• Tue. Feb 24th, 2026

24×7 Live News

Apdin News

செவ்வாய்க்குப் பதிலாக முதலில் நிலவில் ஒரு நகரை நிறுவ ஈலோன் மஸ்க் திட்டம் – இந்த மாற்றம் ஏன்?

Byadmin

Feb 24, 2026


செவ்வாய்க்கு பதிலாக நிலவில் நகரம், ஈலோன் மஸ்க் திட்டம்

பட மூலாதாரம், Reuters

படக்குறிப்பு, எக்ஸ் தளத்தில் பதிவிட்ட ஈலோன் மஸ்க், ஸ்பேஸ்எக்ஸ் நிறுவனம் ஏன் தனது கவனத்தை செவ்வாய் கிரகத்தில் நகரத்தை உருவாக்கும் திட்டத்திலிருந்து நிலவில் நகரத்தை உருவாக்குவதற்கு மாற்றியது என்று விளக்கினார்

நிலவில் ஒரு “சுயமாக இயங்கும் நகரம்”, இது 10 ஆண்டுகளுக்கும் குறைவான காலத்திற்குள் சாத்தியமாகக்கூடும் – இதுவே ஈலோன் மஸ்க் சமீபத்தில் வெளியிட்ட திட்டமாகும்.

எக்ஸ், டெஸ்லா மற்றும் ஸ்பேஸ்எக்ஸ் ஆகியவற்றின் தலைவரும், உலகின் மிகப் பெரிய பணக்காரருமான மஸ்க், எக்ஸ் தளத்தில் சமீபத்தில் வெளியிட்ட ஒரு பதிவில் இதை தெரிவித்திருந்தார். ஸ்பேஸ்எக்ஸ் நிறுவனம், செவ்வாய் கிரகத்தில் நகரத்தை உருவாக்குவதிலிருந்து தனது கவனத்தை நிலவில் நகரத்தை உருவாக்குவதற்கு மாற்றியுள்ளதாகக் கூறினார்.

ஆனால் மஸ்க் ஏன் தனது எண்ணத்தை மாற்றிக் கொண்டார்? நிலவில் அமையவிருக்கும் இந்த “சுயமாக இயங்கும்” நகரம் பற்றி நமக்கு என்ன தெரியும்?

செவ்வாய்க்குப் பதிலாக நிலவு

சுயமாக இயங்கும் நகரத்திற்கான வரைபடங்களுடன் கூடிய முறையான, முழுமையான விரிவான திட்டம் இன்னும் இல்லை, மாறாக மஸ்க் தனது எக்ஸ் சமூக ஊடகத் தளத்தில் பகிர்ந்துகொண்ட ஒரு தொலைநோக்குப் பார்வை மட்டுமே இது.

நிலவிற்கு அடிக்கடி விண்கலங்களை ஏவுவதன் மூலம், நிலவில் உள்ள வளங்களைப் பயன்படுத்தி படிப்படியாக விரிவடையக்கூடிய ஒரு நிரந்தர மனிதக் குடியிருப்பை நிறுவுவதை அவர் விவரித்தார்.

By admin