பட மூலாதாரம், Getty Images
ஏமனில் நீடிக்கும் உள்நாட்டுச் சண்டையில் யாரை ஆதரிப்பது என்பது தொடர்பாக சௌதி அரேபியாவுக்கும் ஐக்கிய அரபு எமிரேட்ஸுக்கும் இடையிலான மோதலின் தீவிரம் சற்று தணிந்து வருவதாகத் தெரிகிறது.
இரு நாடுகளுக்கும் இடையிலான பதற்றம் குறைவது தற்காலிகமானதாக இருக்கலாம் என்றும் எதிர்காலத்தில் வேறு ஏதேனும் ஒரு விவகாரத்தில் இது மீண்டும் தலைதூக்கக் கூடும் எனவும் ஆய்வாளர்கள் கூறுகின்றனர்.
சமீபத்தில், சௌதி அரேபியா தலைமையிலான கூட்டணி, ஐக்கிய அரபு எமிரேட்ஸில் இருந்து இறக்குமதி செய்யப்பட்டதாகக் கூறப்படும் ஆயுதங்கள் மற்றும் ராணுவ வாகனங்களைத் குறி வைத்து ஏமனில் ஒரு வான்வழித் தாக்குதலை நடத்தியது.
இதையடுத்து, ஏமன் அரசாங்கத்தின் கோரிக்கையை ஏற்று, ஐக்கிய அரபு எமிரேட்ஸ் தனது படைகளை 24 மணிநேரத்திற்குள் திரும்பப் பெற வேண்டும் என்று சௌதி அரேபியா வலியுறுத்தியது.
இந்தக் கோரிக்கைக்குப் பதிலளித்த ஐக்கிய அரபு எமிரேட்ஸ், அனைத்துக் குற்றச்சாட்டுகளையும் மறுத்ததுடன், தனது படைகளைத் திரும்பப் பெறுவதாகவும் அறிவித்தது.
ஆய்வாளர்களின் கூற்றுப்படி, கடந்த சில ஆண்டுகளாக சௌதி அரேபியா மற்றும் ஐக்கிய அரபு எமிரேட்ஸின் ராஜ்ஜீய, பொருளாதார நலன்கள் ஓரளவுக்கு வேறுபட்டுள்ளன.
மத்திய கிழக்கின் இந்த இரண்டு முக்கிய நாடுகளுக்கும் இடையிலான ‘அறிவிக்கப்படாத போட்டி’ இப்போது வெளிப்படையாகி வருவதற்கு இதுவே காரணம்.
ஏமனில் நடக்கும் உள்நாட்டுப் போராக இருந்தாலும் சரி, ஆப்பிரிக்க நாடுகளில் துறைமுகங்கள் மற்றும் ராணுவ தளங்களை நிறுவுவதாக இருந்தாலும் சரி, ஐக்கிய அரபு எமிரேட்ஸ் தனது பொருளாதார நலன்களை அடைய முயல்வதாகத் தெரிகிறது.
பாகிஸ்தானுக்கு தர்மசங்கடம் ஏன்?
பிபிசி மானிட்டரிங் தகவலின்படி, சௌதி அரேபியா பிராந்திய அரசியலில் முக்கியப் பங்கு வகித்து, முதலீடுகளின் மையமாக மாற முயல்கிறது. அதே வேளையில், ஐக்கிய அரபு எமிரேட்ஸ் தனது வலிமையையும் வளங்களையும் பயன்படுத்தி ஆப்பிரிக்காவிலும் செங்கடல் பகுதியிலும் தனது செல்வாக்கை விரிவுபடுத்தி வருகிறது.
இதற்கு ஓர் உதாரணமாக, ஆபிரகாம் ஒப்பந்தங்களில் ஐக்கிய அரபு எமிரேட்ஸ் இணைந்ததைக் கூறலாம். இஸ்ரேலை அங்கீகரிப்பதற்காக முஸ்லிம் நாடுகள் சௌதி அரேபியாவை எதிர்பார்த்துக் கொண்டிருந்த நேரத்தில், ஐக்கிய அரபு எமிரேட்ஸ் முன்வந்து இஸ்ரேலை அங்கீகரித்தது.
பட மூலாதாரம், Getty Images
சர்வதேச விவகார நிபுணர்களின் கூற்றுப்படி, கடந்த சில ஆண்டுகளாக, வளைகுடா நாடுகளிலும் முஸ்லிம் உலகிலும் சௌதி அரேபியா வகிக்கும் மையப் பாத்திரத்திற்கு ஐக்கிய அரபு எமிரேட்ஸ் பலமுறை சவால் விடுத்திருப்பது வெளிப்பட்டுள்ளது.
முஸ்லிம் உலகின் ஒரே அணுசக்தி நாடான பாகிஸ்தான், பாரம்பரியமாக சௌதி அரேபியா, ஐக்கிய அரபு எமிரேட்ஸ் ஆகிய இரு நாடுகளுடனும் நீண்டகால நட்புறவைக் கொண்டுள்ளது.
லட்சக்கணக்கான பாகிஸ்தானியர்கள் இந்த இரு நாடுகளிலும் பணிபுரிகின்றனர். சமீபத்தில் பாகிஸ்தான் சௌதி அரேபியாவுடன் ஒரு மூலோபாய பாதுகாப்பு ஒப்பந்தத்திலும் கையெழுத்திட்டுள்ளது.
இத்தகைய சூழ்நிலையில், இந்த இரண்டு மத்திய கிழக்கு நாடுகளிடையே அதிகரித்து வரும் பதற்றம் மற்றும் கருத்து வேறுபாடுகள் பாகிஸ்தான் உள்பட முழு முஸ்லிம் உலகையும் பாதிக்கும்.
இரு நாடுகளுக்கும் இடையிலான கருத்து வேறுபாடுகளைக் குறைக்க பாகிஸ்தான் தனது பங்கைச் செய்ய முயலும். ஆனால் இந்த மோதல் தீவிரமடைந்தால், பாகிஸ்தானால் நடுநிலை வகிக்க முடியாது என்று ஆய்வாளர்கள் நம்புகிறார்கள்.
சௌதி அரேபியா – ஐக்கிய அரபு எமிரேட்ஸ் இடையிலான பதற்றம் எதிர்காலத்தில் அதிகரிக்கக்கூடுமா? இது பாகிஸ்தானை எவ்வாறு பாதிக்கும்? இதைத் தெரிந்துகொள்ள பிபிசி உருது சேவை ஆய்வாளர்களிடம் பேசியது.
பட மூலாதாரம், SPA
நடுநிலை வகிக்க முடியாத சூழலில் பாகிஸ்தான்
ஐக்கிய அரபு எமிரேட்ஸின் அதிபர் ஷேக் முகமது பின் சயீத் அல் நஹ்யான் பாகிஸ்தானின் ரஹீம்யார் கான் நகரில் தனிப்பட்ட பயணமாக இருந்த நேரத்தில், சௌதி அரேபியா மற்றும் ஐக்கிய அரபு எமிரேட்ஸ் இடையிலான இந்தப் பதற்றம் வெளிச்சத்திற்கு வந்தது.
இந்தப் பதற்றத்தைத் தொடர்ந்து, பாகிஸ்தான் இரு நாடுகளையும் தொடர்பு கொண்டது.
செவ்வாய்க் கிழமையன்று, பாகிஸ்தான் பிரதமர் ஷாபாஸ் ஷெரீப், ரஹீம்யார் கான் நகரில் ஷேக் முகமது பின் சயீத் அல் நஹ்யானை சந்தித்தார்.
இந்தச் சந்திப்பில் இருதரப்பு விவகாரங்கள் மற்றும் பல்வேறு துறைகளில் ஒத்துழைப்பு குறித்து விவாதிக்கப்பட்டதாக அரசு அறிக்கை தெரிவித்தது.
மறுபுறம், பாகிஸ்தான் துணை பிரதமர் இஷாக் தார், செவ்வாய்க் கிழமை மாலை சௌதி வெளியுறவு அமைச்சர் பைசல் பின் ஃபர்ஹானை தொடர்பு கொண்டார்.
இந்த இரண்டு சந்திப்புகளுக்குப் பிறகு வெளியிடப்பட்ட அரசு அறிக்கைகளில் ஏமன் பற்றிக் குறிப்பிடப்படவில்லை. ஆனால் இரு நாடுகளுக்கு இடையிலான இந்தத் தொடர்பின் நோக்கம் பதற்றத்தைக் குறைப்பதாக இருக்கலாம் என்று ஆய்வாளர்கள் நம்புகின்றனர்.
ஏமனில் சௌதி தலைமையிலான கூட்டணியில் பாகிஸ்தான் ராணுவம் நேரடியாக ஈடுபடவில்லை, ஆனால் பாகிஸ்தான் ராணுவத்தின் முன்னாள் தளபதி ஜெனரல் (ஓய்வுபெற்ற) ரஹீல் ஷெரீஃப் அதில் ஓர் உயர் பதவியில் உள்ளார்.
காயிதே ஆசம் பல்கலைக் கழகத்தின் பேராசிரியர் முனைவர் கந்தீல் அப்பாஸ், பாகிஸ்தானுக்கு இந்த இரு நாடுகளுடனும் ஆழமான உறவுகளும் பொருளாதார நலன்களும் இருப்பதாகக் கூறுகிறார்.
இந்தப் பகுதிகளில் பதற்றம் அதிகரித்தால் பாகிஸ்தான் நேரடியாகப் பாதிக்கப்படலாம்.
பிபிசியிடம் பேசிய முனைவர் கந்தீல், முஸ்லிம்களின் புனிதத் தலங்கள் இருப்பதால் சௌதி அரேபியா தன்னை இஸ்லாத்தின் மையமாகக் கருதுவதாகவும், கடந்த காலத்தில் முஸ்லிம் உலகின் பல முக்கிய முடிவுகளை சௌதி எடுத்துள்ளதாகவும் குறிப்பிட்டார். ஆனால், 2015 முதல் அதன் மையப் பங்கு குறைந்து வருவதாகவும் அவர் தெரிவித்தார்.
பட மூலாதாரம், Pakistan PM Office
வளைகுடா ஒத்துழைப்பு கவுன்சில் நாடுகளுக்கு இடையிலான கருத்து வேறுபாடுகள் இதற்கு ஒரு தெளிவான உதாரணம் என்றும் அவர் விவரித்தார்.
ஐக்கிய அரபு எமிரேட்ஸ் மற்றும் சௌதி அரேபியாவை பொறுத்தவரை, ஒருவருக்கு ஏதேனும் அச்சுறுத்தல் ஏற்பட்டால், இருவரும் இணைந்து போராடுவார்கள் என்ற ஒப்பந்தம் இருந்தது.
ஆனால், பரஸ்பர நலன்கள் தொடர்பாக இரு நாடுகளுக்கும் இடையே இப்போது கருத்து வேறுபாடு நிலவுகிறது என்று முனைவர் கந்தீல் அப்பாஸ் கூறுகிறார்.
ஓமர் கரீம், ரியாத்தில் உள்ள கிங் ஃபைசல் ஆராய்ச்சி மற்றும் இஸ்லாமிய ஆய்வுகள் மையத்தில் ஆராய்ச்சி அறிஞராக உள்ளார்.
அவரது கூற்றுப்படி, பாகிஸ்தான் பொருளாதார ரீதியாக இரு நாடுகளையும் சார்ந்திருப்பதால், இந்த இரு நாடுகளுக்கும் இடையிலான பதற்றத்தைக் குறைப்பதில் பாகிஸ்தானால் எந்த முக்கியப் பங்கையும் வகிக்க முடியாது.
ஏமனில் ஐக்கிய அரபு எமிரேட்ஸின் ஆதரவு பெற்ற எஸ்.டி.சி குழுவுக்கு எதிரான நடவடிக்கையால் பதற்றம் அதிகரிக்கும் பட்சத்தில் பாகிஸ்தானால் ‘நடுநிலையாக’ இருக்க முடியாது என்று அவர் கூறினார்.
சௌதி அரேபியாவுடனான பாதுகாப்பு ஒப்பந்தத்தின் கீழ், பாகிஸ்தான் சௌதி அரேபியாவுக்கு ஆதரவளிக்க வேண்டியிருக்கும் என்றும் அவர் கூறினார்.
சமீபத்திய பதற்றத்திற்குப் பிறகு பாகிஸ்தான் நிச்சயமாக இரு நாடுகளையும் தொடர்பு கொண்டு இருப்பதாகவும் பாகிஸ்தான் இந்த பதற்றத்தைக் குறைக்க முயல்வதாகவும் முனைவர் கந்தீல் அப்பாஸ் கூறுகிறார். ஆனால் “பல முக்கிய விஷயங்களில் ஐக்கிய அரபு எமிரேட்ஸ் பாகிஸ்தானைவிட இந்தியாவுக்கு அதிக முக்கியத்துவம் அளித்துள்ளது.”
ஐக்கிய அரபு எமிரேட்ஸில் 21 லட்சம் பாகிஸ்தானிய தொழிலாளர்கள் இருந்தபோதிலும், பாகிஸ்தான் ஒருபோதும் ஐக்கிய அரபு எமிரேட்ஸின் கொள்கைகள் குறித்து வெளிப்படையாகப் பேசியது இல்லை என்று அவர் கூறினார்.
கடந்த காலத்தில், துபை துறைமுகம் தனது பொருளாதார நலன்களுக்காக பாகிஸ்தானின் ‘குவாதர் துறைமுகத்திற்கு’ தடைகளை ஏற்படுத்தி வருவதாக பாகிஸ்தான் புகார் கூறியுள்ளது என்று கந்தீல் அப்பாஸ் கூறினார்.
பட மூலாதாரம், AFP
பதற்றம் அதிகரித்தால் என்ன நடக்கக் கூடும்?
ஏமனில் ஏற்பட்டுள்ள சமீபத்திய மோதல், புவியியல், அரசியல் மற்றும் புவி-பொருளாதாரப் பிரச்னைகளில் ஐக்கிய அரபு எமிரேட்ஸுக்கும் சௌதி அரேபியாவுக்கும் இடையிலான தூரம் அதிகரித்து வருவதைக் காட்டுகிறது.
ஓபெக் முடிவுகள் விஷயத்தில் இந்த இரண்டு வளைகுடா நாடுகளும் மாறுபட்ட கருத்துகளைக் கொண்டுள்ளன. சூடான், ஏமன் மற்றும் பிற எல்லைப் பிரச்னைகளிலும் அவை வெவ்வேறு நிலைப்பாடுகளைக் கொண்டுள்ளன.
ஆப்பிரிக்காவில் பிராந்திய அதிகாரம் மற்றும் செல்வாக்கை அதிகரிக்க இரு நாடுகளும் ஒன்றுக்கொன்று போட்டியிடுவதாகவும் தெரிகிறது.
இரு நாடுகளின் பொருளாதார நலன்களும் இப்போது வெவ்வேறு திசைகளில் செல்வதாக ஆய்வாளர்கள் நம்புகின்றனர்.
ரியாத்தில் உள்ள கிங் ஃபைசல் ஆராய்ச்சி மற்றும் இஸ்லாமிய ஆய்வுகள் மையத்தின் ஆராய்ச்சி அறிஞரான உமர் கரீம், “சௌதி அரேபியாவின் பாதுகாப்பு விஷயங்கள் மிகவும் முக்கியமானவை. செங்கடலுக்கு அப்பால் சௌதி அரேபியாவின் பாதுகாப்புக்கு அச்சுறுத்தலாக இருக்கும் குழுக்களின் நடவடிக்கைகளை ரியாத்தால் பொறுத்துக்கொள்ள முடியாது” என்று கூறுகிறார்.
ரியாத்துடன் போட்டியிடும் வகையில், அபுதாபி ‘ஆப்பிரிக்காவின் கொம்பு’ நாடுகளில் (வரைபடத்தில் கொம்பு போன்ற வடிவத்தின் பகுதியிலுள்ள நாடுகள்) பல குழுக்களுக்கு ஆதரவளித்து வருவதாகவும், சௌதி அரேபியாவுக்கு பிரச்னைகளை உருவாக்கக் கூடிய பல துருப்புச் சீட்டுகள் அதன் கையில் இருப்பதாகவும் அவர் கூறினார்.
பட மூலாதாரம், Getty Images
உமர் கரீமின் கூற்றுப்படி, சூடான், சோமாலிலாந்து, எத்தியோப்பியா, ஏடன் வளைகுடா ஆகிய பிரச்னைகளில் இரு நாடுகளுக்கும் இடையிலான கருத்து வேறுபாடுகள் மிகவும் வெளிப்படையாக உள்ளன.
முனைவர் கந்தீல் அப்பாஸின் கூற்றுப்படி, ஐக்கிய அரபு எமிரேட்ஸ் பிராந்தியத்திலும் ஆப்பிரிக்க நாடுகளிலும் வர்த்தக வழித்தடங்கள் மற்றும் தளங்களைக் கைப்பற்ற விரும்புகிறது. பிற எண்ணெய் உற்பத்தி நாடுகளும் இந்த விஷயத்தில் மிகவும் தீவிரமாக உள்ளன.
சூடான், லிபியா, பாலத்தீனம் ஆகிய பிரச்னைகள் குறித்த இரு வளைகுடா நாடுகளின் நிலைப்பாடுகளில் உள்ள மாற்றங்களும் வேறுபாடுகளும் முழு இஸ்லாமிய உலகத்தையும் பாதிப்பதாக அவர் கூறினார்.
எதிர்காலத்தில் பதற்றம் அதிகரிக்க வாய்ப்புள்ளதாக முனைவர் கந்தீல் அப்பாஸ் நம்புகிறார்.
இருப்பினும், “இந்த விஷயங்கள் ஓரளவுக்கு இப்படியே தொடரும். ஆனால், பதற்றம் மிகவும் அதிகரித்தால், உலக வல்லரசுகள் தங்கள் பங்கை வகிக்கும்” என்று அவர் கூறுகிறார்.

மேலும் பேசிய அவர், “இரான் மற்றும் இஸ்ரேல் காரணமாக மத்திய கிழக்கு பிராந்தியத்தில் ஏற்கெனவே அதிக பதற்றம் நிலவுகிறது. இந்த நேரத்தில் அரபு நாடுகள் தங்களுக்குள் சண்டையிடத் தொடங்குவதை அமெரிக்கா விரும்பாது” என்றார்.
அவரைப் பொறுத்தவரை, இரு நாடுகளுடனும் ஆழமான உறவுகளைக் கொண்டுள்ள அமெரிக்கா இரு அரபு நாடுகளையும் கருத்து வேறுபாடுகளில் இருந்து விலக்கி வைக்கும்.
ஏமன் மீதான பதற்றங்கள் சமீபத்தில் அதிகரித்ததைத் தொடர்ந்து, அமெரிக்க வெளியுறவுத் துறை செயலாளர் மார்கோ ரூபியோ சௌதி அரேபியா மற்றும் ஐக்கிய அரபு எமிரேட்ஸின் வெளியுறவு அமைச்சர்களுடன் தொலைபேசியில் பேசினார்.
இருப்பினும், இந்த மோதல் மேலும் தீவிரமடைந்தால், அமெரிக்காவின் தலையீட்டையும் மீறி அது தொடரக்கூடும் என்கிறார் உமர் கரீம். ஏனெனில், அவரது கூற்றுப்படி, “கத்தாருக்கும் மற்ற வளைகுடா நாடுகளுக்கும் இடையிலான மோதலில் அமெரிக்காவால் எந்தவொரு குறிப்பிடத்தக்க பங்கையும் வகிக்க முடியவில்லை.”
– இது, பிபிசிக்காக கலெக்டிவ் நியூஸ்ரூம் வெளியீடு