பட மூலாதாரம், EPA
புதன்கிழமை பாகிஸ்தானிலும், பாகிஸ்தான் நிர்வாகம் செய்யும் காஷ்மீரிலும் இந்திய ராணுவம் தாக்குதல் நடத்தியது.
இந்திய அரசின் சார்பில் இந்தச் செய்தியை டெல்லியில் நடந்த செய்தியாளர் சந்திப்பின்போது இந்திய வெளியுறவுத்துறை செயலர் விக்ரம் மிஸ்ரி, கர்னல் சோஃபியா குரேஷி மற்றும் விங் கமாண்டர் வ்யோமிகா சிங் ஆகியோர் தெரிவித்தனர்
கர்னல் சோஃபியா குரேஷி குஜராத்தின் வடோதராவைச் சேர்ந்தவர்.
இந்த விஷயம் வெளிச்சத்துக்கு வந்ததும், கர்னல் சோஃபியாவை ‘குஜராத்தின் மகள்’ என்று விவரிக்கும் பதிவுகள் சமூக ஊடகத்தில் வலம் வரத் தொடங்கின.
குஜராத்தின் தகவல்தொடர்புத் துறை வெளியிட்ட செய்தியின்படி கர்னல் சோஃபியா வடோதராவைச் சேர்ந்தவர். வடோதராவின் மஹாராஜா சாயாஜிராவ் பல்கலைக்கழகத்தில் 1997ம் வருடம் பயோகெமிஸ்ட்ரியில் முதுகலைப் பட்டம் பெற்றவர்.
படிப்பை முடித்ததும் இந்திய ராணுவத்தை அவர் தேர்ந்தெடுத்தார்.
அவருடைய தாத்தாவும் ஒருவகையில் இந்திய ராணுவத்தோடு தொடர்புடையவர். மதபோதகராக அவர் பணியாற்றினார்.
சோஃபியாவின் கணவரும் இந்திய ராணுவத்தின் அதிகாரியாக இருக்கிறார்.
2016ம் ஆண்டில், இந்திய ராணுவ வரலாற்றில், கர்னல் சோஃபியா, ஒரு வரலாற்றுச் சிறப்புமிக்க சாதனையைச் செய்தார்.
தென்கிழக்காசிய நாடுகளின் கூட்டமைப்பு + (ASEAN Plus) நடத்திய ‘Force 18’ எனப்படும் பல நாடுகளுக்கான ராணுவப் பயிற்சியில் இந்திய ராணுவத்தை வழிநடத்திய முதல் பெண்ணாகவும், சுமார் 18 நாடுகள் கலந்து கொண்ட இந்த நிகழ்வின் ஒரே பெண் கமாண்டராகவும் விளங்கினார் சோஃபியா.
இந்திய ராணுவத்தின் தகவலின்படி சோஃபியா களத்தில் வீரராக மட்டுமல்ல, பல சர்வதேச அமைதிப் பணிகளிலும் தனது பங்களிப்பை வழங்கியுள்ளார். ஐநா அமைதி காப்புப் பணிகளில் ஆறு வருடங்கள் சேவை புரிந்தபோது 2006ம் வருடம் காங்கோவுக்கு அனுப்பப்பட்டார்.
“பிரச்னை இருக்கும் இடங்களில் அமைதியைக் கொண்டு வர முயற்சி எடுத்த சமயம் எனக்கு மிகவும் பெருமையான காலகட்டம்” என்கிறார் அவர்.
பட மூலாதாரம், Information Department, Gujarat
‘நான் எனது மகளை நினைத்துப் பெருமைப்படுகிறேன்’ – கர்னல் சோஃபியாவின் தந்தை
கர்னல் சோஃபியாவின் தந்தை தாஜ் முகமது குரேஷி ஊடகங்களிடம் பேசும்போது, “நாங்கள் மிகவும் பெருமைப்படுகிறோம். இந்த நாட்டிற்காக என் மகள் செய்திருக்கும் காரியங்களை நினைத்து நான் பெருமைப்படுகிறேன். நாங்கள் இந்த தேசத்திற்காக எங்களை அர்ப்பணித்துள்ளோம். முதலில் நாங்கள் இந்தியர்கள், பின்னர்தான் முஸ்லிம்கள்” என்று கூறினார்.
இந்தியாவின் நடவடிக்கைகள் குறித்து அவர் கூறுகையில், “நமது நாடு நடவடிக்கை எடுக்க கொஞ்சம் தாமதித்துவிட்டது,” என்று கூறினார்.
கர்னல் சோஃபியா ஊடகங்களுடனான உரையாடலில் ஆபரேஷன் சிந்தூர் பற்றிய தகவல்களை வழங்கியபோது முகமது குரேஷிக்கு மனதில் என்ன உணர்ச்சிகள் தோன்றியது என கேட்டபோது “அந்த நேரத்தில், நான் பெருமைப்பட்டேன். என் மகளும் தனது தேசத்திற்காக எதையோ செய்திருக்கிறாள் என்று உணர்ந்தேன்” என்று கூறினார்.
கர்னல் சோபியாவின் தாயார் ஹலீமா பீபி குரேஷி, தனது மகள் ராணுவத்தில் சேர்வதற்கான உத்வேகம் குறித்துப் பேசுகையில், “அவளது தாத்தாவும் தந்தையும் ராணுவத்தில் சேர்ந்ததாக அவளது பாட்டி அவளிடம் கூறுவார். எனது சகோதரர்கள் யாரும் ராணுவத்தில் சேரவில்லை, எனவே நான் வளர்ந்ததும் ராணுவத்தில் சேருவேன் என்று சோஃபியா கூறுவார்,” என்று கூறினார்.
தனது மகள் ராணுவத்தில் சேர்ந்தது குறித்து ‘எந்த பயமும்’ தனக்கு இல்லை என்றார் அவர்.
கர்னல் சோஃபியாவின் மகனும் இப்போது ராணுவத்தில் சேர விரும்புவதாக சோஃபியாவின் தாயார் செய்தியாளர்களிடம் கூறினார்.
கர்னல் சோஃபியாவின் சகோதரர் முகமது சஞ்சய்பாய் குரேஷி பேசும்போது, “பஹல்காம் சம்பவத்தை விடக் கண்டிக்கத்தக்க சம்பவம் எதுவும் இருக்க முடியாது. இது ஒரு எதிர்வினை. தற்போதைய தருணம் எங்கள் குடும்பம் உட்பட முழு இந்தியாவிற்கும் மிகவும் பெருமையான தருணம்” என்று கூறினார்.
கர்னல் சோஃபியாவைப் பற்றிப் பேசுகையில், “எங்கள் தாத்தா, தந்தை, இப்போது சோஃபியா ஆகியோர் இந்திய ராணுவத்தில் பணியாற்றியுள்ளனர். தேசபக்தி எங்கள் ரத்தத்தில் உள்ளது” என்றார்.
பட மூலாதாரம், Hardik
சோஃபியாவின் வகுப்புத்தோழர் அவரை எப்படி நினைவு கூர்கிறார்?
நாடு முழுவதும் இன்று சோஃபியாவின் பெயர் பேசப்படும் சமயத்தில், சோஃபியாவின் வகுப்புத் தோழரும் எம்.எஸ். பல்கலைக்கழகத்தின் உயிர்வேதியியல் துறையின் உதவிப் பேராசிரியருமான எம்.எஸ். தேவேஷ் சுதர், பிபிசி குஜராத்தியிடம் பேசும்போது சோஃபியாவை நினைவு கூர்ந்தார்.
“சோஃபியா நாங்கள் படிக்கும் காலத்தில் எல்லாருடனும் நன்கு பழக்கூடியவர். சோஃபியாவுக்கு ஏற்கெனவே ராணுவப் பின்னணி இருந்தது. சோஃபியா நாட்டிற்கும், வடோதராவிற்கும், எம்.எஸ். பல்கலைக்கழகத்திற்கும் பெருமை சேர்த்துள்ளார். இன்று நாங்கள் அனைவரும் மிகவும் பெருமைப்படுகிறோம்” என்று அவர் கூறினார்.
பட மூலாதாரம், Information Department, Gujarat
“நாங்கள் வகுப்பிலும் நூலகத்திலும் ஒன்றாகப் படிப்போம். அந்தக் காலத்தில் இணையம் இல்லை. நூலகத்திலிருந்து புத்தகங்களைப் பெற நாங்கள் நிறைய சிரமப்பட்டிருக்கிறோம்.”
சோஃபியாவின் குடும்பத்தைப் பற்றிப் பேசுகையில், “அவருடைய பெற்றோரும் நன்றாகப் பேசிப் பழகுவார்கள். நான் விடுதியில் வசித்தபோது, சில சமயங்களில் வீட்டில் சமைத்த உணவு வேண்டும் என்று நாங்கள் ஆசைப்படும் சமயத்தில், சோஃபியாவின் வீட்டிலிருந்து உணவு கொண்டு வருவார். பேராசிரியர் ஹரி கட்டாரியாவின் வழிகாட்டுதலின் கீழ் சில காலம் அவர் ஆராய்ச்சியும் செய்தார்” என்றார்.
– இது பிபிசிக்காக கலெக்டிவ் நியூஸ்ரூம் வெளியீடு