மதுரை: சொத்துவரி முறைகேடு வழக்கில் மதுரை மாநகராட்சி மேயரின் கணவருக்கு நிபந்தனை ஜாமீன் வழங்கி உயர் நீதிமன்றம் உத்தரவு பிறப்பித்துள்ளது.
மதுரை மாநகராட்சி மேயரின் கணவர் பொன்வசந்த் உயர் நீதிமன்றம் மதுரை அமர்வில் தாக்கல் செய்த மனு: மதுரை மாநகராட்சியில் சொத்து வரி முறைகேடு தொடர்பான வழக்கில், ஆகஸ்ட் 12-ம் தேதி கைது செய்யப்பட்டு, தற்போது வரை நீதிமன்ற காவலில் உள்ளேன்.
நான் நிரபராதி, எந்த குற்றத்தையும் செய்யவில்லை. முன்விரோதம் காரணமாகவே எனது பெயர் இந்த வழக்கில் சேர்க்கப்பட்டுள்ளது. எனது உடல் நிலை மோசமாக உள்ளது. ஆகவே நிபந்தனைகளுடன் ஜாமீன் வழங்க வேண்டும் என கூறி இருந்தார்.
இந்த மனு நீதிபதி ஸ்ரீமதி முன் இன்று விசாரணைக்கு வந்தது.மனுதாரர் தரப்பில், “மனுதாரர் இந்த வழக்கில் வேண்டுமென்றே சிக்க வைக்கப்பட்டுள்ளார். உடல்நல குறைபாட்டால் அவசர சிகிச்சை பெற்று வருகிறார். விசாரணைக்கு முழு ஒத்துழைப்பு வழங்குவார். இந்த வழக்கில் தொடர்புடைய பலர் ஜாமீனில் உள்ளனர். இவருக்கு மட்டும் ஜாமீன் வழங்காமல் இருப்பது ஏற்புடையதல்ல” எனத் தெரிவிக்கப்பட்டது.
அரசுத் தரப்பில், ஜாமீன் வழங்கினால் சாட்சிகளை கலைக்க வாய்ப்பு உள்ளது. ஆகவே ஜாமீன் வழங்கக் கூடாது என்று கடும் எதிர்ப்பு தெரிவிக்கப்பட்டது. இதை பதிவு செய்து கொண்ட நீதிபதி, வழக்கில் தொடர்புடைய ஆவணங்கள் பறிமுதல் செய்யப்பட்டு விட்டன. மனுதாரர் சிறையில் இருக்கும் காலத்தை கருத்தில் கொண்டு மதுரை நகர் குற்றப்பிரிவு காவல் நிலையத்தில் 4 வாரங்களுக்கு தினமும் நேரில் ஆஜராகி கையெழுத்திட வேண்டும் என்ற நிபந்தனையுடன் ஜாமீன் வழங்கி உத்தரவிட்டார்.