• Mon. May 19th, 2025

24×7 Live News

Apdin News

ஜனாதிபதி அநுரகுமார திஸாநாயக்க தலைமையில் 16ஆவது தேசிய போர் வீரர் நினைவு நாள் நிகழ்வுகள் ஏற்பாடு

Byadmin

May 18, 2025


ஜனாதிபதி அநுரகுமார திஸாநாயக்க தலைமையில் 16ஆவது தேசிய போர் வீரர் நினைவு நாள் நாளை திங்கட்கிழமை அனுஷ்டிக்கப்படவுள்ளது. கோட்டை ஸ்ரீ ஜெயவர்தனபுரவில் உள்ள தேசிய போர்வீரர் நினைவு தூபியில் தேசிய போர்வீரர் நினைவு நாள் நிகழ்வுகள் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளதாக இராணுவீரர் சேவை அதிகாரசபையின் தலைவர் ஓய்வு பெற்ற பிரிகேடியர் செனரத் கொஹொன தெரிவித்தார்.

இன்று ஞாயிறுக்கிழமை (18) போர்வீரர் நினைவு நாள் நிகழ்வுகளுக்கான ஏற்பாடுகளை மேற்பார்வை செய்த பின்னர் ஊடகங்களுக்கு கருத்து வெளியிடும் போது அவர் இதனைத் தெரிவித்தார். அவர் மேலும் குறிப்பிடுகையில்,

நாட்டின் இறையாண்மை மற்றும் தேசிய பாதுகாப்பைப் பாதுகாப்பதில் தன்னலமின்றி பணியாற்றியவர்களை கௌரவித்து நினைவு கூரும் வகையில் இந்நிகழ்வுகள் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளன. கோட்டை ஸ்ரீ ஜெயவர்தனபுரவில் உள்ள தேசிய போர்வீரர் நினைவு தூபியில் மாலை 4 மணி முதல் 6 மணி வரை நிகழ்வுகள் இடம்பெறவுள்ளன.

ஜனாதிபதியின் முப்படைகளின் தளபதியுமான ஜனாதிபதி அநுரகுமார திஸாநாயக்க தலைமையில் இந்நிகழ்வுகள் இடம்பெறவுள்ளன. நாட்டிலுள்ள மார்ஷல் பதவி நிலைகளை வகிக்கும் முன்னாள் படைத்தளபதிகள் சிறப்பு அதிதிகளாகப் பங்கேற்கவுள்ளனர். அதற்கமைய பீல்ட் மார்ஷல் சரத் பொன்சேகா, அட்மிரல் ஒப் த ஃப்ளீட் வசந்த கரன்னாகொட மற்றும் மார்ஷல் ஒப் த எயார்போர்ஸ் ரொஷான் குணதிலக ஆகியோர் கலந்து கொள்ளவுள்ளனர்.

நாட்டின் பாதுகாப்பிற்காக தங்கள் உயிரை தியாகம் செய்த முப்படைகளின் துணிச்சல்மிக்க  வீரர்களுக்கு அஞ்சலி செலுத்தும் வகையில், இந்த வருடாந்த நினைவு தினம் அனுஷ்டிக்கப்படவுள்ளது. உயிரிழந்த  ஆயுதப்படை வீரர்களின் நினைவைப் பாதுகாப்பதில் அமைச்சு மற்றும் முப்படைகளின் உறுதியான அர்ப்பணிப்பை மீண்டும் வலியுறுத்துகின்றோம்.

30 ஆண்டு கால உள்நாட்டு யுத்தத்தை நிறைவு செய்வதற்காக 27 000 படை வீரர்கள் நாட்டுக்காக தமது உயிரை தியாகம் செய்துள்ளனர். மேலும் ஆயிரக்கணக்கான வீரர்கள் அங்கவீனமடைந்துள்ளனர். அவர்கள் அனைவரையும் கௌரவிக்கும் வகையிலான நிகழ்வுகள் நாடளவிய ரீதியில் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளன. போர் வீரர் நினைவு தினத்தை முன்னிட்டு முப்படைகள், பொலிஸ் மற்றும் சிவில் பாதுகாப்புத் துறையினரால் நாடு தழுவிய சமூக நலத் திட்டங்களும் மேற்கொள்ளப்படும் என்றார்.

கடந்த வாரம் பாதுகாப்பு அமைச்சில் இடம்பெற்ற விசேட ஊடகவியலாளர் மாநாட்டில் கலந்து கொண்ட பாதுகாப்பு செயலாளர் ஓய்வு பெற்ற எயா வைஸ் மார்ஷல் சம்பத் துய்யகொந்தா, ஜனாதிபதியின் பிரதிநிதியாக பிரதி பாதுகாப்பு அமைச்சர் நிகழ்வுக்கு தலைமை தாங்குவார் எனத் தெரிவித்திருந்தார். எனினும் தற்போது ஜனாதிபதி நிகழ்வில் பங்கேற்பார் என அறிவிக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.

By admin