பட மூலாதாரம், Getty Images
சோறு சாப்பிடுவது உடலுக்கு நல்லதா அல்லது சப்பாத்தி சாப்பிடுவது நல்லதா என்பது குறித்து பல சமயங்களில் மக்கள் மத்தியில் விவாதம் எழுகிறது.
பலர் இரவு உணவுக்குச் சோறு, சப்பாத்தி இரண்டையும் சாப்பிடுகிறார்கள். இதில் ஒருவித சமநிலையும் இருப்பதாக அவர்கள் உணர்கிறார்கள்.
தமிழ்நாடு உள்ளிட்ட தென்னிந்திய மாநிலங்களிலும், பிகார், மேற்கு வங்கம் அல்லது ஒடிசா போன்ற மாநிலங்களில் அரிசி (சோறு) மக்களின் முக்கிய உணவாக உள்ளது.
அதே சமயம், பஞ்சாப் அல்லது மத்தியப் பிரதேசம் உட்பட வேறு சில பகுதிகளில் மக்கள் சப்பாத்தியை விரும்புகிறார்கள்.
ஆனால், நிபுணர்கள் இந்த விவாதத்தை வெறும் சோறு, சப்பாத்தி என்ற அடிப்படையில் மட்டும் பார்ப்பதில்லை.
உங்கள் இரவு உணவுத் தட்டில் சப்பாத்தி இருக்க வேண்டுமா அல்லது சோறு இருக்க வேண்டுமா என்பது பல விஷயங்களைப் பொறுத்தது.
நீங்கள் எந்த வகையான அரிசி அல்லது சப்பாத்தியைச் சாப்பிடுகிறீர்கள் என்பதையும் இது சார்ந்துள்ளது.
எப்படிச் சாப்பிடுகிறோம் என்பதே முக்கியம்
பட மூலாதாரம், Getty Images
நம் உணவில் சோறு இருந்தாலும் சரி, சப்பாத்தி இருந்தாலும் சரி, இரண்டிலும் கார்போஹைட்ரேட் எனப்படும் மாவுச் சத்து உள்ளது.
பொதுவாக சப்பாத்தியில் சோறை விடக் குறைவான கார்போஹைட்ரேட் இருப்பதாகவும் எனவே ஆரோக்கியத்தைப் பொறுத்தவரை இது மிகவும் சிறந்தது எனவும் நம்பப்படுகிறது.
“நீங்கள் அதிக நார்ச்சத்து கொண்ட சப்பாத்தியைச் சாப்பிட்டால் பரவாயில்லை, ஆனால் நீங்கள் சுத்திகரிக்கப்பட்ட மாவில் (refined flour) செய்யப்பட்ட சப்பாத்தியைச் சாப்பிட்டால், அது சோறுக்கு சமமானதுதான். இதையும் சாப்பிடும்போது சர்க்கரை அளவு வேகமாக அதிகரிக்கும்” என்கிறார் நியூட்ரிபை டுடே நிறுவனத்தின் உணவியல் துறைத் தலைவரும் மும்பையைச் சேர்ந்த உணவியல் நிபுணருமான நாஸ்னீன் ஹுசைன்.
பாலிஷ் செய்யப்பட்ட நீளமான அரிசியைச் சாப்பிடுவது ஆரோக்கியத்திற்கு நல்லதல்ல என்றும், ஆனால் பாலிஷ் செய்யப்படாத சிறிய அரிசி இந்த விஷயத்தில் சிறந்தது என்றும் அவர் கூறுகிறார்.
நார்ச்சத்தைக் கருத்தில் கொண்டு, மருத்துவர்கள் அல்லது உணவியல் நிபுணர்கள் சில சமயங்களில் மக்களுக்கு பழுப்பு அரிசி (Brown Rice) அல்லது பாலிஷ் செய்யப்படாத அரிசியைச் சாப்பிடப் பரிந்துரைக்கின்றனர்.
டெல்லியில் உள்ள கங்காராம் மருத்துவமனையின் மூத்த ஆலோசகர் மருத்துவர் எம். வாலி கூறுகையில், “இன்று நாம் சாப்பிடும் சப்பாத்தி மாவு, சர்க்கரை, மைதா மற்றும் உப்பு போன்றே வெள்ளை விஷமாக மாறி வருகிறது.”
“நாம் சப்பாத்தியை அதிகமாகவும், காய்கறிகளைக் குறைவாகவும் சாப்பிடுவதுதான் நமது உணவு முறையில் உள்ள மற்றொரு தவறு. நீங்கள் சோறுடன் அதிக காய்கறிகளைச் சாப்பிட்டால், அதன் கிளைசெமிக் குறியீடு (Glycemic Index) மேம்படுகிறது, அதாவது அதிலிருந்து உருவாகும் சர்க்கரை உடலில் மெதுவாகக் கரைகிறது. இந்த வகையில், அது சப்பாத்தியை விடச் சிறப்பாகிறது.”
நீங்கள் சப்பாத்தி மாவை பச்சைக் காய்கறிகள், கீரைகள் அல்லது சுரைக்காயுடன் சேர்த்து பிசைந்து, அதாவது வெறும் மாவை மட்டும் பயன்படுத்தி சப்பாத்தி செய்யாமல் உங்கள் உணவை மேம்படுத்த முடியும் என்று மருத்துவர் வாலி கூறுகிறார்.
பட மூலாதாரம், Getty Images
சோறு அல்லது சப்பாத்தி? எது சிறந்தது?
சோறு மற்றும் சப்பாத்திக்கு இடையேயான அடிப்படை வித்தியாசம் என்னவென்றால், யாருக்கு அதிக ஆற்றல் (Energy) தேவைப்படுகிறதோ, அவர்களுக்குச் சோறு சிறந்தது. உதாரணமாக, அதிக உடல் உழைப்பு உள்ளவர்களுக்குச் சோறு சிறந்தது.
ஆனால் நீங்கள் அதிகமாகச் சாப்பிடுவதைத் தவிர்க்க விரும்பினால் அல்லது அடிக்கடி சாப்பிட விரும்பவில்லை என்றால், சப்பாத்தி உங்களுக்குச் சிறந்த தேர்வாகும், ஏனெனில் இதில் அதிக நார்ச்சத்து உள்ளது.
இது நீண்ட நேரம் வயிறு நிரம்பிய உணர்வைத் தக்கவைக்கிறது.
“நீங்கள் சப்பாத்தியை நல்ல புரதத்துடன் எடுத்துக் கொண்டால், அது சிறந்தது. அசைவம் சாப்பிடுபவர்களுக்குப் பல விருப்பங்கள் உள்ளன, சைவ உணவு உண்பவர்கள் சப்பாத்தியுடன் காய்கறிகள் அல்லது பருப்பு வகைகளைச் சேர்த்துக்கொள்ளலாம்,” என்கிறார் டெல்லி எய்ம்ஸ் மருத்துவமனையின் உணவு நிபுணர் மாலா மன்ரால்.
“நீங்கள் எதைச் சாப்பிட வேண்டும் என்பது உங்கள் வேலை மற்றும் வாழ்க்கை முறையைப் பொறுத்தது. நீங்கள் உட்கார்ந்து வேலை செய்யும் பணியில் இருந்தால், உங்களுக்குக் குறைந்த கலோரிகளே தேவைப்படும். இத்தகையவர்கள் அதிகம் சோறு சாப்பிட்டால் உடல் பருமன் ஏற்படும் அபாயம் உள்ளதால், அவர்களை சப்பாத்தி சாப்பிட நாங்கள் அறிவுறுத்துகிறோம்,” என மாலா மன்ரால் சொல்கிறார்.
பட மூலாதாரம், Getty Images
“ஒவ்வொரு நபரின் உடல் செயல்பாடு மற்றும் வயதிற்கு ஏற்ப ஒரு குறிப்பிட்ட அளவு கலோரிகள் தேவைப்படுகின்றன. ஒருவருக்கு 1600 கிலோ கலோரிகள் தேவை என்று வைத்துக்கொள்வோம், அதில் 60% கார்போஹைட்ரேட்டிலிருந்தும், 20% புரதத்திலிருந்தும், சுமார் 20% கொழுப்பிலிருந்தும் கிடைக்க வேண்டும்,” என்கிறார் மாலா மன்ரால்.
இதில் கார்போஹைட்ரேட்டிற்காக சப்பாத்தி, சோறு, இட்லி, உப்புமா மற்றும் புரதத்திற்காகப் இறைச்சி, பருப்பு, முட்டை போன்ற பொருட்கள் அடங்கும்.
ஒருவர் சோறு சாப்பிட வேண்டுமா அல்லது சப்பாத்தி சாப்பிட வேண்டுமா என்பது பெரும்பாலும் அவரது ஆரோக்கியத்தைப் பொறுத்தது.
பொதுவாக, நீரிழிவு (சர்க்கரை) நோயாளிகள் சோறு சாப்பிடுவதைத் தவிர்த்து, அதிக நார்ச்சத்து நிறைந்த உணவைச் சாப்பிட அறிவுறுத்தப்படுகிறார்கள்.
பட மூலாதாரம், Getty Images
ஒரு பகுதியின் அடிப்படையிலும் மக்களின் உணவு தீர்மானிக்கப்படுகிறதா?
சிறுவயதில் இருந்து எதைச் சாப்பிட்டுப் பழகியிருக்கிறோமோ அதை ஜீரணிக்க நமது உடலுக்கு எளிதாக இருக்கும் என்றும், அந்த உணவே நமக்குத் திருப்தியையும் அளிக்கும் என்றும் நம்பப்படுகிறது.
”எந்தப் பகுதியில் எந்தப் பொருள் உற்பத்தி செய்யப்படுகிறதோ, அதுவே அந்தப் பகுதியின் முக்கிய உணவாக இருக்கிறது, பொதுவாக மக்கள் அத்தகைய உணவையே சாப்பிட வேண்டும்,” என்கிறார் நாஸ்னீன் ஹுசைன்.
“இந்தியாவில் பார்த்தால், பெரும்பாலானோர் சோறு சாப்பிடுகிறார்கள். தென்னிந்தியாவில் நீரிழிவு நோயாளிகளும் கூடச் சோறு சாப்பிடுகிறார்கள், ஆனால் சோறுடன் பல பொருட்களைச் சேர்த்துச் சாப்பிடுவதால், அதைச் செரிக்க கணையத்திற்கு (Pancreas) அதிக அழுத்தம் ஏற்படுவதில்லை,” என்கிறார் மருத்துவர் வாலி.
– இது, பிபிசிக்காக கலெக்டிவ் நியூஸ்ரூம் வெளியீடு.