• Sat. Jan 18th, 2025

24×7 Live News

Apdin News

ஜல்லிக்கட்டு போட்டியில் சாதிப் பாகுபாடா? – மதுரை ஆட்சியர் மறுப்பு | Madurai Collector denies caste discrimination in Jallikattu

Byadmin

Jan 18, 2025


மதுரை: ‘‘ஜல்லிக்கட்டு நிகழ்ச்சியில் சாதிப் பாகுபாடு இல்லை’’ என்று மதுரை ஆட்சியர் சங்கீதா விளக்கம் கொடுத்துள்ளார்.

மதுரை மாவட்டத்தில் பொங்கல் பண்டிகையை முன்னிட்டு நடந்த அவனியாபுரம், பாலமேடு, அலங்காநல்லூர் ஜல்லிக்கட்டு போட்டிகளில் சாதி பாகுபாடு கடைபிடிக்கப்பட்டதாக மாடுபிடி வீரர்கள், காளை உரிமையாளர்கள் சமூக வலைதளங்களில் குற்றம்சாட்டினர். இதுகுறித்து ஆட்சியர் சங்கீதா வெளியிட்ட அறிக்கையில் கூறியிருப்பதாவது:

மதுரை மாவட்டத்தில் 2025-ம் ஆண்டுக்கான ஜல்லிக்கட்டு நிகழ்ச்சிகள் அவனியாபுரம், பாலமேடு மற்றும் அலங்காநல்லூர் ஆகிய இடங்களில் நடைபெற்றது. இந்த ஜல்லிக்கட்டு போட்டியில் பங்கேற்கும் காளைகள் மற்றும் மாடுபிடி வீரர்களுக்கு ஆன்லைன் மூலம் விண்ணப்பம் பெறப்பட்டு டோக்கன் வழங்கப்பட்டு அனுமதிக்கப்பட்டனர். மாடுபிடி வீரர்களின் உடற்தகுதி மற்றும் அவசர காலங்களில் தொடர்பு கொள்ள வேண்டிய விவரங்கள் மட்டுமே ஆன்லைன் விண்ணப்பத்தில் கோரப்படுகிறது. இதில் இனம், மதம் போன்ற எவ்வித விவரங்களும் கோரப்படுவதில்லை.

உடல் தகுதித் தேர்வில் பங்கேற்க வரும் மாடுபிடி வீரர்களை மருத்துவ பரிசோதனை மேற்கொண்டு சுற்றுக்கு 50 நபர்கள் வீதம் போட்டியில் பங்கேற்க அனுமதிக்கப்படுகிறார்கள். ஒவ்வொரு சுற்றுக்கும் அனைத்து மாடுபிடி வீரர்களுக்கும் 1 மணி நேரம் சம வாய்ப்பு வழங்கப்படுகிறது. இந்த போட்டிகளில் சமூக பாகுபாடுகள் ஏதும் இல்லை. போட்டியின் நிறைவு நேரத்தினை கருத்தில் கொண்டு போட்டியின் முடிவில் கடந்த சுற்றுகளில் சிறப்பாக விளையாடிய மாடுபிடி வீரர்களை கொண்டு இறுதி சுற்று நடத்தப்பட்டு சிறந்த மாடுபிடி வீரர்கள் அடையாளம் காணப்படுகிறார்கள்.

கடந்த 15-ம் தேதி அன்று பாலமேடு கிராமத்தில் நடைபெற்ற ஜல்லிக்கட்டு நிகழ்ச்சியில் சாதி பாகுபாடு காரணமாக தமிழரசன் என்பவர் கலந்து கொள்ள வாய்ப்பு அளிக்கப்படவில்லை என்றும், தனது டோக்கன் எண் 24 என்றும் சமூக வலைதளத்தில் தெரிவித்துள்ளார்.

ஆனால், தமிழரசன் என்பவரின் டோக்கன் எண் 204. மேலும், அவர் போட்டிக்கு தாமதமாக வந்ததால் 9-வது சுற்றில் களமாட இருந்தார். 8-வது சுற்று முடிக்கப்பட்ட போது மழை மற்றும் நேரமானதால் இறுதியாக சிறந்த மாடுபிடி வீரர்களுக்கான சுற்று மட்டும் நடத்தப்பட்டு, 9-வது சுற்று நடத்தப்படாமால் நிகழ்ச்சி முடிக்கப்பட்டது. மேற்படி தமிழரசன் என்பவர் சமூக வலைதளத்தில் குறிப்பிட்டுள்ளது உண்மைக்கு புறம்பானவை. இவ்வாறு அவர் அந்த அறிக்கையில் தெரிவித்துள்ளார்.



By admin