ஏஎன்ஐ செய்தி முகமையின்படி, ஜம்முவின் சத்வாரி, சம்பா, ஆர்எஸ் புரா உள்ளிட்ட பகுதிகளில் பாகிஸ்தான் 8 ஏவுகணைகளை ஏவியது, அனைத்தையும் இந்திய வான் பாதுகாப்பு பிரிவுகள் இடைமறித்தன என்று பாதுகாப்பு வட்டாரங்கள் தெரிவித்துள்ளன.
ஜம்முவில் பாதுகாப்பு அமைப்பு செயல்படுத்தப்பட்டுள்ளதாகவும், நகரம் முழுவதும் சைரன்கள் ஒலிக்கப்படுவதாகவும் இந்திய ராணுவ வட்டாரங்கள் பிபிசியிடம் தெரிவித்தன.
பட மூலாதாரம், Getty Images
தாக்குதலை நேரில் பார்த்த ஒருவர் ஜம்மு விமான நிலையத்தின் அருகே வெடிபொருட்களின் 16 சிதறல்களைப் பார்த்தாக பிபிசியிடம் கூறினார்.
மின்சாரம் துண்டிக்கப்பட்டதாகவும், சைரன் சத்தம் கேட்பதாகவும் அங்கிருந்த மக்கள் கூறுகின்றனர்.
ஜம்முவில் பல இடங்களில் மக்கள் வெடிப்புச் சத்தங்களைக் கேட்டுள்ளனர், மேலும் நகரம் முழுவதும் மின்சாரம் துண்டிக்கப்பட்டுள்ளது என பிபிசி செய்தியாளர் திவ்யா ஆர்யா தெரிவித்துள்ளார்.
கத்துவா உள்ள மக்கள் இரண்டு இடங்களில் வெடிச்சத்தங்களைக் கேட்டுள்ளனர். மேலும் இங்கும் மின்சாரம் துண்டிக்கப்பட்டுள்ளது. கத்துவா ஜம்முவிலிருந்து ஒன்றரை மணி நேர பயண தூரத்தில் உள்ளது. தற்போது, இரண்டு நகரங்களும் முற்றிலும் மின்சாரம் துண்டிக்கப்பட்டுள்ளது.
ஜம்மு காஷ்மீரின் ராஜௌரி மாவட்டத்தின் தகவல் மற்றும் மக்கள் தொடர்புத் துறை, தங்களது எக்ஸ் தள பக்கத்தில், “பொதுமக்கள் தங்கள் பகுதிகளில் மின்தடையை உறுதி செய்யுமாறு கேட்டுக் கொள்ளப்படுகிறார்கள். அனைத்து வெளிப்புற விளக்குகளையும் அணைத்துவிட்டு, எந்த வெளிச்சமும் வெளியே செல்லாதபடி ஜன்னல்களை மூடி வைக்கவும்.” என்று எச்சரித்துள்ளது.
கிரிக்கெட் போட்டி நிறுத்தம்
இதற்கிடையில், தர்மசாலாவில் நடைபெற்று வந்த ஐபிஎல் போட்டி பாதியில் நிறுத்தப்பட்டுள்ளது.
கிரிக்இன்ஃபோ வலைத்தளத்தின்படி, ஹிமாச்சலப் பிரதேசம் மாநிலத்தின் தர்மசாலாவில் பஞ்சாப் கிங்ஸ் லெவன் மற்றும் டெல்லி கேபிடல்ஸ் அணிகளுக்கு இடையேயான போட்டி ரத்து செய்யப்பட்டுள்ளது.