”ஒரே ஆண்டில் அதிகளவிலான வெளி நாட்டவர்களுக்கு மரண தண்டனை நிறைவேற்றப்பட்டது இதுதான்” என்று பெர்லினை அடிப்படையாகக் கொண்டு இயங்கும் ஐரோப்பிய-சௌதி மனித உரிமைகள் அமைப்பின் (ESOHR) சட்ட இயக்குனர் தாஹா அல்-ஹாஜி, ஏ.எஃப்.பியிடம் தெரிவித்துள்ளார்.
சீனா மற்றும் இரானை தொடர்ந்து…
சர்வதேச மனித உரிமை அமைப்பான அம்னெஸ்டி இண்டர்நேஷனலை பொறுத்தவரை, சீனா மற்றும் இரானைத் தொடர்ந்து சௌதி அரேபியா அதிக மரண தண்டனையை நிறைவேற்றுயுள்ளது.
இந்த ஆண்டின் செப்டம்பர் வரையில் முப்பது ஆண்டுகளில் இல்லாத அளவுக்கு அதிக அளவிலான மரண தண்டனைகளை செளதி நிறைவேற்றியுள்ளது. இந்த எண்ணிக்கை 2022ல் 196 பேருக்கும், 1995ல் 192 பேருக்கும் மரண தண்டனை விதிக்கப்பட்டதை விட அதிகமாகும்.
சௌதி அரேபியாவின் இந்த செயல்பாட்டை மனித உரிமைகள் அமைப்பான ‘மனித உரிமைகள் கண்காணிப்பகம்’ பலமுறை கண்டித்தது.
அக்டோபர் மாதம் மனித உரிமைகள் கண்காணிப்பகம் ஏழு மனித உரிமைகள் அமைப்புகளோடு ஒன்றாக இணைந்து விடுத்த அறிக்கையில், ”நாங்கள் அனைவரும் சௌதி அரேபியாவில் அதிக அளவிலான மரண தண்டனை நிறைவேற்றப்படுவதால் அதிர்ச்சி அடைந்துள்ளோம். சௌதி செய்தி முகமை (Saudi Press Agency) வெளியிட்ட தகவலின் அடிப்படையில், 2024-ஆம் ஆண்டின் முதல் ஒன்பது மாதத்தில் குறைந்தது 200 நபர்களுக்காவது மரண தண்டனை விதிக்கப்பட்டுள்ளது, இது கடந்த முப்பது ஆண்டுகளில் ஒருவருடத்தில் நிறைவேற்றப்பட்ட மரண தண்டனைகளின் எண்ணிக்கையை விட அதிகம் ”என தெரிவித்துள்ளது
இந்த அறிக்கையில் கையொப்பம் இட்டவர்களில் அம்னெஸ்டி இண்டர்நேஷனல் அமைப்பும் அடங்கும்.
கடந்த செப்டம்பர் மாதம், அம்னெஸ்டி இண்டர்நேஷனல் அமைப்பும் சௌதி அரேபியாவில் அதிகரித்து வரும் மரண தண்டனைக்கு கவலை தெரிவித்திருந்தது.
அந்த அமைப்பின் பொது செயலாளர், ஆக்னஸ் கால்லமர்ட், மனித உரிமைகளை மீறி சௌதி அரேபியா மரண தண்டனைகளை வழங்கி வருகிறது என்றார்
“இந்த மரண தண்டனை கொடுமையான, மனிதாபிமானமற்ற செயல்பாடு. பல வகையான குற்றச் செயல்களில் ஈடுபடும் நபர்களுக்கு எதிராக சௌதி அரேபியா இதை நிறைவேற்றுகிறது. இதில் அரசியல் கருத்து வேறுபாடு மற்றும் போதைப்பொருள் குற்றச்சாட்டு ஆகியவையும் அடங்கும். அதிகாரிகள் மரண தண்டனைகளுக்கு விரைவாக தடை விதிக்க வேண்டும். அவர்கள் மரண தண்டனையை விதிக்காமல், குற்றம்சாட்ட பட்டவர்களைச் சர்வதேச தரத்தில் விசாரிக்க வேண்டும்.” எனவும் அவர் கூறியுள்ளார்
இந்தியர்கள் எத்தனை பேர்?
சௌதி அரேபியாவில் இந்த வருடம் இதுவரை 274 பேருக்கு மரண தண்டனை விதிக்கப்பட்டுள்ளது என ஏ.எஃப்.பி தெரிவித்துள்ளது
மரண தண்டனை விதிக்கப்பட்ட வெளிநாட்டினர்களில் பாகிஸ்தானைச் சேர்ந்தவர்கள் 21 நபர்கள், ஏமனைச் சேர்ந்தவர்கள் 20 நபர்கள், சிரியாவைச் சேர்ந்தவர்கள் 14 நபர்கள், நைஜிரியாவைச் சேர்ந்தவர்கள் 10 நபர்கள், எகிப்தைச் சேர்ந்தவர்கள் ஒன்பது நபர்கள், ஜோர்டனைச் சேர்ந்தவர்கள் எட்டு நபர்கள் மற்றும் எத்யோபியாவை சேர்ந்தவர்கள் ஏழு நபர்கள்.
இதைத் தவிர்த்து, இந்தியா, ஆப்கானிஸ்தான் மற்றும் சூடானிலிருந்து மூன்று நபர்கள், இலங்கை, எரித்திரியா மற்றும் பிலிப்பைன்ஸ் ஆகிய நாடுகளிலிருந்து தலா ஒரு நபருக்கு மரணத் தண்டனை விதிக்கப்பட்டுள்ளது என ஏ.எஃப்.பி தெரிவித்துள்ளது.
போதைப்பொருள் தொடர்பான குற்றங்களுக்கு மரண தண்டனை விதிக்கப்படுவது இந்த வருடம் அதிகரித்துள்ளது. மரண தண்டனை வழங்கப்பட்டுள்ள 92 நபர்கள் போதைப்பொருள் தொடர்பான குற்றங்களில் ஈடுபட்டவர்கள். இதில் 69 நபர்கள் வெளிநாட்டினர்.
வெளிநாட்டினர் சம்மந்தப்பட்ட வழக்கில் பொதுவாக சரியான விசாரணை நடத்தப்படுவதில்லை மற்றும் நீதிமன்ற ஆவணங்கள் கொடுக்கப்படுவதில்லை என மனித உரிமை ஆர்வலர்கள் கூறுகின்றனர்.
ஐரோப்பிய – சௌதி மனித உரிமைகள் அமைப்பின்(ESOHR) ஹாஜியைப் பொருத்தவரை, சௌதி அரேபியாவில் வெளிநாட்டைச் சேர்ந்த நபர்கள் பலவீனமானவர்களாகக் கருதப்படுகின்றனர்.
“வெளிநாட்டினர் போதைப்பொருள் வியாபாரிகளால் பாதிக்கப்படுவது மட்டுமல்ல, கைது முதல் மரண தண்டனை நிறைவேற்றப்படுவது வரை அவர்கள் ஒரு நீண்ட மனித உரிமை மீறலுக்கு உள்ளாகின்றனர், ” என்றும் அவர் கூறினார்.
2023-ஆம் ஆண்டு மரண தண்டனையை நிறைவேற்றிய நாடுகள்
அம்னெஸ்டி இண்டர்நேஷனல் அமைப்பை பொருத்தவரை, 2023-இல் சீனா, இரான், சௌதி அரேபியா, சோமாலியா மற்றும் அமெரிக்கா ஆகிய நாடுகள் அதிக மரண தண்டனையை நிறைவேற்றிய நாடுகள்.
இதில் 74% மரண தண்டனைகள் இரானில் மட்டும் பதிவாகியுள்ளது. அதேசமயம், மொத்த மரண தண்டனைகளில் 15% சௌதி அரேபியாவில் பதிவாகியுள்ளது.
வடகொரியா, வியட்நாம், சிரியா, ஆப்கானிஸ்தான், சீனா மற்றும் பாலத்தீனத்தில் சரியான தரவுகள் இல்லை என அம்னெஸ்டி இண்டர்நேஷனல் தெரிவித்துள்ளது.
மரண தண்டனையை எத்தனை நாடுகள் நீக்கியுள்ளன?
மரண தண்டனையை ரத்து செய்யும் நாடுகளின் எண்ணிக்கையும் அதிகரித்துள்ளது.
1991-இல் 48 நாடுகள் இந்த பட்டியலில் இடம்பெற்றிருந்தன. அதே சமயம், 2023-ஆம் ஆண்டு மரண தண்டனையை நீக்கியுள்ள நாடுகளின் பட்டியல் 112-ஆக அதிகரித்துள்ளது.
ஒன்பது நாடுகளில் கொடுமையான குற்றங்களுக்கு மட்டும் மரண தண்டனை கொடுக்கப்படுகிறது. அதேசமயம் 23 நாடுகளில் 10 ஆண்டுகளாக ஒரு முறைக் கூட மரண தண்டனை விதிக்கப்படவில்லை.
மரண தண்டனைக் குற்ற செயல்களை குறைக்குமா?
ஐக்கிய நாடுகளின் மனித உரிமைகள் அலுவலகம், “மரண தண்டனை இருக்கும் நாடுகளில், அது குற்றத்தைத் தடுக்கிறது என்ற மூடநம்பிக்கையின் காரணமாகத் தக்க வைக்கப்படுகிறது”என கூறுகிறது
குற்றங்களைத் தடுப்பதில் மரண தண்டனை பயனுள்ளதாக இல்லை என்று சமூக அறிஞர்களிடையே ஒருமித்த கருத்து உள்ளது.
– இது, பிபிசிக்காக கலெக்டிவ் நியூஸ்ரூம் வெளியீடு