நடிகர் விஜய் நடிப்பில் இயக்குநர் ஹச்.வினோத் இயக்கத்தில் ஜன நாயகன் திரைப்படம் உருவானது. முதலில் 2025-ஆம் ஆண்டு தீபாவளிக்கு வெளியாகும் என அறிவிக்கப்பட்டு பின்னர் பொங்கல் வெளியீடாக படம் வர இருந்தது.
ஜனவரி 9-ஆம் தேதி வெளியாகும் என அறிவிக்கப்பட்டு படத்திற்கான முன்பதிவும் சில இடங்களில் தொடங்கின.
தமிழக வெற்றிக் கழகத்தின் தலைவராக உள்ள நடிகர் விஜய், ஜன நாயகன் திரைப்படம் தான் தனது கடைசி படமாக இருக்கும் என அறிவித்திருந்தார். இந்தப் படத்தின் இசை வெளியீட்டு விழா மலேசியாவில் நடைபெற்றது.
ஆனால் படத்திற்கு மத்திய திரைப்பட சான்றிதழ் வாரியத்தின் சான்று கிடைப்பதற்கு தாமதமானதால் படத் தயாரிப்பு நிறுவனம் சென்னை உயர் நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தது.
இவ்வழக்கில் திரைப்படத்திற்கு உடனே யு/ஏ சான்று வழங்க மத்திய திரைப்படச் சான்றிதழ் வாரியத்திற்கு நீதிபதி பிடி ஆஷா உத்தரவிட்டார். இதனையடுத்து திரைப்படம் வெளியீடு எப்போது என்பது குறித்த எதிர்பார்ப்பு ஏற்பட்டுள்ளது.
உயர் நீதிமன்ற தீர்ப்பில் கூறப்பட்டுள்ளது என்ன?
ஜன நாயகன் திரைப்படத்திற்கு தணிக்கை சான்று வழங்குவதற்கு எதிராக புகார் மனு வந்ததாக உயர் நீதிமன்ற விசாரணையில் மத்திய திரைப்படச் சான்றிதழ் வாரியம் தெரிவித்திருந்தது.
இந்த நிலையில் இன்று நீதிமன்ற வழங்கிய தீர்ப்பில் புகார்தாரர் எழுப்பியுள்ள கோரிக்கை என்பது யோசனையற்றதாக உள்ளது என்றும் இத்தகைய புகார்களை அனுமதிப்பது ஆபத்தான போக்கை உருவாக்கும் என்றும் தெரிவித்துள்ளதாக லைவ் லா இணையதளம் தெரிவிக்கிறது.
நீதிமன்ற தீர்ப்பில் உள்ள முக்கியமான அம்சங்கள்:
சான்றிதழ் குழு பரிந்துரைத்த மாற்றங்களை மேற்கொண்ட பிறகு சான்று தானாகவே கிடைக்கப்பெற்றதாக அர்த்தம்.
திரைப்படச் சான்றிதழ் வாரிய தலைவர் 6-ஆம் தேதி பிறப்பித்த உத்தரவு என்பது அதிகார வரம்பை மீறியது.
ஏற்கெனவே யு/ஏ சான்று வழங்குவதாக தெரிவித்த பிறகு படத்தை மறு ஆய்விற்கு அனுப்ப முடியாது.
வாரிய தலைவர் பிறப்பித்த உத்தரவு அதிகார வரம்பை மீறியதால் நீதிமன்றம் தனக்குள்ள அதிகாரத்தைப் பயன்படுத்தி நிவாரணம் வழங்குகிறது.
படத்தை மறு ஆய்விற்கு அனுப்பிய உத்தரவை ரத்து செய்து ஜன நாயகன் திரைப்படத்திற்கு யு/ஏ சான்று வழங்க மத்திய திரைப்படச் சான்றிதழ் வாரியத்திற்கு உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
நீதிமன்றத்தில் என்ன நடந்தது?
முன்னதாக கடந்த 7ம் தேதி இந்த வழக்கு நீதிபதி பி.டி.ஆஷா முன்பு வழக்கு விசாரணைக்கு வந்தது.
அப்போது, ”படத்தில் இடம்பெற்றுள்ள சில காட்சிகளை நீக்கினால் யு/ஏ சான்றிதழ் வழங்கப்படும் என மத்திய திரைப்படச் சான்றிதழ் வாரியம் (சிபிஎப்சி) வாரியம் கூறியது. அதனையேற்று அந்தக் காட்சிகளை படக்குழு நீக்கியது. அதன்பிறகும் சான்றிதழ் வழங்கப்படவில்லை” என, படத் தயாரிப்பு குழு சார்பாக ஆஜரான வழக்கறிஞர் தெரிவித்திருந்தார்.
அப்போது சிபிஎப்சி சார்பில் ஆஜரான மத்திய அரசின் வழக்கறிஞர், மத உணர்வுகளைப் புண்படுத்தும் காட்சிகள் இடம்பெற்றுள்ளதால் படத்தை மறுஆய்வுக்கு அனுப்புவது என முடிவு செய்யப்பட்டதாகக் கூறினார்.
பட மூலாதாரம், KVN PRODUCTIONS
மேலும், ஜனநாயகன் படத்தில் பாதுகாப்புப் படைகளின் சில சின்னங்கள் பயன்படுத்தப்பட்டுள்ளதால் அதற்கான நிபுணர்களிடம் ஆலோசனை பெற வேண்டும் எனவும் வாதிட்டார்.
இரண்டாவது நாளாக தொடர்ந்த வழக்கு விசாரணையில், ‘ஜனநாயகன் படத்துக்கு எதிராக இமெயில் மூலம் பெறப்பட்ட புகாரின் நகல் உள்பட அனைத்து ஆவணங்களும் நீதிமன்றத்தில் சமர்ப்பிக்கப்பட்டுள்ளதாக’, மத்திய அரசின் வழக்கறிஞர் தெரிவித்தார்.
வழக்கில் அனைத்து தரப்பு வாதங்களையும் கேட்ட பிறகு தீர்ப்பு ஜனவரி 9-ஆம் தேதிக்கு ஒத்திவைக்கப்பட்டது.
கட்டுப்பாட்டை மீறிய தவிர்க்க முடியாத காரணங்கள் – கேவிஎன் புரொடக்ஷன்ஸ்
இதற்கிடையே ஜன நாயகன் படத்தின் வெளியீடு ஒத்திவைக்கப்படுவதாக கேவிஎன் புரொடக்ஷன்ஸ் ஜனவரி 7-ஆம் தேதி இரவு அறிக்கை ஒன்றின் மூலம் அறிவித்தது.
அதில், “கனத்த இதயத்துடன் இந்த தகவலை பங்குதாரர்கள் மற்றும் பார்வையாளர்களுடன் பகிர்ந்து கொள்கிறோம். ஜனவரி 9-ஆம் தேதி ஆவலுடன் எதிர்பார்க்கப்பட்ட ஜன நாயகன் திரைப்பட வெளியீடு நமது கட்டுப்பாட்டை மீறிய தவிர்க்க முடியாத காரணங்களால் ஒத்திவைக்கப்படுகிறது.
பட மூலாதாரம், KVN PRODUCTIONS
இந்த திரைப்படத்தைச் சுற்றிய எதிர்பார்ப்பு, ஆர்வம் மற்றும் உணர்வுகளை நாங்கள் ஆழமாக புரிந்துகொள்கிறோம். இந்த முடிவு நம் யாருக்குமே எளிதான ஒன்று அல்ல. புதிய வெளியீட்டு தேதி விரைவில் அறிவிக்கப்படும்.
அது வரை உங்களுடைய பொறுமையையும், நீடித்த அன்பையும் கோருகிறோம். உங்களின் ஆதரவு தான் எங்களுக்கும், ஒட்டுமொத்த ஜனநாயகன் படக்குழுவுக்கும் மிகப்பெரிய பலம்.” எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
ஜன நாயகன் வெளியீடு ஒத்திவைப்பு – அரசியல் கட்சியினர், திரை பிரபலங்கள் கூறியது என்ன?
ஜனநாயகன் படத்தின் வெளியீடு ஒத்தி வைக்கப்பட்ட நிலையில் அரசியல் கட்சிகளின் தலைவர்கள், நடிகர்கள், இயக்குநர்கள் என பலரும் அதைப்பற்றி கருத்து தெரிவித்துள்ளனர்.
காங்கிரஸ் நாடாளுமன்ற உறுப்பினர் மாணிக்கம் தாகூர் தனது எக்ஸ் பக்கத்தில் வெளியிட்டுள்ள பதிவில், “இப்போது திரைத்துறை குறிவைக்கப்பட்டுள்ளது. அரசமைப்பு பேச்சு மற்றும் கருத்து சுதந்திரத்தை உறுதி செய்கிறது. இப்போது தணிக்கை வாரியம்கூட சினிமா மற்றும் கருத்துகளைக் கட்டுப்படுத்தும் ஆயுதமாகப் பயன்படுத்தப்படுகிறது” என்று தெரிவித்துள்ளார்.
பட மூலாதாரம், KVN PRODUCTIONS
ஜன நாயகன் பட வெளியீடு சர்ச்சையாகியுள்ள நிலையில், இயக்குநர் அஜய் ஞானமுத்து, “இது அதிகார துஷ்பிரயோகம். எந்தவொரு படமும் ஒருவரை மட்டுமே சார்ந்தது அல்ல; ஒரு படம் திரைக்கு வருவதில் நூற்றுக்கணக்கான மக்களின் உழைப்பும் பணமும் சம்பந்தப்பட்டிருக்கிறது” என்று தெரிவித்துள்ளார்.
இது தொடர்பாக மன வேதனை அடைந்துள்ளதாகக் கூறியுள்ள நடிகர் ரவி மோகன், “மனவேதனை அடைந்தேன், சகோதரனாக (விஜய்) உங்களுடன் நிற்கிறேன்” என்று தெரிவித்துள்ளார்.
நடிகர் ஷாந்தனு, “ஜன நாயகன் வெளியீட்டைச் சுற்றி நடக்கும் அனைத்தையும் பார்த்து மனமுடைந்துவிட்டேன். உங்களுக்காக (விஜய்) துணை நிற்போம். ஜன நாயகன் வெளியீட்டுடன் தான் பொங்கல் தொடங்கும்” என்று பதிவிட்டுள்ளார்.
ஜன நாயகன் திரைப்படத்திற்கு மாணிக்கம் தாகூர் உள்ளிட்ட காங்கிரஸ் தலைவர்கள் ஆதரவு தெரிவித்து கருத்து வெளியிட்டுள்ளது குறித்து திமுக அமைச்சர் கே.என்.நேருவிடம் செய்தியாளர்கள் கேள்வி எழுப்பினர்.
அப்போது அவர், “மத்திய அரசு தணிக்கை குழுவை வைத்துள்ளது. அதற்கும் மாநில அரசுக்கும் என்ன சம்பந்தம்? காங்கிரஸ் தலைவர்கள் ஏன் குரல் கொடுக்கிறார்கள் என்பது எனக்குத் தெரியாது. தெரியாத விஷயத்தில் நான் எதையும் கூற முடியாது,” என்று மட்டும் கூறிவிட்டார்.
ஜன நாயகன் திரைப்படம் தொடர்பாக மத்திய அரசு மீது விமர்சனங்கள் முன்வைக்கப்பட்ட நிலையில் பாஜக மூத்த தலைவர் தமிழிசை சௌந்தர்ராஜன் அதற்குப் பதிலளித்துள்ளார்.
அவர் தனது எக்ஸ் பக்கத்தில் இது தொடர்பாக வெளியிட்டுள்ள பதிவில், “காங்கிரஸ்காரர்கள் ஜன நாயகன் படத்திற்கு தணிக்கைச் சான்றிதழ் கிடைக்காததற்கு மத்திய அரசையும் பிரதமரையும் குறைகூறி மக்களை திசை திருப்பிக் கொண்டிருக்கிறார்கள்,” என்று குறிப்பிட்டுள்ளார்.