தவெக ஆலோசனைக் கூட்டத்தில், புதிதாக தேர்வு செய்யப்பட்ட மாவட்டச் செயலாளர்கள் விவரம் வெளியிடப்பட்டது. ஜன.20-ம் தேதிக்குள் துணை செயலாளர்கள், பொருளாளர்களைத் தேர்வு செய்து தலைமைக்கு அனுப்ப வேண்டும் என்று பொறுப்பாளர்களுக்கு புஸ்ஸி ஆனந்த் அறிவுறுத்தியுள்ளார்.
சென்னையை அடுத்த பனையூரில் உள்ள தவெக தலைமையகத்தில் பொதுச் செயலாளர் புஸ்ஸி ஆனந்த் தலைமையில் மாவட்ட பொறுப்பாளர்கள் ஆலோசனைக் கூட்டம் நேற்று நடைபெற்றது. இதில், புதிதாக தேர்வு செய்யப்பட்ட மாவட்டச் செயலாளர்கள் விவரம் வெளியிடப்பட்டது.
அப்போது, பல்வேறு மாவட்டங்களைச் சேர்ந்த பொறுப்பாளர்கள், தாங்களும் மாவட்டச் செயலாளராக செயல்பட விரும்புவதாக விருப்பம் தெரிவித்தனர். தூத்துக்குடி மாவட்ட பொறுப்பாளர் அஜிதா அக்னல் கூட்டத்தில் இருந்து திடீரென வெளியேறினார். மாவட்டச் செயலாளர் பதவி அவருக்கு வழங்கப்படாத அதிருப்தியில் அவர் வெளியேறியதாகக் கூறப்படுகிறது.
இதைத்தொடர்ந்து மேலும் சில பொறுப்பாளர்களும் தங்களுக்கு மாவட்டச் செயலாளர் பதவி வழங்கப்படவில்லை என அதிருப்தியில் வெளியேறிதாக நிர்வாகிகள் தரப்பில் தெரிவிக்கப்பட்டது. இதனால், ஆலோசனைக் கூட்டத்தில் சலசலப்பு ஏற்பட்டது. அதைத்தொடர்ந்து அதிருப்தியில் உள்ள நிர்வாகிகளுடன், புஸ்ஸி ஆனந்த் தனியே ஆலோசனை நடத்தினார்.
பின்னர், ஜன.20-ம் தேதிக்குள், 2 துணைச் செயலாளர்கள், பொருளாளரைத் தேர்வு செய்து விவரங்களை தலைமைக்கு வழங்குமாறு தேர்வு செய்யப்பட்டுள்ள பொறுப்பாளர்களுக்கு, அறிவுறுத்தினார். மேலும், சமீபத்தில் வெளியான ஆடியோ விவகாரம் தொடர்பாகவும் நிர்வாகிகளிடம் புஸ்ஸி ஆனந்த் விளக்கம் அளித்துள்ளார். காழ்ப்புணர்ச்சி காரணமாக சிலர் அவதூறுகளை பரப்புவதாகவும், அதை கட்சி நிர்வாகிகள் பொருட்படுத்த வேண்டாம் எனவும் கூறியுள்ளார்.
இதற்கிடையே, தேர்வு செய்யப்பட்ட நிர்வாகிகளுடன் விஜய் தனித்தனியாக ஆலோசித்து, அவர்கள் குறித்த முழு விவர பட்டியலை, கட்சியின் முதலாம் ஆண்டு கொண்டாட்டத்தின்போது வெளியிட திட்டமிட்டிருப்பதாக கட்சி நிர்வாகிகள் தெரிவித்தனர்.