அனுராதபுரம் ரயில் நிலையத்துக்கு அருகில் கைத்தொலைபேசியில் ‘செல்பி’ எடுக்க முற்பட்ட தாயும் மகளும் ரயிலில் மோதி பரிதாபகரமாக உயிரிழந்தனர்.
அனுராதபுரம் பொது விளையாட்டரங்கில் இன்று நடைபெற்ற விளையாட்டுப் போட்டியில் பங்கேற்க வந்த மகளும் தாயுமே இவ்வாறு உயிரிழந்தனர்.
இரத்தினபுரி பிரதேசத்தில் இருந்து அனுராதபுரத்துக்கு வந்த இவர்கள், அனுராதபுரம் ரயில் நிலையத்துக்கு அருகில் காங்கேசன்துறையில் இருந்து கொழும்பு நோக்கிச் சென்ற அதிவேக ரயிலின் முன் கைத்தொலைபேசியில் ‘செல்பி’ எடுக்க முற்பட்டபோது இந்த விபத்து இடம்பெற்றது என்று பொலிஸார் தெரிவித்தனர்.
மேற்படி இருவரும் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தனர் என்றும் பொலிஸார் மேலும் குறிப்பிட்டனர்.
இரத்தினபுரியைச் சேர்ந்த 37 வயதுடைய தாயும், 18 வயதுடைய மகளுமே உயிரிழந்தனர்.
சம்பவம் தொடர்பான மேலதிக விசாரணைகளை அனுராதபுரம் பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.