மதுரை; ‘‘மேற்கு தொகுதியில் அரசு திட்டங்களை வாரி இறைத்தாலும் 4-வது முறையாக செல்லூர் கே.ராஜூ எம்எல்ஏ ஆகி மீண்டும் அமைச்சராவார்’’ என்று மாநகராட்சி எதிர்கட்சித் துணைத் தலைவர் சோலைராஜா தெரிவித்தார்.
மதுரை மேற்கு சட்டமன்ற தொகுதிக்குட்பட்ட மாநகராட்சி 2-வது மண்டலம் அலுவலகத்தில் அதிமுக கவுன்சிலர்களை புறக்கணித்து விட்டு குறைதீர்ப்பு கூட்டம் எனும் பெயரில் ஆய்வுக் கூட்டம் நடத்துவதாக மாநகராட்சி ஆணையாளர் சித்ராவிடம் சோலைராஜா தலைமையில் அதிமுக கவுன்சிலர்கள் புகார் மனு அளித்தனர்.
அப்போது ஆணையாளரிடம் அவர்கள், ‘அதிமுக கவுன்சிலர்களை புறக்கணித்துவிட்டு மாநகராட்சி அதிகாரிகளை அழைத்து திமுக வட்ட செயலாளர்கள் சொல்லும் பணிகளை மக்களுக்கு உடனடியாக செய்து கொடுங்கள் என்று திமுக அமைச்சர், மண்டலத் தலைவர்கள் உத்தரவிட்டுள்ளனர். கடந்த 5-ம் தேதி மேற்கு சட்டமன்ற தொகுதி மண்டலம் 2-க்கு உட்பட்ட 64-வது வார்டில் மண்டலத் தலைவர் சரவணபுவனேஷ்வரி தலைமையில் மாநகராட்சி அதிகாரிகளை அழைத்து ஆய்வுக் கூட்டம் நடத்தியுள்ளார். இக்கூட்டம் பற்றி அதிமுக கவுன்சிலர்களுக்கு தகவல் தெரிவிக்கப்படவில்லை.
அந்தக் கூட்டத்தில் திமுக வட்டச் செயலாளர்கள் சிறப்பு அழைப்பாளராக அழைக்கப்பட்டு அவர்களுக்கு கவுரவம் வழங்கப்பட்டுள்ளது. அப்படியென்றால் மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட அதிமுக கவுன்சிலர்கள் இருந்து என்ன பயன்?. இது உள்ளாட்சி சட்ட விதிமுறைகளை மீறும் செயல். அக்கூட்டத்தில் பங்கேற்ற அதிகாரிகள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும். இல்லையென்றால் நாங்கள் உயர் நீதிமன்றத்தில் வழக்கு தொடருவோம்’ என்றனர். அதற்கு, விசாரித்து நடவடிக்கை எடுப்பதாக மாநகராட்சி ஆணையாளர் சித்ரா உறுதியளித்தார்.
அதன்பின் செய்தியாளர்களிடம் சோலைராஜா கூறியது: “திமுக நிர்வாகிகளை வைத்து மாநகராட்சி ஆலோசனை கூட்டம் நடத்துவது உள்ளாட்சித் துறை சட்டத்துக்கு எதிரானது. அதிமுக வெற்றி பெற்ற மாநகராட்சி வார்டுகளில் கவுன்சிலர்களை புறக்கணித்துவிட்டு திமுக வட்டச் செயலாளர்களுக்கு மதிப்பளிப்பது எந்த வகையில் நியாயம்?
மதுரை மேற்கு சட்டமன்ற தொகுதி அமைச்சர் மூர்த்தியின் பொறுப்பில் திமுக ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. அவர் அரசு நல உதவி திட்டங்களை எவ்வளவு வாரி இறைத்தாலும் முன்னாள் அமைச்சர் செல்லூர் ராஜூவின் வெற்றி வாய்ப்பை யாரும் தடுக்க முடியாது. 4-வது முறையாக வெற்றி பெற்று மீண்டும் அவர் அமைச்சராவார்,’’ என்றார்.