சென்னை: மதுரையில் போக்குவரத்து நெரிசல் குறித்தும், கோரிப்பாளையம் பாலம் பணிகள் குறித்தும் முன்னாள் அமைச்சர் செல்லூர் ராஜுவின் கேள்விக்கு பொதுப்பணித்துறை அமைச்சர் எ.வ.வேலு பதிலளித்துள்ளார். அப்போது, ‘செல்லூர் ராஜுவின் வீட்டுக்கே சென்றேன்’ என அவர் பேசியது சட்டப்பேரவையில் கலகலப்பை உருவாக்கியது.
இன்று சட்டப்பேரவையில் மதுரை போக்குவரத்து நெரிசல் குறித்தும், சாலைகளில் மோசமான நிலை குறித்தும் முன்னாள் அமைச்சர் செல்லூர் ராஜு கேள்வியெழுப்பினார்.
இதற்கு பதிலளித்து பேசிய தமிழக பொதுப்பணித்துறை அமைச்சர் எ.வ.வேலு, “ ஏற்கெனவே 10 ஆண்டுகாலம் விடிவுகாலம் இல்லாதத்தால், விடிவுகாலம் உருவாக்குவதற்காக தமிழக முதல்வர் மதுரைக்கு முக்கியத்துவம் தந்திருக்கிறார். முன்பு அமைச்சராக இருந்த செல்லூர் ராஜு, மதுரை நகரப்பகுதியை சார்ந்தவர். கடந்த முறை நான் மதுரை சென்றபோது, அவரின் வீட்டுக்கே சென்றேன். அவர் பங்களா கட்டிக்கொண்டு எங்கோ பண்ணை வீட்டில் இருக்கிறார் எனச் சொன்னார்கள்.
கோரிப்பாளையத்தில் உள்ள வீட்டுக்கு சென்றுவர சங்கடமாக உள்ளதாக செல்லூர் ராஜு என்னிடம் தொலைபேசியில் சொன்னார். அமைச்சராக இருந்தவர் சங்கடப்பட கூடாதே, இதற்கு என்ன செய்யலாம் என யோசித்து ஒரு நாள் காலை நடைபயிற்சி செல்லும்போது நானும், அமைச்சர் மூர்த்தியும் அவரின் வீடு உள்ள பகுதிக்கே சென்று பார்த்தோம்.
கோரிப்பாளையம் பகுதியில் பாலம் அமைக்க நூறாண்டு காலமாக பிரச்சினை இருந்தது. அழகர் ஆற்றில் இறங்க மண்டகபடி உள்ளதாக ஒரு சாரர் சொன்னார்கள், முத்துராமலிங்க தேவர் சிலையும் அப்பகுதியில் இருந்தது. இது சார்ந்தவர்களிடம் பேசி ஒரு முடிவெடுத்து இந்த பாலம் அமைக்க அடிக்கல் நாட்டி பணிகள் நடந்து வருகிறது. இயற்கையான காரணங்களால் சில இடர்பாடுகள் உள்ளன. ஜனவரி மாதத்துக்குள் அந்த பாலத்தை திறக்கும் வகையில் பணிகளை செய்து வருகிறோம்.
நெரிசல் உள்ள பகுதியான அப்பல்லோ மருத்துவமனை பாலத்தை நவம்பர் மாதமே திறக்க திட்டமிட்டு பணிகள் நடந்து வருகிறது. இந்த இரு பாலப் பணிகளும் வேகமாக நடந்து வருகின்றன. மதுரை மேற்கு தொகுதியில் இன்னொரு பாலமும் கட்டி வருகிறோம். இந்த பாலப்பணிகள் முடிவடைந்ததும் போக்குவரத்து நெரிசல் குறைய வாய்ப்பு உள்ளது. வைகை வடகரை பாத்திமா கல்லூரி முதல் புறவழிச்சாலை, இணைப்புச்சாலைக்கும் ஏற்பாடு செய்துள்ளோம்” என்றார்