• Thu. Oct 16th, 2025

24×7 Live News

Apdin News

சொத்துவரி முறைகேடு புகாரில் மதுரை மேயர் இந்திராணி ராஜினாமா – பின்னணி என்ன? | Madurai Mayor Indrani resigns

Byadmin

Oct 16, 2025


மதுரை: சொத்துவரி முறைகேடு புகாரில் மதுரை மேயர் இந்திராணி, திமுக தலைமை அறிவுறுத்தல்படி நேற்று தனது பதவியை ராஜினாமா செய்தார்.

மதுரை மாநகராட்சியில் தனிப்பெரும் கட்சியாக 67 வார்டுகளை கைப்பற்றிய திமுக சார்பில் 8-வது மேயராக இந்திராணி 2022 மார்ச் 4-ல் பொறுப்பேற்றார். இவரது கணவர் பொன்வசந்த், அமைச்சர் பழனிவேல் தியாகராஜனின் தீவிர ஆதரவாளர்.

முதல் 2 ஆண்டுகள் வரை இந்திராணி அமைச்சர் பழனிவேல் தியாகராஜனின் ஆலோசனைப்படி நிர்வாகத்தை நடத்தினார். பின்னர், இந்திராணி கணவர் பொன்வசந்த், அமைச்சர் பழனிவேல் தியாகராஜனுக்கு தெரியாமல் மாநகராட்சியில் பல்வேறு காரியங்களில் ஈடுபடத் தொடங்கினார். பொன்வசந்தின் நிர்வாகத் தலையீடுகளால் மாநகராட்சி ஆணையர்கள் இடமாற்றம் செய்யப்பட்டனர்.

அதிகாரிகளை ஒருமையில் பேசுவது, ஒப்பந்தங்கள், சொத்துவரி நிர்ணயம் செய்வதில் பொன்வசந்த் உத்தரவுகளை அவரது மனைவியும் மேயருமான இந்திராணி செயல்படுத்தினார். அமைச்சர் பழனிவேல் தியாகராஜன் பொன்வசந்த்தை எச்சரித்தும், தனது செயல்பாட்டை நிறுத்திக் கொள்ளாததால், தான் பங்கேற்கும் நிகழ்ச்சிகளில் மேயர் இந்திராணி வருவதற்கு அமைச்சர் வாய்மொழியாக தடை விதித்தார்.

இந்நிலையில், சொத்துவரி முறைகேடு விவகாரத்தில் 24 பேர் கைதாகினர். விசாரணைக்கு அழைக்கப்பட்ட மண்டலத் தலைவர்கள் 5 பேர், 2 நிலைக்குழு தலைவர்கள் ஆகியோரையும் முதல்வர் ஸ்டாலின் ராஜினாமா செய்ய உத்தரவிட்டார். தொடர் விசாரணையில், மேயர் இந்திராணியின் கணவர் பொன்வசந்த்தும் முறைகேட்டுக்கு உடந்தையாக இருந்தது தெரியவந்ததால், அவரையும் கைது செய்தனர்.

எனினும், இந்திராணி மேயராகத் தொடர்ந்தார். அதனால், கட்சித் தலைமை மீது நிர்வாகிகளுக்கு அதிருப்தி ஏற்பட்டது. இதனால், கட்சித் தலைமை, மேயர் இந்திராணியை மாற்றுவதற்கு முடிவு செய்து, புதிய மேயரை தேர்வு செய்யும் பொறுப்பை நகராட்சி நிர்வாகத் துறை அமைச்சர் கே.என்.நேரு, உள்ளூர் அமைச்சர்கள் பி.மூர்த்தி, பழனிவேல் தியாகராஜன் ஆகியோர் வசம் ஒப்படைத்தது.

ஆனால், புதிய மேயரைத் தேர்வு செய்வதில் அமைச்சர்களிடையே ஒற்றுமை ஏற்படாததால், மேயர் இந்திராணி மாற்றம் தள்ளிப்போனது. இதற்கிடையே, அதிமுக முன்னாள் அமைச்சர் செல்லூர் கே.ராஜு தலைமையில், மாநகராட்சி எதிர்க்கட்சித் தலைவர் சோலைராஜா மற்றும் கவுன்சிலர்கள், கட்சியினர் ஆகியோர் மேயர் ராஜினாமா செய்யக் கோரி ஆர்ப்பாட்டம் நடத்தினர். மேலும், மதுரைக்கு பிரச்சாரத்துக்கு வந்த அதிமுக பொதுச் செயலாளர் பழனிசாமி, இந்த விவகாரத்தில் திமுகவை கடுமையாக விமர்சித்தார்.

தொடர் நெருக்கடியால் மேயரை மாற்ற திமுக தலைமை முடிவு செய்தது. இந்நிலையில், நேற்று காலை மேயர் இந்திராணி, ஆணையர் சித்ரா ஆகியோரை சென்னைக்கு வரவழைத்து விசாரித்தனர். பின்னர், அமைச்சர் கே.என்.நேரு முன்னிலையில் மேயர் இந்திராணியிடம் ராஜினாமா கடிதத்தை எழுதி வாங்கினர். புதிய மேயர் நாளை (அக்.17) தேர்வு செய்யப்பட உள்ளார். ஏற்கெனவே நெல்லை, கோவையில் கோஷ்டி பூசலில் மேயர்கள் பதவி பறிக்கப்பட்ட நிலையில், தற்போது ஊழல் புகார் காரணமாக மதுரை மேயரின் பதவி பறிக்கப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.



By admin