பட மூலாதாரம், Getty Images
யுக்ரேனுக்கு எதிரான போரில் ரஷ்யாவுக்கு நிதி உதவி செய்ததாகக் கூறி, இரண்டு முக்கிய ரஷ்ய எண்ணெய் நிறுவனங்கள் மீது தடைகளை விதிப்பதாக அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப் அறிவித்துள்ளார்.
டிரம்ப் நிர்வாகம் இதுவரை எடுத்த மிக முக்கிய நடவடிக்கையாக இது கருதப்படுகிறது. ரஷ்யாவுக்கு எதிராக டிரம்ப் நிர்வாகம் நேரடியாக பொருளாதார அழுத்தம் கொடுப்பது இதுவே முதல் முறை.
யுக்ரேனில் அமைதியை நிலைநாட்ட டிரம்ப் எண்ணெயைப் பயன்படுத்தி மத்தியஸ்தம் செய்ய முடியும் என்று நம்பப்படுகிறது.
“அப்போதைய சூழ்நிலை, கம்யூனிஸ்டுகளை புத்திக்கூர்மையுடன் நடந்து சமரசம் செய்ய வைத்தது என்பதை வரலாறு சுட்டிக்காட்டுகிறது” என போலந்து நாட்டைச் சேர்ந்த விமர்சகரும் பத்திரிகையாளருமான ஆடம் மிச்னிக் கூறியுள்ளார்.
சோவியத் ஒன்றியத்தை பொறுத்தவரை, எண்ணெய் விலை முக்கியமான ஒன்றாக இருந்தது.
இரண்டாம் உலகப் போருக்குப் பிறகு, குறிப்பாக 1970களிலும் 1980களிலும், உலக பொருளாதாரம் நிலைகுலைந்தது. அப்போது எண்ணெய் விலை கடுமையாக ஏற்ற, இறக்கங்களை சந்தித்தது.
1973–74 காலத்திலும், பின்னர் 1978–80 காலத்திலும் கச்சா எண்ணெய் விலை கடுமையாக உயர்ந்தது. இதனால் அமெரிக்காவிலும் மேற்கு ஐரோப்பாவிலும் பணவீக்கம் மேலும் அதிகரித்தது. அப்போது இந்த நாடுகள் பொருளாதார மந்தநிலை, வேலையின்மை மற்றும் கடன் பிரச்னைகளுடன் போராடின.
இதே நேரத்தில், எண்ணெய் ஏற்றுமதியால் சோவியத் ஒன்றியத்தின் வருவாய் அதிகரித்தது. இதனால் அதன் மந்தமான, ஆனால் நிலையான பொருளாதாரம் தாக்குப்பிடித்ததுடன் தொழில் மற்றும் ராணுவ கட்டமைப்புகளும் பலம் பெற்றன.
இதன் எதிரொலியாக, சோவியத் ஒன்றியத்தால் ஆப்பிரிக்கா மற்றும் ஆசியா போன்ற பகுதிகளில் தனது செல்வாக்கை விரிவுபடுத்த முடிந்தது.
போரும் அமைதியும்
பட மூலாதாரம், Getty Images
1973-ஆம் ஆண்டு அக்டோபர் 6-ஆம் தேதி எகிப்து மற்றும் சிரியா தலைமையிலான அரபு நாடுகள் கூட்டணி இஸ்ரேல் மீது திடீர் தாக்குதல் நடத்தின. இந்தப் போர் ‘யோம் கிப்பர் போர்’ என்று அழைக்கப்படுகிறது.
இந்தப் போரில், சோவியத் ஒன்றியம் அரபு நாடுகளை ஆதரித்தது, அமெரிக்கா இஸ்ரேலை ஆதரித்தது. இதற்கு பதிலாக, அரபு நாடுகள் எண்ணெய் விநியோகத்தை குறைத்து, அமெரிக்காவுக்கு எதிராக தடைfளை விதித்தன. இதன் விளைவாக, அமெரிக்காவில் எண்ணெய் விலை கடுமையாக உயர்ந்தது.
‘தி ப்ரைஸ் : தி எபிக் க்வஸ்ட் பார் ஆயில் அண்ட் பவர்’ (‘The Prize: The Epic Quest for Oil, Money and Power’)என்ற புத்தகத்தின் ஆசிரியரும் வரலாற்றாசிரியருமான டேனியல் யெர்ஜின் 1973 ஆம் ஆண்டின் எண்ணெய் தடையைப் பற்றி கூறும்போது, அது உலகின் எரிசக்தி (எண்ணெய் மற்றும் எரிவாயு) சந்தையை முழுமையாக உலுக்கியது.
“அது பிராந்திய அரசியலையும் உலகப் பொருளாதாரத்தையும் மாற்றி, நவீன எரிசக்தி காலத்தை தொடங்கியது” என்று குறிப்பிடுகிறார்.
இதன் பின்னர், 1979 ஆம் ஆண்டு எகிப்து–இஸ்ரேல் சமாதான ஒப்பந்தம் கையெழுத்தான போது, இரானில் நடந்த புரட்சி இரண்டாவது எண்ணெய் நெருக்கடியை உருவாக்கியது.
வெற்றியும் தோல்வியும்
பட மூலாதாரம், Getty Images
அமெரிக்காவும் மேற்கு ஐரோப்பாவும் மந்தநிலையைச் சந்தித்த காலத்தில், சோவியத் ஒன்றியத்தின் பொருளாதாரம் ஒப்பீட்டளவில் நிலையாக இருந்தது.
அப்போது, வளைகுடா நாடுகளைத் தவிர உலகின் மிகப்பெரிய எண்ணெய் இருப்புகள் சைபீரியாவுக்கு அருகில் கண்டுபிடிக்கப்பட்டன. எண்ணெய் விலை உயர்ந்ததால், எண்ணெய் உற்பத்தி மிகுந்த லாபகரமான தொழிலாக மாறியது.
இதற்கிடையில் 1980-க்குள், சோவியத் ஒன்றியம் உலகின் மிகப்பெரிய எண்ணெய் ஏற்றுமதியாளராக உருவெடுத்தது.
இதன் மூலம் கியூபா, வியட்நாம், மற்றும் கிழக்கு ஐரோப்பிய நாடுகள் சோவியத் எண்ணெயை குறைந்த விலையில் பெற முடிந்தது. இதனால், சோவியத் ஒன்றியத்தை சார்ந்த நாடுகளின் ஒரு அரசியல்-பொருளாதார வலையமைப்பு உருவானது.
கச்சா எண்ணெய் ஏற்றுமதியால் கிடைத்த பெட்ரோ-டாலர் வருமானத்தில், தானியம் முதல் தொழில்நுட்ப சாதனங்கள் வரை பல பொருட்களை சோவியத் ஒன்றியம் இறக்குமதி செய்தது. இதனால், சோவியத் பொருளாதாரத்திற்குள் இருந்த பிரச்னைகள் மறைந்துவிட்டன.
பாதுகாப்புச் செலவினங்களைத் தவிர, பொருளாதாரத்தின் மற்ற எல்லா துறைகளிலிருந்தும் பெறப்பட்ட வளங்கள் எண்ணெய்த் தொழிலில் முதலீடு செய்யப்பட்டன.
அப்போது ஜெர்மன் அதிபர் ஹெல்மட் கோல், சோவியத் ஒன்றியத்தை கேலி செய்து,”அது இப்போது ராக்கெட்டுகளுடன் கூடிய புர்கினா பாசோவாக (Burkina Faso with rockets) மாறிவிட்டது,”என்று கூறினார்.
அதாவது மேற்கு ஆப்பிரிக்க நாடான புர்கினா பாசோவின் வறுமையை அவர் குறிப்பிட்டு பேசியிருந்தார்.
நேரமும் பணமும்
பட மூலாதாரம், Getty Images
1979 ஆம் ஆண்டு சோவியத் ஒன்றியம் ஆப்கானிஸ்தான் மீது படையெடுத்த பிறகு, அமெரிக்காவும் பிற மேற்கத்திய நாடுகளும் சோவியத் தொழில்நுட்ப ஏற்றுமதிக்கு கடும் கட்டுப்பாடுகளை விதித்தன. இதனால், சோவியத்தின் எண்ணெய் உற்பத்தி பாதிக்கப்பட்டது.
1980களின் தொடக்கத்தில் உலகம் முழுவதும் எண்ணெய் நுகர்வு குறையத் தொடங்கியது, அதன் விளைவாக எண்ணெய் விலையும் சரிந்தது. இதனால், சோவியத் ஒன்றியத்தின் பட்ஜெட் மற்றும் செலவுகளுக்கு ஆதாரமாக திகழ்ந்த முக்கிய வருமானம் குறைந்தது.
அந்த நேரத்தில், போலந்தில் வேலைநிறுத்தங்களும் ஆர்ப்பாட்டங்களும் பரவியதால் அங்கு ராணுவச் சட்டம் அமல்படுத்தப்பட்டது.
இந்நிலையில், சோவியத் ஒன்றிய அரசு பட்ஜெட் பற்றாக்குறையை ஈடுகட்ட கடன் பெறத் தொடங்கியது.
‘போஸ்ட் வார்: எ ஹிஸ்டரி ஆஃப் ஐரோப்பா சின்ஸ் 1945’ (‘Post War: A History of Europe Since 1945’) என்ற புகழ்பெற்ற நூலின் ஆசிரியர் டோனி ஜட் இதைப் பற்றி கூறும்போது, ‘சோவியத் கூட்டணி கடன் வாங்கிய பணத்தில் மட்டுமல்ல, கடன் வாங்கிய நேரத்திலும் வாழ்ந்தது’ என்று குறிப்பிட்டார்.
ஒப்பந்தம் நடக்குமா இல்லையா?
பட மூலாதாரம், Getty Images
1980 முதல் 1986 வரை, எண்ணெய் விலை பீப்பாய்க்கு 35 டாலரிலிருந்து 10 முதல் 15 டாலர் வரை கடுமையாக சரிந்தது.
மேற்கத்திய நாடுகள் மத்திய கிழக்கிலிருந்து எண்ணெய் இறக்குமதியை குறைப்பதற்காக, எரிசக்தி சேமிப்பு, மின்சக்தி பயன்பாட்டை அதிகரித்தல், மற்றும் உள்நாட்டு உற்பத்தியை உயர்த்துதல் ஆகியவற்றில் கவனம் செலுத்தின.
யுக்ரேன் அதிபர் அலுவலகத் தலைவராக பணிபுரிந்துள்ள ஆண்ட்ரி யெர்மக், “உற்பத்தியை அதிகரித்து எண்ணெய் விலையை குறைப்பதன் மூலம் சோவியத் ஒன்றியத்திற்கு சேதாரம் விளைவிக்க வாய்ப்புகள் இருந்ததை கண்டனர்” என்று கூறினார்.
“1986 ஆம் ஆண்டில், அமெரிக்க அதிபர் ரொனால்ட் ரீகனும் சௌதி அரேபியாவின் மன்னர் ஃபஹத்தும் எண்ணெய் விலையைக் குறைக்கத் திட்டமிட்டனர்,” என்று வால் ஸ்ட்ரீட் ஜர்னல் கட்டுரையில் யெர்மக் குறிப்பிட்டுள்ளார்.
“ஒரு பீப்பாய்க்கு 10 டாலர் குறைக்கப்பட்டால், சோவியத் ஒன்றியத்திற்கு ஓராண்டில் சுமார் 10 பில்லியன் டாலர் இழப்பு ஏற்படும்”.
“சௌதி அரேபியா பெட்ரோலிய ஏற்றுமதி நாடுகளின் அமைப்பான ஒபெக்கில் மிகவும் செல்வாக்கு மிக்க நாடாக இருந்தது. அது அந்த அமைப்பை சமாதானப்படுத்தி எண்ணெய் உற்பத்தியை அதிகரிக்கச் செய்தது.” என்றும் அவர் குறிப்பிட்டிருந்தார்.
“அதே சமயம், அமெரிக்காவும் எண்ணெய் உற்பத்தியை அதிகரித்து, சோவியத் தொழில்நுட்ப ஏற்றுமதிக்கு கட்டுப்பாடுகளை விதித்தது. இதனால் எண்ணெய் விலை எதிர்பார்த்ததை விடக் குறைந்து, பீப்பாய்க்கு 12 டாலர் ஆனது.”
இதற்கிடையில், “ராணுவச் செலவுகள் சோவியத் ஒன்றியத்தின் பொருளாதாரத்துக்கு மிகப் பெரிய சேதத்தை ஏற்படுத்தின. அதன் பிறகு என்ன நடந்தது என்பது அனைவருக்கும் தெரியும். சோவியத் ஒன்றியம் 1991 இல் சரிந்தது.”
ரீகன் நிர்வாகம் இப்படியொரு ஒப்பந்தம் நடக்கவில்லை என்று மறுத்தாலும், இந்த விவகாரம் இன்று வரை பொருளாதார நிபுணர்கள், வரலாற்றாசிரியர்கள், மற்றும் ராஜ்ஜீய அதிகரிகளிடையே விவாதப் பொருளாக உள்ளது.
உண்மையில், ஐரோப்பிய சிந்தனைக் குழுவான ‘ ‘ஐரோப்பாவில் பகுப்பாய்வு மற்றும் உத்திகளுக்கான மையத்தின்’ (Center for Analysis and Strategies in Europe-CASE) இயக்குநரும் பொருளாதார நிபுணருமான டிமிட்ரி நெக்ராசோவ், இதை ஒரு ‘சதி கோட்பாடு’ என்று நிராகரித்துள்ளார்.
அவரின் கூற்றுப்படி, “அது நிரூபிக்கப்பட்ட உண்மை அல்ல.”
ஆற்றல் ஏற்றுமதியைச் சார்ந்திருத்தல்
பட மூலாதாரம், Getty Images
1985 ஆம் ஆண்டு மிகைல் கோர்பச்சேவ் சோவியத் ஒன்றியத்தின் தலைவரான போது, அவர் எண்ணெய் வருவாயை பயன்படுத்தி கிளாஸ்னோஸ்ட் (ஆலோசனை மற்றும் கருத்து வெளிப்பாட்டுச் சுதந்திரக் கொள்கை),பெரெஸ்ட்ரோயிகா (அரசியல் மற்றும் பொருளாதார சீர்திருத்தங்கள்) மற்றும் தாராளமய பொருளாதார மாற்றங்களை முன்னெடுக்கலாம் என்று நம்பினார்.
அந்தக் காலத்தில் சோவியத் ஒன்றியம் உலகின் மிகப்பெரிய எண்ணெய் உற்பத்தியாளராக இருந்தாலும், அது தனது உள்நாட்டு தேவையையும், அதைச் சார்ந்த மற்ற நாடுகளின் தேவையையும் பூர்த்தி செய்ய முடியாமல் போனது.
இதற்கு முக்கிய காரணம், எண்ணெய் மானிய விலையில் வழங்கப்பட்டதும், உலக சந்தையில் எண்ணெய் விலையும் தேவையும் குறைந்திருந்ததும் ஆகும்.
சோவியத் ஒன்றியம் மானியங்களை நிறுத்தியவுடன், அதன் பொருளாதார கட்டமைப்பே சீர்குலையத் தொடங்கியது.
1980களின் இறுதியில், கிழக்கு ஐரோப்பாவில் நடந்த புரட்சிகளும், தனித்தனி நாடுகள் உருவானதாலும், 1991 டிசம்பர் 25-ஆம் தேதி ரஷ்ய அதிபர் மாளிகையின் கொடியிலிருந்து சுத்தியல் மற்றும் அரிவாள் சின்னம் அகற்றப்பட்டது. அதற்குப் பதிலாக ரஷ்ய மூவர்ணக் கொடி ஏற்றப்பட்டது.
ஆனால், சோவியத் ஒன்றியத்தை போலவே, இன்றைய ரஷ்யாவின் பொருளாதாரமும் பெரும்பாலும் எரிசக்தி ஏற்றுமதியையே சார்ந்துள்ளது.
ஆண்ட்ரி யெர்மக் இதைப் பற்றி எழுதும்போது, “ரஷ்யாவின் பொருளாதாரம், சோவியத் காலத்தை போலவே, நாட்டின் இயற்கை வளங்களைச் சார்ந்தே உள்ளது”என்று கூறுகிறார்.
“சமீபத்திய ஆண்டுகளில் எண்ணெய் மற்றும் எரிவாயு ரஷ்ய ஏற்றுமதியில் 60 சதவீதத்தையும், நாட்டின் வருவாயில் 40 சதவீதத்தையும் கொண்டுள்ளது.”
மேற்கத்திய நாடுகள் பல தடைகளை விதித்திருந்த போதும், ரஷ்ய எண்ணெயின் மிகப்பெரிய நுகர்வோராக உலகின் இரு மிகப்பெரிய மக்கள் தொகை கொண்ட நாடுகளான சீனாவும் இந்தியாவும் உள்ளன.
துருக்கியும் ரஷ்யாவிலிருந்து எண்ணெய் வாங்கி வருகிறது.
இவ்வாறு, ரஷ்யா எண்ணெய் மூலம் சம்பாதிக்கும் பில்லியன்கணக்கான டாலர் வருவாய் இன்று யுக்ரேன் போருக்கான நிதியாக பயன்படுத்தப்படுகிறது.
டிரம்பின் கொள்கை
பட மூலாதாரம், Reuters
2025-ஆம் ஆண்டு ஜனவரியில் மீண்டும் அமெரிக்க அதிபராகத் தேர்ந்தெடுக்கப்பட்ட டொனால்ட் டிரம்ப், தனது முதல் உரையிலேயே “டிரில் பேபி, டிரில்” என்ற கொள்கையை அறிவித்தார்.
சோவியத் ஒன்றியத்தை “தீய சாம்ராஜ்யம்” என்று ஒரு காலத்தில் அழைத்த ரீகனின் பாதையை டிரம்ப் பின்பற்றலாம் என்று சிலர் நம்புகிறார்கள்.
எண்ணெய் உற்பத்தியை அதிகரித்து அதன் விலையை குறைப்பதன் மூலம் ரஷ்யாவின் வருவாய்க்கு அமெரிக்கா தீங்கு விளைவிக்கும் என்று யெர்மக் கூறுகிறார்.
ஆனால், டிரம்பின் புதிய தடைகள் தற்போது உலகளாவிய எண்ணெய் விலையை உயர்த்தியுள்ளன. ரஷ்ய கச்சா எண்ணெயை வாங்க விரும்புபவர்களுக்கு இந்த தடைகள் சிக்கலை உருவாக்கக் கூடும். இதனால் அதனை வாங்குபவர்கள் விலையை மேலும் குறைக்குமாறு வற்புறுத்தலாம்.
ரஷ்யாவின் கடந்த காலமும் எதிர்காலமும்
பட மூலாதாரம், Getty Images
இதற்கிடையில், ரஷ்ய எண்ணெய் சுத்திகரிப்பு நிலையங்கள் மற்றும் எரிசக்தி உள்கட்டமைப்பு மீதான யுக்ரேனிய தாக்குதல்கள் தீவிரமடைந்து வருகின்றன.
இதனால், போர்ச் செலவைத் தாங்குவது ரஷ்யாவிற்கு கடினமாகுமா என்பதைப் பொறுத்திருந்துதான் பார்க்க வேண்டும்.
பிபிசி ரஷ்ய சேவையின் பொருளாதார ஆசிரியர் ஓல்கா ஷெமினா/ஓல்கா இவ்ஷினா, நவீன ரஷ்ய பொருளாதாரம் எரிசக்தி ஏற்றுமதியைச் சார்ந்திருப்பது சோவியத் சகாப்தத்திலிருந்து வேறுபட்டது எனக் கருதுகிறார்.
அப்போது எண்ணெய் விலை சரிந்தது முக்கிய பங்காற்றியிருந்தாலும், உண்மையான பிரச்னை சோவியத் பொருளாதார அமைப்பு திறமையற்றதாக இருந்தது என்பதுதான். ஆனால், இப்போது நிலை மாறியுள்ளது. யுக்ரேன் போர் தொடங்கும் முன்பே, ரஷ்ய பொருளாதாரம் ஒப்பீட்டளவில் வலுவாக இருந்தது.
– இது, பிபிசிக்காக கலெக்டிவ் நியூஸ்ரூம் வெளியீடு