• Wed. Dec 31st, 2025

24×7 Live News

Apdin News

சௌதி அரேபியா – ஐக்கிய அரபு அமீரகம் இடையே நாளுக்கு நாள் பதற்றம் அதிகரிப்பது ஏன்?

Byadmin

Dec 31, 2025


சௌதி அரேபியா - ஐக்கிய அரபு அமீரகம்

பட மூலாதாரம், Getty Images

படக்குறிப்பு, ஏமனின் ஷப்வா மாகாணத்தில் உள்ள பய்ஹான் மாவட்டத்தில் உள்ள ஹரிப் சந்திப்பில், ஐக்கிய அரபு அமீரகத்தால் பயிற்சி அளிக்கப்பட்ட ஜெயண்ட்ஸ் பிரிகேட் படையின் வாகனங்களும் போராளிகளும் ஜனவரி 19, 2022 அன்று ரோந்துப் பணியில் ஈடுபட்டிருந்தனர்.

வளைகுடா பிராந்தியத்தில் சக்தி வாய்ந்த நாடுகளான சௌதி அரேபியா மற்றும் ஐக்கிய அரபு அமீரகத்திற்கும் இடையே இம்மாதம் தொடங்கியதிலிருந்தே பதற்றம் அதிகரித்து வருகிறது.

செவ்வாய்க்கிழமை மாலை ஐக்கிய அரபு அமீரகம் வெளியிட்ட ஓர் அறிவிப்பு, பதற்றங்கள் தணியக்கூடும் என்ற ஊகங்களை ஏற்படுத்தியது. இருப்பினும், இரு நாடுகளின் முரண்பட்ட புவிசார் அரசியல் லட்சியங்கள் மீண்டும் வெளிச்சத்திற்கு வந்துள்ளன.

ஐக்கிய அரபு அமீரகத்தின் பாதுகாப்பு அமைச்சகம் வெளியிட்ட அறிக்கையில், ஏமனில் தங்களின் ராணுவ இருப்பை முடித்துக் கொள்வதாக கூறியிருந்தது.

அந்த அறிக்கையில், “அரபு ஒத்துழைப்பு அமைப்பில் 2015-ஆம் ஆண்டிலிருந்து நாங்கள் பங்கு வகிக்கிறோம், ஏமனில் சட்டப்பூர்வமான அரசாங்கத்திற்கு ஆதரவு அளித்துவருகிறோம். 2019-ஆம் ஆண்டில் ஐக்கிய அரபு அமீரகம் ஏமனில் தங்களின் முக்கியமான ராணுவ நடவடிக்கைகளை முடித்துக்கொண்டு திரும்பியது. தீவிரவாத சக்திகளை தடுக்க சில துருப்புகள் மட்டும் ஏமனில் இருந்தன. எனினும், சமீபத்திய சூழலை கருத்தில் கொண்டு மீதமுள்ள துருப்புகளையும் பாதுகாப்பு அமைச்சகம் திருப்பி அழைத்துக்கொள்கிறது.” என தெரிவிக்கப்பட்டுள்ளது.

இந்த அறிக்கைக்கு முன்பாக, ஏமனின் அதிபர் தலைமை கவுன்சிலை (Presidential Leadership Council – PLC) மேற்கோளிட்டு, 24 மணிநேரத்திற்குள் ஐக்கிய அரபு அமீரகம் ஏமனிலிருந்து அனைத்து துருப்புகளையும் திரும்ப பெற வேண்டும் என்றும் ஏமனில் உள்ள எந்த குழுக்களுக்கும் ராணுவ அல்லது பொருளாதார உதவியை வழங்கக்கூடாது என்றும் சௌதி அரேபியா தெரிவித்திருந்தது.

By admin