்தின் விடுதலை
தன்னுடைய தண்டனைக்கு எதிராக தொடர்ந்து மேல்முறையீடு செய்துகொண்டே இருந்தார் வேதம். சில ஆண்டுகள் முன்பு கிடைத்த ஒரு புதிய ஆதாரம் அவரை விடுவிக்க உதவியது.
இந்த மாத தொடக்கத்தில் பேசிய மத்திய கவுன்டி மாவட்ட வழக்கறிஞர் பெர்னீ கன்டோர்னா, வேதத்துக்கு எதிராக புதிய விசாரணையைத் தொடரப்போவதில்லை என்று கூறினார்.
ஆனால் வேதம் முழுமையாக விடுதலையாவதற்கு இன்னொரு தடங்கல் இருப்பதை அவரது குடும்பம் அறிந்திருந்தது. கொலை மற்றும் போதைப்பொருள் குற்றத்துக்காக அவரை நாடு கடத்தும் உத்தரவு 1988-இல் பிறப்பிக்கப்பட்டிருந்தது.
அவருடைய அந்த வழக்கை மறுபடியும் எடுப்பதற்கு தாங்கள் ஒரு புதிய மனுவை தாக்கல் செய்ய வேண்டிய தேவை இருக்கும் என்று நாங்கள் எதிர்பார்த்தோம் என்றார் சரஸ்வதி வேதம்.
ஆனால் இந்த வழக்கைப் பற்றிய உண்மைகள் தற்போது வேறாக இருப்பதாகவும் அவர் கூறினார்.
வேதத்தின் மீது இருக்கும் நாடுகடத்தும் உத்தரவின் காரணமாகவே அவரை உடனடியாக பென்ஸில்வேனியாவில் இருக்கும் இன்னொரு இடத்தில் அடைத்துவைத்ததாக, அவரைக் கைது செய்தபோது ஐசிஇ (ICE) கூறியிருக்கிறது.
கொலைக் குற்றத்தில் இருந்து அவர் விடுவிக்கப்பட்டிருந்தாலும், போதைப்பொருள் வழக்கில் தண்டனை பெற்றது உறுதிதான் எனவும், அதனால் தாங்கள் சட்டப்படி பிறப்பிக்கப்பட்ட உத்தரவின்படி செயல்பட்டதாகவும் ‘ஐசிஇ’ (ICE) அதிகாரிகள் கூறியிருக்கிறார்கள்.
இதுபற்றி பிபிசி கருத்து கேட்டதற்கு ‘ஐசிஇ (ICE) எந்தப் பதிலும் கொடுக்கவில்லை. அதேசமயம், வேதம் மீதான நாடு கடத்தும் வழக்கு இன்னும் நிலுவையில் இருப்பதால் அவர் இன்னும் காவலில் இருப்பதாக மற்ற அமெரிக்க ஊடகங்களிடம் கூறியிருக்கிறது.
இந்த வழக்கை விசாரிக்கும்போது, சிறையில் இருந்த அத்தனை ஆண்டுகளில் வேதம் வெளிக்காட்டிய நற்பன்புகளை, படித்து மூன்று பட்டங்கள் பெற்றதை, அவர் தேவையான அளவு செய்த சமூக சேவைகளையும் குடியேற்ற நீதிமன்றம் கருத்தில் கொள்ளவேண்டும் என்று வேதத்தின் குடும்பம் எதிர்பார்க்கிறது.
“மிகவும் ஏமாற்றமான விஷயம் என்னவென்றால், அவருடைய கைகள் கோர்க்க ஒரு நொடி கூட எங்களுக்கு அவகாசம் கிடைக்கவில்லை” என்றார் சரஸ்வதி வேதம்.
“அவர் தவறாக தண்டிக்கப்பட்டார். மேலும் அவர் மிகவும் மரியாதையோடும் நேர்மையோடும் நடந்துகொண்டிருக்கிறார். அந்த குணங்களையும் மதிக்க வேண்டும்” என்று கூறினார் அவர்.
இந்தியாவுக்கு நாடு கடத்தப்படுவதற்கான வாய்ப்பு
பட மூலாதாரம், Getty Images
வேதத்தை இந்தியாவுக்கு நாடு கடத்த விரும்புவதாக ‘ஐசிஇ’ (ICE) சொல்லியிருக்கும் நிலையில், இந்தியாவில் அவருக்கு பலமான உறவுகள் இல்லை என்று வேதத்தின் குடும்பத்தினர் சொல்கிறார்கள்.
அவர் இந்தியாவில் பிறந்திருந்தாலும், 9 மாத குழந்தையாக இருக்கும்போது அமெரிக்காவுக்கு அழைத்துச் செல்லப்பட்டார். இந்தியாவில் இன்னும் உயிரோடு இருக்கும் அவருடைய உறவினர்களுமே தூரத்து உறவினர்கள் தான் என்று பிபிசியிடம் கூறினார் சரஸ்வதி வேதம்.
சரஸ்வதி வேதம், அவருடைய நான்கு மகள்கள், இன்னபிற உறவினர்கள் என வேதத்தின் சொந்தங்கள் அமெரிக்காவிலும் கனடாவிலும் இருக்கிறார்கள்.
“உலகத்தின் இன்னொரு பகுதிக்கு அவரை எடுத்துச் சென்று, நெருக்கமான உறவினர்களோடு வாழ்வதற்கான வாய்ப்பை மறுபடியும் அவரிடமிருந்து பறிக்கப்போகிறார்கள். இது கிட்டத்தட்ட அவருடைய வாழ்க்கையை இரண்டு முறை திருடுவது போல் இருக்கிறது” என்று கூறினார் சரஸ்வதி.
சட்டப்பூர்வமாக அமெரிக்காவின் நிரந்தர குடியுரிமை பெற்றவர் வேதம். அவர் கைது செய்யப்படுவதற்கு முன்பே அவரது குடியுரிமை விண்ணப்பம் ஏற்றுக்கொள்ளப்பட்டது. அவரது பெற்றோர் இருவரும் அமெரிக்க குடியுரிமை பெற்றவர்கள்.
“அவரை அமெரிக்காவிலிருந்து நாடு கடத்தி, அதிகம் பழக்கமானவர்கள் இல்லாத ஒரு நாட்டுக்கு அனுப்புவது, ஏற்கெனவே பெரும் அநீதி இழைக்கப்பட்ட ஒரு மனிதனுக்கு இன்னொரு பெரிய தவறு செய்ததாக ஆகிவிடும்.” என்று கூறினார் பிபிசியிடம் பேசிய வேதத்தின் வழக்கறிஞர் ஏவா பெனாச்.
– இது, பிபிசிக்காக கலெக்டிவ் நியூஸ்ரூம் வெளியீடு