விழுப்புரம்: வெள்ள பாதிப்புக்குள்ளான பகுதிகளுக்குச் சென்ற வனத்துறை அமைச்சர் பொன்முடி மீது அப்பகுதி மக்களில் ஒருவர் சேற்றை வாரிய வீசிய சம்பவத்தால், அப்பகுதிக்கு பொன்முடி செல்ல தடை விதித்த திமுக தலைமை, நெடுஞ்சாலைத் துறை அமைச்சர் எ.வ.வேலுவை அனுப்பிவைத்து நிவாரணப் பணிகளை மேற்கொள்ள உத்தரவிட்டுள்ளது.
தென்பெண்ணையாற்றில் கடந்த 1-ம் தேதி ஏற்பட்ட வெள்ளப்பெருக்கால், விழுப்புரம், கடலூர், கள்ளக்குறிச்சி மாவட்டங்களில் வெள்ள பாதிப்பு ஏற்பட்டு, குடியிருப்புகள், சாலைகள், அரசு அலுவலகங்கள், விளை நிலங்கள் பாதிக்கப்பட்டது. வீதிகளிலும் , குடியிருப்புகளிலும் தேங்கி வெள்ள நீரால் கரையோர கிராம மக்கள் பெரும் அவதிக்கு ஆளாயினர்.
அதன்படி விழுப்புரம் மாவட்டம் திருவெண்ணைநல்லூர் ஊராட்சி ஒன்றியத்துக்குட்பட்ட அரசூர், இருவேல்பட்டு ஆகிய கிராமங்கள் வெள்ள பாதிப்பால் கடும் சேதத்தை சந்திருந்த நிலையில், அப்பகுதி மக்கள், தங்களுக்கு அரசின் நிவாரணம் கிடைக்கவில்லை எனக் கூறி நேற்று திருச்சி – சென்னை தேசிய நெடுஞ்சாலையில் மறியலில் ஈடுபட்டனர். இதையடுத்து அப்பகுதி மக்களை சந்தித்து குறைகளை கேட்டறியச் சென்ற அமைச்சர் பொன்முடி, அவரது மகன் கவுதம சிகாமணி, ஆட்சியர் பழனி உள்ளிட்டோர் மீது சிலர் சேற்றை வாரி வீசியுள்ளனர்.
இதனால் அப்பகுதியில் பொன்முடி உள்ளிட்டோர் வெளியேறினர். இச்சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்திய நிலையில், இச்சம்பவத்தை தான் அரசியலாக்க விரும்பவில்லை எனக் கூறியிருந்தார் அமைச்சர் பொன்முடி. இதனிடையே, அரசூரில் அமைச்சர் பொன்முடி இடம்பெற்றிருந்த பதாகைகளை அப்பகுதியில் உள்ளவர்கள் பிய்த்து தெறிந்து சேதப்படுத்தினர். இதனால், அமைச்சர் பொன்முடி அப்பகுதி மக்களுக்கு வெறுப்பு இருப்பதாக உணர்ந்த திமுக தலைமை, உடனடியாக நெடுஞ்சாலைத் துறை அமைச்சர் எ.வ.வேலுவை, திருவெண்ணைநல்லூர் ஊராட்சிக்குட்பட்ட பகுதியில் அரசின் நிவாரணப் பணிகளை மேற்கொள்ள உத்தரவிட்டது.
இதையடுத்து, நேற்று இரவே அப்பகுதிக்குச் சென்று பாதிக்கப்பட்ட மக்களை நேரடியாக சந்தித்து, கோரிக்கைகளை கேட்டறிந்து வருகிறார். இதனால் கள்ளக்குறிச்சி மாவட்ட எம்எல்ஏ-க்கள் வசந்தம் கார்த்திக்கேயன், மணிக்கண்ணன் உள்ளிட்டோரும் அமைச்சர் எ.வ.வேலுவுடன் இணைந்து பாதிக்கப்பட்ட பகுதிகளில் நிவாரண உதவிகளை மேற்கொண்டு வருகின்றனர்.