ஜன நாயகன் படத்திற்கு யு/ஏ சான்று வழங்கிய தனி நீதிபதியின் தீர்ப்புக்கு எதிராக மத்திய திரைப்பட சான்றிதழ் வாரியம் (சிபிஎஃப்சி) தாக்கல் செய்திருந்த மேல்முறையீட்டு மனு மீதான விசாரணை முடிந்த நிலையில், தீர்ப்பு ஒத்திவைக்கப்பட்டுள்ளது.
சென்னை உயர் நீதிமன்ற தலைமை நீதிபதி அமர்வில் நடைபெற்ற விசாரணையில் அனைத்து தரப்பு வாதங்களையும் கேட்ட நீதிபதிகள் தீர்ப்பை தேதி குறிப்பிடாமல் ஒத்தி வைத்தனர்.
நீதிமன்றத்தில் நடைபெற்ற வாதம்
இந்த வழக்கில் மத்திய திரைப்பட சான்றிதழ் வாரியம் சார்பில் ஆஜரான கூடுதல் சொலிசிட்டர் ஜெனரல் ஏ.ஆர்.எல். சுந்தரேசன், வாரியம் பதிலளிக்க உரிய கால அவகாசம் கொடுக்கப்படவில்லை என்றும் தயாரிப்பு நிறுவனத்தால் தொடரப்பட்ட வழக்கில், படத்தை மறு ஆய்விற்கு அனுப்பிய உத்தரவை ரத்து செய்யுமாறு வலியுறுத்தவில்லை என்றும் தெரிவித்ததாக லைவ் லா செய்தி கூறுகிறது.
தயாரிப்பு நிறுவனத்தின் தரப்பில் ஆஜரான வழக்கறிஞர் சதீஷ் பராசரன், படத்தை ஆய்வு செய்த சான்றிதழ் வாரிய குழு ஒருமனதாக பரிந்துரை வழங்கிய பிறகு அந்த முடிவு எங்களுக்கு தெரிவிக்கப்பட்டது அதனை மறு ஆய்விற்கு அனுப்பியிருக்க முடியாது என வாதிட்டதாகவும் லைவ் லா செய்தியில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இந்த முடிவு ஒரு மனதாக எடுக்கப்பட்ட நிலையில் ஒரே ஒரு உறுப்பினர் வேறு விதமாக முடிவெடுத்தாலும் பெரும்பான்மை உறுப்பினர்களின் முடிவையே ஏற்க வேண்டும் என்றும் தயாரிப்பு நிறுவனத்தின் தரப்பில் வாதிடப்பட்டது.
முன்னதாக படத்தில் சில மாற்றங்களை மேற்கொண்டால் யு/ஏ சான்று வழங்கப்படும் என சென்னையில் உள்ள சான்றிதழ் வாரியத்தின் பிராந்திய அலுவலகம் மூலம் தெரிவிக்கப்பட்டிருந்தது.
இந்தச் சூழலில் ஜனவரி 5-ஆம் தேதி படத்தை மறு ஆய்விற்கு அனுப்புவதாக தயாரிப்பு நிறுவனத்திற்கு தகவல் அளிக்கப்பட்டது.
பட மூலாதாரம், Madras High Court
சான்றிதழ் வாரியம் கூறியது என்ன?
தனி நீதிபதி அமர்வில் தாங்கள் வாதிட போதிய கால அவகாசம் வழங்கப்படவில்லை என சான்றிதழ் வரியம் தெரிவித்ததாக லைவ் லா கூறுகிறது. “படத்தின் வெளியீட்டு தேதியை முன்னரே தீர்மானித்துவிட்டு வழக்கிற்கு அதிக நேரம் கொடுக்கப்பட்டால் பொருளாதார இழப்பு ஏற்படும் என தயாரிப்பு நிறுவனம் வாதிட்டதாக” சான்றிதழ் வாரியத்தின் சார்பில் தெரிவிக்கப்பட்டது.
தயாரிப்பு நிறுவனம் சார்பில் வாதிடுகையில், படத்தை ஆய்வு செய்த குழுவின் உறுப்பினரே புகார் அளித்திருக்கிறார், விதிப்படி அவ்வாறு செய்ய முடியாது எனத் தெரிவிக்கப்பட்டதாக லைவ் லா கூறுகிறது.
“சான்றிதழைப் பெற்ற பிறகு வெளியீட்டுத் தேதியை அறிவிப்பதை எந்த தயாரிப்பாளரும் செய்ய மாட்டார்” என சதீஷ் பராசரன் குறிப்பிட்டார். அத்துடன் அவருடைய வாதம் முடிவடைந்தது.
இதற்குப் பிறகு வாதிட்ட கூடுதல் சொலிசிட்டர் ஜெனரல், ஒரு உறுப்பினருக்குக்கூட புகார் அளிக்க உரிமையுள்ளது என்றும் அவருடைய ஆட்சேபணைகளில் ஒன்று மத நல்லிணக்கம் தொடர்பானது என்றும் மற்றொன்று, நிபுணர் குழுவில் ஒருவர்கூட ராணுவத்தைச் சேர்ந்தவராக இல்லை என்பது என்றும் குறிப்பிட்டார். சான்றிதழ் வாரியத் தலைவர் படத்தைப் பார்க்கவில்லையென்பதால், மறு ஆய்வுக் குழுவுக்குப் பரிந்துரைக்க அவர் முடிவுசெய்தார் என்றும் கூடுதல் சொலிசிட்டர் ஜெனரல் தெரிவித்தார்.
சான்றிதழ் நிறுவனம் வாதிட ஒருநாள் கூட அவகாசம் வழங்கப்படாதது கவலையளிக்கிறது என தயாரிப்பாளர் தரப்பிடம் நீதிபதிகள் கவலையை வெளிப்படுத்தினர்.
மேலும் நீதிபதிகளின் கருத்தில், “இது அனுமதிக்கப்பட்டால் அனைவரும் தங்களிடம் அவசியமான வழக்கு உள்ளது என வரத் தொடங்கிவிடுவார்கள். தயாரிப்பாளர்கள் அவசரத்தை உருவாக்கியதால் தான் வழக்கு விசாரிக்கப்பட்டது. உங்கள் வாதத்தை நாங்கள் ஏற்றுக்கொண்டால் அது முன்னுதாரணமாகிவிடும். மக்கள் அனைவரும் இது அவசியமான வழக்கு ஒரே நாளில் விசாரியுங்கள் என வரத் தொடங்கிவிடுவார்கள்.” என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
ஜன நாயகன் வெளியீட்டில் என்ன சர்ச்சை?
பட மூலாதாரம், KVN Productions
நடிகர் விஜய் நடிப்பில் ஹச்.வினோத் இயக்கத்தில் ஜனவரி 9-ஆ ம் தேதி அன்று வெளியாகவிருந்த ஜன நாயகன் படத்திற்கு சான்றிதழ் கிடைப்பது தாமதமானதால் படத்தின் வெளியீடு ஒத்திவைக்கப்பட்டது.
இதற்கு முன்னதாக படத்திற்கு சான்றிதழ் வழங்கப்படாததை எதிர்த்து தயாரிப்பு நிறுவனம் சார்பில் உயர் நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டிருந்தது.
அந்த வழக்கை விசாரித்த தனி நீதிபதி ஜன நாயகன் படத்தை மறு ஆய்விற்கு அனுப்பியதை ரத்து செய்தும் உடனடியாக யு/ஏ சான்று வழங்குமாறும் ஜனவரி 9-ஆம் தேதி வழங்கிய தீர்ப்பில் தெரிவித்திருந்தார்.
இதனை எதிர்த்து சான்றிதழ் வாரியம் சார்பில் அன்றைய தினமே உயர் நீதிமன்ற அமர்வில் செய்யப்பட்ட மேல்முறையீட்டில் தனி நீதிபதியின் உத்தரவிற்கு தடை விதிக்கப்பட்டது. அதோடு வழக்கின் விசாரணை ஜனவரி 21-ஆம் தேதிக்கு ஒத்திவைக்கப்பட்டிருந்தது.
இதற்கிடையே தயாரிப்பு நிறுவனம் சார்பில் உச்ச நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்யப்பட்டிருந்தது. ஆனால் அந்த மனுவை தள்ளுபடி உச்ச நீதிமன்றம் மீண்டும் உயர்நீதிமன்றத்தையே அணுகுமாறும் வழக்கின் விசாரணை ஜனவரி 20-ஆம் தேதி மேற்கொள்ளுமாறும் அறிவுறுத்தியிருந்தது.