• Mon. Jan 19th, 2026

24×7 Live News

Apdin News

ஜல்லிக்கட்டு காளை வளர்த்தாலும் பெண்கள் ஆண்களை போல் களமிறங்காதது ஏன்?

Byadmin

Jan 19, 2026


ஜல்லிக்கட்டு: பெண்கள் மாடுபிடி வீரர்களாக பங்கேற்காதது ஏன்? எது தடுக்கிறது?
படக்குறிப்பு, ஒருவேளை பெண்கள் பங்கெடுக்கக்கூடிய ஜல்லிக்கட்டுப் போட்டிகள் நடத்தப்பட்டால் தனக்கும் கலந்துகொள்ள ஆர்வம் வரும் என்கிறார் காளைகளை வளர்த்து வரும் அழகுபேச்சி

“ஜல்லிக்கட்டு பாரம்பரியமாக ஆண்களால் விளையாடப்படுகிறது. இதில் பெண்கள் கலந்து கொள்வதற்கான வாய்ப்பு இருக்காது. அப்படி இருந்தால் கலந்து கொள்ளலாம் என்ற ஆர்வம் எல்லோருக்கும் இருக்கத்தான் செய்கிறது.”

நான்கு ஆண்டுகளாக இரண்டு ஜல்லிக்கட்டு காளைகளை வளர்த்து வரும் மதுரை அவனியாபுரத்தைச் சேர்ந்த பத்தாம் வகுப்பு படிக்கும் அழகுபேச்சியின் வார்த்தைகள் இவை.

எதிர்காலத்தில் ஒருவேளை பெண்கள் பங்கெடுக்கக்கூடிய ஜல்லிக்கட்டுப் போட்டிகள் நடத்தப்பட்டால் “தனக்கும் கலந்துகொள்ள வேண்டுமென்ற ஆர்வம் வரும். ஆனால், அதே மனப்பான்மை அனைவருக்கும் இருக்குமா என்பது தெரியவில்லை” என்கிறார் அவர்.

அதேவேளையில், “மாடுகளை ஒரு பாச உணர்வில்தான் வளர்க்கிறோம். ஆனால் இந்த விளையாட்டை பாரம்பரியமாக ஆண்களே விளையாடி வருகின்றனர். பெண்கள் கலந்துகொண்டு ஒருவேளை விபத்து ஏதேனும் நேர்ந்துவிட்டால் என்ன செய்வது என்ற அக்கறையில்தானே கூறுகிறார்கள்,” என்கிறார் அழகுபேச்சி.

பெண்களும் ஜல்லிக்கட்டில் பங்கேற்கும் வாய்ப்பு கிடைத்தால் ஆர்வத்துடன் பங்கேற்க அழகுபேச்சி போலவே பெண்கள் பலரும் விரும்பலாம். ஆனால் நடைமுறையில், ஏறுதழுவுதல் என்பது ஆணாதிக்கத்தை அடிப்படையாகக் கொண்டுள்ள இந்திய கலாசார அமைப்புகளில் ஒன்றின் நீட்சியாகவே இருப்பதாக சில அறிஞர்கள் வாதிடுகின்றனர்.

By admin