இணையத்தைப் பயன்படுத்தி கணினிகள் மற்றும் ஸ்மார்ட்போன்களில் செய்யப்படும் குற்றங்கள் சைபர் குற்றங்கள் என்று அழைக்கப்படுகின்றன.
இவற்றில், நிதிக் குற்றங்கள், பதிப்புரிமை மீறல், ஹேக்கிங், பயங்கரவாதத்தை ஊக்குவித்தல் போன்ற குற்றங்களும், தனிநபர்களைத் துன்புறுத்தும் குற்றங்களும் அடையாளம் காணப்பட்டுள்ளன. இணையத்தில் ஒருவரை பின் தொடர்ந்து தொல்லை கொடுத்தல், அவமானப்படுத்துதல், அச்சுறுத்தல் மற்றும் துன்புறுத்துதல் ஆகியவை இதில் அடங்கும். இதில் சுமார் 24 வகையான சைபர் குற்றங்கள் அடங்கும்.
பிபிசியிடம் பேசிய வழக்கறிஞர் ஸ்ரீனிவாஸ், “சபித்தல், மோசமான வார்த்தைகளைப் பயன்படுத்துதல், சங்கடமான, ஆபத்தான வார்த்தைகள், புகைப்படங்கள், வீடியோக்களை மற்றவர்களுக்கு அனுப்புதல், ஒருவர் பெயரில் வேறொருவர் கணக்கு வைத்திருப்பது, மற்றவர்களின் தனிப்பட்ட தகவல்களைச் சேகரித்தல், திருடுதல், அவதூறு பரப்புதல், இரு குழுக்களிடையே மோதலைத் தூண்டும் மற்றும் சேதம் ஏற்படுத்தும் வகையில் செய்திகளை அனுப்புதல் ஆகியவை காவல்துறையால் குற்றமாக கருதலாம்” என்று கூறினார்.
இதுபோன்ற செயல்களில் ஈடுபடுவோர் மீது கிரிமினல் வழக்கு பதிவு செய்ய வேண்டும் என்று உச்ச நீதிமன்றமே கூறியதை அவர் குறிப்பிட்டார்.
வாட்ஸ்ஆப் பதிவை ஃபார்வேர்ட் செய்வது
“வாட்ஸ்ஆப்பில் குறுஞ்செய்திகளை ஃபார்வர்டு செய்வதற்கும் இது பொருந்தும். அதுமட்டுமின்றி, தனியுரிமையை மீறுவதும் சைபர் குற்றத்தின் கீழ் வரும்,” என்றார் ஸ்ரீனிவாஸ்.
“செய்தியின் முடிவில் ‘Forwarded as Received’ (கிடைத்த செய்தியில் எந்த மாற்றமும் செய்யாமல் ஃபார்வர்டு செய்வது) என்று போடுவதாலோ, சர்ச்சைக்குரிய செய்திக்குப் பிறகு ‘இது உண்மையா?’ என்று போடுவதாலோ, இந்த வழக்குகளை முழுமையாகத் தவிர்க்க முடியாது. வழக்கின் தீவிரத்தைப் பொறுத்தே அது அமையும்” என்கிறார் ஸ்ரீநிவாஸ்.
உச்ச நீதிமன்றம் 2023இல், தமிழ்நாட்டைச் சேர்ந்த ஒருவர் மீது தொடரப்பட்ட ஒரு வழக்கில், “பொய்யான அல்லது தவறான செய்தியைப் பதிவிட்டு, பிறகு நீக்கிவிட்டு மன்னிப்புக் கேட்டாலும் பயனில்லை” என்று கூறியது.
தமிழகத்தைச் சேர்ந்த நடிகர் ஒருவர் பெண்களை இழிவுபடுத்தும் வகையில் பதிவிட்டு, அதை நீக்கிவிட்டு மன்னிப்பும் கேட்டார். இருப்பினும் அவர் மீதான வழக்கு தொடர்ந்து நடைபெற்றது. இந்த வழக்கு தொடர்பாகவே உச்ச நீதிமன்றம் இந்த கருத்தை வெளியிட்டது.
இதே வழக்கில் சென்னை உயர் நீதிமன்றம் ஒரு சுவாரஸ்யமான கருத்தை தெரிவித்துள்ளது என்கிறார் ஸ்ரீனிவாஸ்.
“‘சமூக வலைதளங்களில் பதிவிடுவது என்பது, வில்லில் இருந்து அம்பு எய்வது போல. நீங்கள் இடுகையிடாத வரை எந்த ஆபத்தும் இல்லை. ஆனால் அம்பு வில்லிலிருந்து விடுபட்டவுடன், அது எந்த திசையில் சென்றாலும், எவ்வளவு சேதம் விளைவிக்கிறதோ அதற்கு நீங்களே பொறுப்பு. சேதம் ஏற்பட்ட பிறகு மன்னிப்பு கேட்டால் போதுமானதாக இருக்காது’ என்று சென்னை உயர் நீதிமன்றம் கருத்து தெரிவித்துள்ளது” என்று ஸ்ரீனிவாஸ் விளக்கினார்.
கடுமையான இணைய சட்டங்கள்
இந்தியாவில் பதிவு செய்யப்படும் அனைத்து சைபர் குற்றங்களுக்கும், 2000-ஆம் ஆண்டின் தகவல் தொழில்நுட்பச் சட்டத்தின் கீழ் வழக்குத் தொடரப்பட்டு, தண்டனை அளிக்கப்படுகிறது. அதன் பிறகு 2008 மற்றும் 2023-ஆம் ஆண்டுகளில் இந்த சட்டத்தில் திருத்தங்கள் கொண்டுவரப்பட்டது. 2023இல் ‘டிஜிட்டல் தனிநபர் தரவு பாதுகாப்பு’ சட்டமும் அமலுக்கு வந்தது.
“முந்தைய ஐபிசியில் உள்ள பல பிரிவுகள் மற்றும் சமீபத்திய சட்ட நெறிமுறைகளின் அடிப்படையில் ஐடி-சைபர் வழக்குகள் தாக்கல் செய்யலாம். இது குற்றத்தின் அமைப்பு மற்றும் பதிவின் தீவிரத்தை பொறுத்தது. தகவல் தொழில்நுட்பச் சட்டத்தின் 65 முதல் 78 வரையிலான பிரிவுகள், குற்றங்களை விவரிக்கின்றன” என்று வழக்கறிஞர் ஸ்ரீனிவாஸ் பிபிசியிடம் கூறினார்.
யாரிடம் புகார் செய்வது?
சமூக ஊடகங்கள், ஸ்மார்ட்போன், கணினி அல்லது வேறு ஏதேனும் தகவல் பரிமாற்றக் கருவி மூலம் உங்களை யாராவது துன்புறுத்தினால் எப்படி புகார் செய்வது என்ற கேள்வி எழுகிறது. காவல்துறையினர் சில சமயங்களில் சைபர் குற்றங்களை தன்னிச்சையாகவும் (Suo moto) பதிவு செய்யலாம்.
யாராவது உங்களை ஏதேனும் ஒரு சமூக ஊடக தளத்தில் துன்புறுத்தினால், உதாரணமாக ஃபேஸ்புக் என்றால், அதே தளத்தில் புகார் அளிக்க முடியும்
இரண்டாவது கட்டமாக நீங்கள் நேரடியாக காவல்துறையில் புகார் செய்யலாம். இதற்காக மாநில வாரியாக சைபர் கிரைம் பிரிவுகள், காவல் நிலையங்கள் உள்ளன.
காவல் நிலையங்களுக்கு போகாமல் வீட்டிலேயே அமர்ந்து புகார் அளிக்கும் ஏற்பாட்டை இந்தியா முழுக்கச் செய்துள்ளது மத்திய அரசு. நாட்டில் எங்கிருந்து புகார் அளித்தாலும் அந்தந்த மாநில காவல்துறைக்கு புகார் சென்றடையும்.
cybercrime.gov.in எனும் இணையதளத்தில், ‘Register a Complaint’ என்பதை அழுத்தி, அதில் புகார் அளிக்கலாம்.
ஹெல்ப்லைன் எண் 1930க்கு நேரடியாக அழைத்து புகார் செய்யலாம். இந்த எண் நாடு முழுவதும், 24 மணி நேரமும் செயல்பாட்டில் இருக்கும்.
சங்கடத்தை ஏற்படுத்தும் பதிவுகள்
தற்போதைய அரசாங்க விதிமுறைகளின்படி பின்வரும் பதிவுகள் தொல்லை (Nuisance) தருவதாகக் கருதப்படுகிறது.
அவதூறான, ஆபாசமான, குழந்தைகள் தொடர்பான, தனியுரிமையை பாதிக்கக்கூடிய, பாலினம் மற்றும் இனம் தொடர்பான ஆட்சேபனைக்குரிய, பணமோசடி மற்றும் சூதாட்டம் தொடர்பான, சட்டவிரோதமான பதிவுகள்.
குழந்தைகளுக்கு தீங்கு விளைவிக்கக்கூடிய பதிவுகள்.
பதிப்புரிமை, காப்புரிமை வர்த்தக முத்திரை, அறிவுசார் சொத்துரிமை மீறல்.
போலியான தகவல் (போலி செய்தி) பரப்புவது.
பிறரது அடையாளத்தைப் பயன்படுத்துவது.
இந்தியாவின் இறையாண்மை மற்றும் ஒருமைப்பாட்டிற்கு பாதகமான அல்லது தீங்கு விளைவிக்கும், நாட்டின் பாதுகாப்பிற்கு (இந்தியாவின் பாதுகாப்பு படைகள்), மாநிலத்தின் பாதுகாப்பிற்கு (மாநிலத்தின் பாதுகாப்பு அமைப்பு) மற்றும் வெளிநாடுகளுடனான இந்தியாவின் நல்லுறவுக்கு பாதகமான பதிவுகள், பொது ஒழுங்குக்கு கேடு விளைவிக்கும், ஆத்திரமூட்டும் வகையிலான பதிவுகள்.
மத வெறுப்புகளைத் தூண்டும் பதிவுகள்.
இந்தப் பட்டியலில் வன்முறையைத் தூண்டும் பதிவுகளும் அடங்கும்.
சமூக ஊடகங்கள் மூலம் நடக்கும் பல்வேறு குற்றங்களுக்கு எதிராக வழக்கு பதிவு செய்ய காவல்துறைக்கு உரிமை உள்ளது.