6
சைப்ரஸில் உள்ள இங்கிலாந்து ராயல் ஏர் ஃபோர்ஸ் (RAF) தளத்தில் ஈரானிய ட்ரோன் ஒன்று மோதியுள்ளதாக சைப்ரஸ் அதிபர் நிகோஸ் கிறிஸ்டோடுலைட்ஸ் தெரிவித்துள்ளார்.
ஞாயிற்றுக்கிழமை நள்ளிரவில் RAF அக்ரோதிரி (RAF Akrotiri) தளத்தில் நிகழ்ந்த இந்தச் சம்பவத்தில் உயிர்ச்சேதம் ஏதுமில்லை மற்றும் தளத்திற்கு மிகக் குறைந்த சேதமே ஏற்பட்டுள்ளது.
இருப்பினும், முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக அங்கிருக்கும் குடும்ப உறுப்பினர்கள் மற்றும் அத்தியாவசியமற்ற பணியாளர்களைத் தற்காலிகமாக வேறு இடங்களுக்கு மாற்ற இங்கிலாந்து பாதுகாப்பு அமைச்சகம் (MoD) திட்டமிட்டுள்ளது.
ஈரானியத் தலைமை மற்றும் இராணுவத்தின் மீது அமெரிக்காவும் இஸ்ரேலும் சனிக்கிழமை அன்று நடத்திய பாரிய தாக்குதலுக்குப் பதிலடியாக ஈரான் இந்த நடவடிக்கையை எடுத்துள்ளது.
இந்தத் தாக்குதலில் ஈரானின் மூத்த தலைவர் அயதுல்லா அலி கமேனி கொல்லப்பட்டார். இதற்குப் பதிலடியாக இஸ்ரேல், பஹ்ரைன், குவைத், கத்தார், ஐக்கிய அரபு அமீரகம் மற்றும் ஜோர்டான் ஆகிய நாடுகளில் உள்ள அமெரிக்க சொத்துகள் மற்றும் அமெரிக்க நட்பு நாடுகள் மீது ஈரான் ஏவுகணைகள் மற்றும் ட்ரோன்களை ஏவி வருகிறது.
ஈரானிய ஏவுகணை தளங்களைத் தாக்க இங்கிலாந்து இராணுவத் தளங்களைப் பயன்படுத்த அமெரிக்காவிற்கு இங்கிலாந்து பிரதமர் சர் கீர் ஸ்டார்மர் அனுமதி அளித்துள்ளார்.
குறிப்பாக, குளோசெஸ்டர்ஷையரில் உள்ள RAF ஃபேர்ஃபோர்ட் மற்றும் இந்தியப் பெருங்கடலில் உள்ள டியாகோ கார்சியா ஆகிய தளங்கள் இதற்குப் பயன்படுத்தப்படலாம் என்று தெரிகிறது. இருப்பினும், இங்கிலாந்து தற்போது நேரடித் தாக்குதல்களில் ஈடுபடாது என்றும், இது கூட்டாளிகளின் கூட்டுத் தற்காப்புக்காக மட்டுமே எடுக்கப்பட்ட முடிவு என்றும் பிரதமர் தெளிவுபடுத்தியுள்ளார்.
இதற்கிடையில், கத்தாரில் ஒரு ஈரானிய ட்ரோனை இங்கிலாந்து டைபூன் (Typhoon) போர் விமானம் சுட்டு வீழ்த்தியுள்ளது. அமெரிக்க-ஈரான் மோதல் தொடங்கிய பிறகு இங்கிலாந்து போர் விமானம் ஒன்று ஈரானிய ட்ரோனை வீழ்த்திய முதல் சந்தர்ப்பம் இதுவாகும்.
ஈரானிய ஆட்சியின் இந்த பொறுப்பற்ற நடவடிக்கைக் குறிப்பிட்டு, இங்கிலாந்து வெளியுறவுச் செயலாளர் யுவெட் கூப்பர் கடுமையாகக் கண்டித்துள்ளார்.