சௌதி அரேபியாவுக்கு புனித யாத்திரை சென்ற இந்தியர்கள் பயணித்த பேருந்து விபத்துக்குள்ளானதில் பலர் இறந்துவிட்டதாக செய்திகள் வெளியாகியிருக்கின்றன. இதுகுறித்து தெலங்கானா முதல்வர் ரேவந்த் ரெட்டி வருத்தம் தெரிவித்திருக்கிறார்.
சௌதி அரேபியாவின் ஜெட்டாவில் உள்ள இந்திய துணைத் தூதரகம் இந்த விபத்தை உறுதி செய்திருக்கிறது. இருந்தாலும், எத்தனை பேர் உயிரிழந்தனர்? எத்தனை பேர் காயமடைந்தனர்? என்பது பற்றிய முழு விவரம் இன்னும் தெரியவில்லை.
ஜெட்டாவில் உள்ள இந்திய துணைத் தூதரகம் ஒரு கட்டுப்பாட்டு அறையையும் அமைத்திருக்கிறது. “சௌதி அரேபியாவின் மதீனா அருகே இந்திய யாத்ரீகர்கள் பயணம் செய்த பேருந்து துயர விபத்தை சந்தித்தது. இதையடுத்து, ஜெட்டாவில் உள்ள இந்திய துணை தூதரகத்தில் ஒரு கட்டுப்பாட்டு அறை அமைக்கப்பட்டுள்ளது” என்று துணை தூரதகம் அறிவித்திருக்கிறது.
உதவி எண்: 8002440003
மெக்காவில் இருந்து மதீனா சென்றபோது இந்தப் பேருந்து விபத்துக்குள்ளானதாகவும், ஹைதராபாத்தைச் சேர்ந்தவர்களும் அதில் இருந்தனர் என்றும் தகவல்கள் சொல்லப்பட்டிருப்பதாக தெலங்கானா முதல்வர் அலுவலகம் தெரிவித்திருக்கிறது.
தெலங்கானா முதல்வர் ரேவந்த் ரெட்டி இதுதொடர்பாக அனைத்து தகவல்களையும் விரைந்து பெறுமாறு தலைமைச் செயலாளர் மற்றும் காவல் துறை டிஜிபி-க்கு (DGP) உத்தரவிட்டுள்ளார். இந்திய வெளியுறவுத்துறை அமைச்சகம் மற்றும் சௌதி அரேபியா தூதரகத்துடன் தொடர்ச்சியாக தொடர்பில் இருக்குமாறு அதிகாரிகளை அவர் அறிவுறுத்தியுள்ளார்.
பட மூலாதாரம், Stefan Wermuth/Bloomberg via Getty
படக்குறிப்பு, இந்திய வெளியுறவுத்துறை அமைச்சகம் மற்றும் சௌதி அரேபியா தூதரகத்துடன் தொடர்ச்சியாக தொடர்பில் இருக்குமாறு அதிகாரிகளை தெலங்கானா முதல்வர் ரேவந்த் ரெட்டி அறிவுறுத்தியுள்ளார்
ஹைதராபாத் எம்பி-யும் ஏஐஎம்ஐஎம் தலைவருமான அசாதுதின் ஒவைசியும் இந்தச் சம்பவம் குறித்துப் பேசியிருக்கிறார்.
“ஹைதராபாத்தைச் சேர்ந்த இரண்டு பயண நிறுவனங்கள் சார்பில் 42 யாத்ரீகர்கள் மெக்காவிலிருந்து மதீனாவுக்குச் சென்றதாக நான் கேள்விப்பட்டேன். பேருந்தில் ஏற்பட்ட தீ விபத்தில் ஒருவர் மட்டுமே உயிர் பிழைத்துள்ளார் என்று கூறப்படுகின்றது, ஆனால் இது இன்னும் உறுதிசெய்யப்படவில்லை” என்று அவர் கூறினார்.
“ரியாத்தில் உள்ள இந்திய தூதரகத்துடன் நான் பேசினேன். இதுபற்றி தகவல்கள் பெற்றுவருவதாக அவர்கள் தெரிவித்தார்கள். இந்த விஷயத்தில் உடனடியாக கவனம் செலுத்துமாறும், இறந்தவர்களின் உடலை இந்தியா கொண்டுவருவதற்கான ஏற்பாடுகளை செய்யுமாறும் இந்திய அரசையும், வெளியுறவு அமைச்சர் எஸ்.ஜெய்சங்கரையும் கேட்டுக்கொள்கிறேன். காயமடைந்தவர்களுக்கு உரிய தரமான சிகிச்சை அளிக்க வேண்டும்” என்றும் அவர் கூறினார்.
இந்த விபத்துடன் தொடர்புடைய தகவல்களை பாதிக்கப்பட்ட குடும்பங்களுக்கும் உறவினர்களுக்கும் வழங்குவதற்கும், மீட்பு பணிகளை கண்காணிப்பதற்கும், தெலங்கானா தலைமைச் செயலகத்தில் ஒரு கட்டுப்பாட்டு அறையும் அமைக்கப்பட்டுள்ளது.
கட்டுப்பாட்டு அறை மொபைல் எண்கள்:
பட மூலாதாரம், Sonu Mehta/Hindustan Times via Getty Images
இந்திய வெளியுறவு அமைச்சர் கூறியது என்ன?
சௌதி அரேபியாவின் மதீனாவில் உம்ரா பயணத்திற்காக இந்தியர்கள் பயணம் செய்த பேருந்து விபத்து குறித்து இந்திய வெளியுறவு அமைச்சர் எஸ். ஜெய்சங்கர் இரங்கல் தெரிவித்துள்ளார்.
“சௌதி அரேபியாவின் மதீனாவில் இந்திய குடிமக்கள் சம்பந்தப்பட்ட விபத்தில் நான் மிகவும் வருத்தமடைந்தேன். ரியாத்தில் உள்ள இந்திய தூதரகமும் ஜெட்டாவில் உள்ள துணைத் தூதரகமும் இந்த விபத்தில் பாதிக்கப்பட்ட இந்திய குடிமக்கள் மற்றும் அவர்களது குடும்பங்களுக்கு முழு உதவியை வழங்கி வருகின்றன” என்று எஸ். ஜெய்சங்கர் தனது எக்ஸ் பக்கத்தில் கூறினார்.