சென்னை: சென்னை மாநகரில் வீடுகளில் வளர்க்கப்படும் செல்லப் பிராணிகளுக்கு மாநகராட்சியிடம் உரிமம் பெறாவிட்டால் ரூ.5 ஆயிரம் அபராதம் விதிக்கும் வகையில் நேற்று நடைபெற்ற மாமன்ற கூட்டத்தில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டுள்ளது. சென்னை மாநகராட்சி மன்றக்கூட்டம் மேயர் ஆர்.பிரியா தலைமையில், துணை மேயர் மு.மகேஷ்குமார், ஆணையர் ஜெ.குமரகுருபரன் முன்னிலையில் ரிப்பன் மாளிகையில் நேற்று நடைபெற்றது.
இதில் அதிமுக கவுன்சிலர் கே.பி.கே.சதீஷ் பேசும்போது, “நெம்மேலி குடிநீர் திட்டத்தை, முன்னாள் முதல்வர் ஜெயலலிதா கொண்டு வந்தார்” என பேசினார். அப்போது திமுக கவுன்சிலர்கள், திமுக ஆட்சியில்தான் அடிக்கல் நாட்டப்பட்டது என்றனர். இதனால் அதிமுக, திமுக கவுன்சிலர்களிடையே கடும் வாக்குவாதம் ஏற்பட்டதால், கே.பி.கே.சதீஷின் மைக் அணைக்கப்பட்டது.
இதைக் கண்டித்து அதிமுக கவுன்சிலர்கள் வெளிநடப்பு செய்தனர். தொடர்ந்து, சென்னை மாநகராட்சி பகுதிகளில் வளர்க்கப்படும் செல்லப் பிராணிகளான நாய்கள் மற்றும் பூனைகளுக்கு உரிமம் பெறுவதை கட்டாயமாக்கவும், நவ.24-ம் தேதிமுதல் உரிமம் பெறாத செல்லப் பிராணிகளை, வீடு வீடாக ஆய்வு செய்து கண்டறியவும், செல்லப் பிராணிகளுக்கு உரிமம் பெறாத உரிமையாளர்களுக்கு ரூ.5 ஆயிரம் அபராதம் விதிக்கவும், பூங்காக்கள், நடைபாதைகள் மற்றும் பொதுமக்கள் கூடும் பிற பகுதிகள் உள்ளிட்ட பொது இடங்களில் நாய்களுக்கு கழுத்துப் பட்டை இன்றி அழைத்து வரும் உரிமையாளர்களுக்கு ரூ.500 அபராதம் விதிக்கவும், அபராதத்தை கோட்ட சுகாதார ஆய்வாளர் மற்றும் துப்புரவு ஆய்வாளர் மூலம் வசூலிக்க அனுமதி அளித்தும் மன்ற கூட்டத்தில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.
சென்னையில் ரூ.5.19 கோடியில் 2 லட்சம் நாய்களுக்கு மைக்ரோ சிப் பொருத்துதல், அந்த சிப்களில் உள்ள தரவுகளை எடுக்கும் 80 உபகரணங்களை வாங்குதல், அவற்றை மேலாண்மை செய்வதற்கான மென்பொருள் உருவாக்கி, 5 ஆண்டுகளுக்கு பயன்படுத்தி பராமரித்தல் ஆகியவற்றை மேற்கொள்ள தனியார் நிறுவனத்துக்கு பணி ஆணை வழங்கவும் கூட்டத்தில் அனுமதி அளிக்கப்பட்டது.
மாநகராட்சியில் 29,455 தூய்மைப் பணியாளர்களுக்கு தினமும் 3 வேளை உணவு வழங்கும் பணியை, 3 ஆண்டுகளுக்கு ரூ.186.94 கோடியில் தனியார் நிறுவனம் ஒப்பந்த அடிப்படையில் மேற்கொள்ள அனுமதி வழங்கப்பட்டுள்ளது. மயிலாப்பூர் மந்தைவெளி பாக்கத்தில் உள்ள கிழக்கு வட்டச் சாலைக்கு ‘சீர்காழி கோவிந்தராஜன் சாலை’ என பெயரிடக் கோரியதற்கு மன்றத் தீர்மானம் நிறைவேற்ற அரசின் அனுமதி பெறப்பட்டுள்ளது. அதற்கு மன்றத்தில் அனுமதி வழங்கப்பட்டுள்ளது. மொத்தம் 72 தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.
