பட மூலாதாரம், Getty Images / PA
கனடாவின் முன்னாள் பிரதமரும், உலகம் முழுவதும் சுற்றுப்பயணம் செய்து புகழின் உச்சத்தை தொட்ட ஒரு அமெரிக்கப் பாப் நட்சத்திரமும் இணைவதை வெகு சிலர் கூடக் கணித்திருக்க முடியாது.
ஜஸ்டின் ட்ரூடோவும் கேட்டி பெர்ரியும் தங்களது உறவை அதிகாரப்பூர்வமாக்கியுள்ளனர். கடந்த வார இறுதியில் பெர்ரியின் 41வது பிறந்தநாளை பாரிஸில் உள்ள கிரேஸி ஹார்ஸ் கபரேவில் கொண்டாடிவிட்டு வெளியேறியபோது இருவரும் கைகோர்த்துச் சென்றதைக் காண முடிந்தது.
கடந்த பத்து ஆண்டுகளாக பொதுமக்கள் கவனத்தின் மையத்தில் இருந்து வரும் ட்ரூடோவும் பெர்ரியும் ஒரு சாத்தியமில்லாத ஜோடியை போலத் தோன்றினாலும், சிலர் நினைப்பதை விட அதிகப் பொதுவான அம்சங்களைக் கொண்டுள்ளனர்.
மேலும், அவர்களின் இந்த வளர்ந்து வரும் காதல் கனடா அரசியல் வரலாற்றில் முன்னுதாரணம் அற்றதும் இல்லை.
இருவரின் நற்பெயருக்கும் ஏற்பட்ட அடியிலிருந்து கவனத்தைத் திசை திருப்ப இந்த உறவு அவர்களுக்கு உதவுகிறது.
லாங் பீச்சில் உள்ள கலிபோர்னியா ஸ்டேட் யுனிவர்சிட்டியில் தகவல் தொடர்பு ஆய்வுகள் பேராசிரியரான ஜோஸ் ரோட்ரிகஸ், இந்த உறவு “அவர்கள் இருவருக்கும் ஒரு சுவாரஸ்யமான மற்றும் எதிர்பாராத வழியில் புதிய பிம்பத்தை உருவாக்குகிறது.” என்கிறார்.
ஒரு அரசியல்வாதியுடன் இணைவது சமூக மற்றும் தொண்டு முயற்சிகளில் ஈடுபட பெர்ரிக்கு ஒரு நம்பகமான பாலத்தை உருவாக்குகிறது, என்று அவர் மேலும் கூறுகிறார்.
இது, இசைத்துறைக்கு அப்பாற்பட்ட அரசியல் ஆர்வமுள்ள பொதுமக்கள் மற்றும் உலகளாவிய அமைப்புகளுடன் அவருடைய தொடர்பையும், பார்வையாளர்களின் வட்டாரத்தையும் விரிவுபடுத்துகிறது.
அரசியல் போன்ற கடினமான உலகிற்கு மாறாக “மென்மையான களத்தில் இருக்கும் ‘கலிஃபோர்னியா கேர்ள்ஸ்’ பாடலை பாடிய கேட்டி பெர்ரி, 53 வயதான ட்ரூடோவின் புதிய ஆளுமை பிம்பத்திற்கு புதிய வலு சேர்க்கிறார் என்று ரோட்ரிகஸ் கூறுகிறார்.
இதன் மையத்தில் எளிய மனிதப் பிணைப்பும் உள்ளது என்று பார்வையாளர்கள் குறிப்பிடுகின்றனர்.
இருவரும் அண்மையில் தம்தமது திருமண உறவுகளிலிருந்து விலகினர். ட்ரூடோவும் அவருடைய மனைவியும் 2023-இல் பிரிந்தனர். மேலும் இது இருவருக்கும் பிரிவுக்குப் பிறகு ஏற்படும் வெளிப்படையான முதல் காதல் ஆகும்.
கவனத்தைத் திசை திருப்புதல்
அவர்கள் இருவருக்கும் இடையிலான காதல் பற்றிய வதந்திகள் ஜூலை மாத இறுதியில் பரவத் தொடங்கின. அப்போது இருவரும் மாண்ட்ரீல் நகரின் மையப்பகுதியில் உள்ள ஓர் ஆடம்பர உணவகத்தில் இரவு உணவு சாப்பிடுவதைக் காண முடிந்தது.
இரண்டு நாட்களுக்குப் பிறகு, நகரில் நடைபெற்ற பெர்ரியின் நிகழ்ச்சியில் ட்ரூடோ கலந்து கொண்டு, அவருடைய ‘ஃபயர் வொர்க்’ (Firework) மற்றும் ‘டீன் ஏஜ் ட்ரீம்’ (Teenage Dream) போன்ற ஹிட் பாடல்களைப் பாடினார்.
பின்னர், அக்டோபர் நடுப்பகுதியில், கலிபோர்னியாவின் சான்டா பார்பரா கடற்கரையை ஒட்டிய பகுதியில் இருந்த பெர்ரியின் படகில் அவர்கள் முத்தமிடும் காட்சிகள் வைரலானது.
ட்ரூடோவோ அல்லது பெர்ரியோ தங்கள் காதல் பற்றிப் பொதுவில் பேசவில்லை. கருத்து கேட்டு பிபிசி முன்வைத்த கோரிக்கைகளுக்கு அவர்களின் பிரதிநிதிகள் பதிலளிக்கவில்லை. ஆனால் இந்த வார இறுதி புகைப்படங்கள் வருவதற்கு முன்பு, கடந்த மாதம் லண்டன் சுற்றுப்பயணத்தின் போது இந்தக் காதல் உறவு குறித்து கேட்டி சூசகமாகக் குறிப்பிட்டுள்ளார்.
அவரும் ட்ரூடோவும் முத்தமிடும் புகைப்படங்கள் வெளிவந்த சிறிது நேரத்திலேயே அரங்கில் இருந்த ஒரு ரசிகர் திருமணம் செய்துகொள்ளும்படி அவரிடம் கேட்டார்.
“நீங்கள் 48 மணி நேரத்திற்கு முன்பு என்னைக் கேட்டிருக்க வேண்டும்,” என்று பெர்ரி பதிலளித்தார்.
பலர் இதை எதிர்பார்க்கவில்லை என்றாலும், பார்வையாளர்கள் இது அவர்களின் தனிப்பட்ட பொது பிம்பங்களுக்கு உதவுகிறது என்று கூறுகின்றனர்.
பட மூலாதாரம், Getty Images
2015-ஆம் ஆண்டில் கனடாவின் உயரிய பதவிக்கு வந்தபோது உலகளாவிய முற்போக்கு அடையாளமாக மாறிய ட்ரூடோ, அவருடைய செல்வாக்கு குறைந்ததால் இந்த ஆண்டின் தொடக்கத்தில் பதவி விலக வேண்டிய கட்டாயம் ஏற்பட்டது.
பத்து ஆண்டுகளுக்கு முன் உள்நாட்டில் பெரும்பான்மையுடன் வெற்றி பெற்ற போதிலும், வெளிநாடுகளில் அவருடைய இளமையான கவர்ச்சியால் பாராட்டப்பட்ட போதிலும் – அவருடைய பிம்பத்தை கெடுப்பதற்கான களங்கங்கள் உருவாவதற்கு அதிக நேரம் எடுக்கவில்லை.
அவர் மேற்கொண்ட தொடர் ஆடம்பர விடுமுறைப் பயணங்கள் விமர்சனத்தை ஈர்த்தன – இதில் பஹாமாஸில் உள்ள ஆகா கானின் தீவுக்குச் சென்ற பயணம் அடங்கும். இது மத்திய அரசின் நல முரண்பாடு சட்டங்களுக்கு முரணாக இருந்ததாகக் கண்டறியப்பட்டது.
பின்னர் ட்ரூடோ 2019-இல் பழைய பிளாக்ஃபேஸ் (Blackface) புகைப்படங்கள் வெளிவந்த பிறகு மற்றொரு சர்ச்சையை எதிர்கொண்டார், இதனால் பகிரங்க மன்னிப்புக் கேட்கும் கட்டாயத்திற்கு அவர் உள்ளானார்.
அவருடைய பதவிக்காலத்தின் முடிவில், கனடியர்கள் அவருடைய தலைமையால் விரக்தியடைந்து, அவரை மாற்றத் தயாராக இருந்தனர்.
பெர்ரியும் பல ஆண்டுகளாக புகழில் உயர்ந்து பறந்த பிறகு அதேபோல் விரும்பத்தகாத தலைப்புச் செய்திகளில் இடம்பெற்றார்.
இந்த 2010களில் தொடர்ந்து ஹிட் பாடல்களை வெளியிட்டு, பாப் நட்சத்திர அந்தஸ்தின் உச்சத்தை அனுபவித்தார். அவருடைய தைரியமான, வண்ணமயமான பாணி பாப் கலாசாரத்தை வரையறுக்க உதவியது. 2018-ஆம் ஆண்டில், பில்போர்ட் பத்திரிகை அவரை 21-ஆம் நூற்றாண்டின் சிறந்த பாப் நட்சத்திரங்களில் ஒருவராக குறிப்பிட்டது.
ஆனால் அவரையும் சர்ச்சைகள் சந்தித்தன. அவருடைய புதிய ஆல்பமான ‘143’ விமர்சகர்களால் அவருடைய மிக மோசமான கலை முயற்சி என்று விமர்சிக்கப்பட்டது.
‘தி கார்டியன்’ அதை “முழு பேரழிவில் இருந்து சற்று குறைவானதாக” இருந்தது என்று கூறியது, அதே நேரத்தில் ‘தி டெலிகிராஃப்’ அதை “மிகவும் மோசமானது” என்று அழைத்தது.
இந்த ஆண்டின் தொடக்கத்தில், கோடீஸ்வரர் ஜெஃப் பெசோஸின் மனைவி லாரன் சான்செஸ் மற்றும் சிபிஎஸ் செய்தி தொகுப்பாளர் கேல் கிங் ஆகியோருடன் பெண்களுக்கான ப்ளூ ஆரிஜின் விண்வெளிப் பயணத்தில் பங்கேற்றதற்காக அவர் கேலி செய்யப்பட்டார்.
பெர்ரி ஏப்ரல் மாதம் இந்த விமர்சனத்தை ஏற்றுக் கொண்டார், “நான் முழுமையாக சிறப்பானவள் அல்ல” ஆனால் “இணையம் என்பது கட்டுப்பாடற்ற மற்றும் குணப்படுத்தப்படாதவர்களுக்கு ஒரு குப்பை கொட்டும் இடமாக மாறிவிட்டது.” என்று கூறினார்.
பட மூலாதாரம், Getty Images
பின்னர் நடிகர் ஆர்லாண்டோ ப்ளூமுடனான அவரது உறவும் முறிந்தது. 2011-ஆம் ஆண்டில் நகைச்சுவை நடிகர் ரஸ்ஸல் பிராண்டுடனான அவருடைய திருமணம் முறிந்த பிறகு இவர் ப்ளூமுடன் உறவில் இருந்தார்.
“நீங்கள் ஒரு துரதிர்ஷ்டவசமான கதைக்கு நடுவில் இருக்கும்போது, நீங்கள் செய்யக்கூடிய சிறந்த விஷயம் வேறு ஒரு கதைக்கு மாறுவதுதான்,” என்று லாஸ் ஏஞ்சலிஸ் டைம்ஸின் பாப் இசை விமர்சகர் மைகேல் வூட் குறிப்பிடுகிறார்.
ட்ரூடோவுடனான உறவு “தோல்வியடைந்த ஆல்பம் மற்றும் சிறிது ஆவலாகவும் வழி தவறியதாகவும் தோன்றிய ஒரு சுற்றுப்பயணத்திலிருந்து கவனத்தை மாற்றி, நம்மை வேறு விஷயத்தைப் பற்றி பேச வைக்கிறது”
இந்த உறவை படிப்படியாக வெளிப்படுத்தியது பார்வையாளர்களை இந்தக் காதலுக்குப் பழக்கப்படுத்தியது போலவும் தெரிந்தது.
அவர்கள் பாரிஸில் ஒன்றாகத் தோன்றிய விதம், காட்சிகள் மூலம் அவர்களின் அன்பை “அதிக சமிக்ஞைகள் மற்றும் குறைந்த பேச்சுகள் மூலம் உறுதிப்படுத்தும் உத்தி.” என்று பேராசிரியர் ரோட்ரிகஸ் குறிப்பிடுகிறார்.
சொர்க்கத்தில் முடிவுசெய்யப்பட்ட இணைப்பா?
இந்த ஜோடிக்கு பொதுவான விஷயங்களும் இருக்கத்தான் செய்கின்றன.
அவர்கள் தங்கள் துறைகளில் “அமைப்பை எதிர்ப்பவர்கள்” மற்றும் தடைகளை உடைப்பவர்கள் என்பதால் பெர்ரி மற்றும் ட்ரூடோ சித்தாந்த ரீதியாக ஒத்துப்போகிறார்கள், என்று லாஸ் ஏஞ்சலிஸை சேர்ந்த இசை எழுத்தாளர் கெரிக் கென்னடி சொல்கிறார்.
பெர்ரி தன்னளவில் சமூகச் செயல்பாட்டிலும் அரசியலிலும் புதியவரல்ல, 2016-ஆம் ஆண்டில் ஜனநாயகக் கட்சியின் அமெரிக்க அதிபர் வேட்பாளர் ஹிலாரி கிளிண்டனுக்காக பல பிரசார நிகழ்வுகளில் அவர் பாடியுள்ளார். மேலும் 2024 தேர்தலில் கமலா ஹாரிஸை பகிரங்கமாக ஆதரித்தார்.
அவர் LGBTQ உரிமைகளுக்காகப் பகிரங்கமாகப் பேசுபவர் மற்றும் பல்வேறு பெண்ணியத் தொண்டு நிறுவனங்கள் மற்றும் காரணங்களை ஆதரித்துள்ளார். இதே உரிமைகளுக்கு ட்ரூடோவும் பொதுவில் ஆதரவு அளித்துள்ளார். (அமைச்சரவையில் பாலின சமத்துவத்தை அவர் தனது கொள்கையில் மையமாகக் கொண்டவர் என்பது பிரபலம்).
அவர்கள் இருவரும் தங்கள் இளம் குழந்தைகளுக்கு அர்ப்பணிப்புள்ள பெற்றோர்களாகவும் தோன்றுகிறார்கள். பெர்ரியின் நான்கு வயது மகள் டெய்ஸி, அவருடைய இன்ஸ்டாகிராமில் அடிக்கடி வருகிறார். ட்ரூடோவின் இன்ஸ்டாகிராம், அவர் தனது மூன்று குழந்தைகளில் ஒவ்வொருவரையும் இந்த கோடையில் தனித்தனி விடுமுறைகளுக்கு அழைத்துச் சென்றதை காட்டுகிறது.
பட மூலாதாரம், Getty Images
பெர்ரியை டேட்டிங் செய்வதன் மூலம், பெரும்பாலும் உயர்மட்ட ஆலோசனைப் பணிகளை அல்லது சட்ட நிறுவனங்களில் இணைந்த தனது முன்னோடிகளை விட வித்தியாசமான அரசியலுக்குப் பிந்தைய பாதையை ட்ரூடோ தேர்வு செய்திருக்கிறார்.
எப்போதும் அசாதாரணமான ஒரு பிரதமரைப் பொறுத்தவரை இது அவருடைய பாணிக்கு ஏற்றது, என்று ஒட்டாவா பல்கலைக்கழகத்தின் சந்தைப்படுத்தல் பேராசிரியர் மைக்கேல் மல்வே கூறுகிறார்.
மற்றொரு முன்னாள் பிரதமரான பியர் எலியட் ட்ரூடோவின் மகனாக, அவர் வெளிச்ச வட்டத்தில் வளர்ந்தார். அமெரிக்காவின் முன்னாள் முதல் பெண்மணி பாட் நிக்சன் குழந்தையாக இருந்த ஜஸ்டினை கையில் ஏந்தியிருக்கும் புகைப்படம் அவரது ஆரம்பகால புகைப்படங்களில் ஒன்றாக உள்ளது.
தனது மனைவியிடமிருந்து பிரிந்த பிறகு, ஜஸ்டின் ட்ரூடோ தனது தந்தையுடன் ஒப்பிடப்படுவதை தவிர்க்க முடியவில்லை. இவருடைய தந்தையும் தனது முதல் மனைவியையும், குழந்தைகளின் தாயுமான மார்கரெட்டை, பதவியில் இருந்தபோது பிரிந்தார்.
ஜஸ்டின் ட்ரூடோவின் தந்தையும் அமெரிக்கப் பாடகி பார்பரா ஸ்ட்ரைசண்ட் மற்றும் ‘செக்ஸ் அண்ட் தி சிட்டி’ புகழ் கனடிய நடிகை கிம் கேட்ரால் போன்ற பிரபலங்களுடன் டேட்டிங் செய்துள்ளார்.
“வரலாறு மீண்டும் மீண்டும் நடப்பதைப் பார்க்கிறோம் என்பதில் சந்தேகமில்லை,” என்று ஒட்டாவாவில் உள்ள கார்ல்டன் பல்கலைக்கழகத்தின் அரசியல் அறிவியல் பேராசிரியர் ஜோனதன் மல்லோய் கூறுகிறார்.

அரசியலிலிருந்து விலகிய சிறிது காலத்திலேயே, ட்ரூடோ சமையலறைப் பாத்திரங்களை வாங்கும் ஒரு புகைப்படத்தைப் பதிவிட்டார். இதை வர்ணனையாளர்கள், அவர் தனது “விவாகரத்து பெற்ற தந்தை சகாப்தத்தின்.” தொடக்கத்தைக் குறிப்பதாக எடுத்துக்கொண்டனர்.
“அவர் மனதை ஒரு நிலைக்குக் கொண்டு வர வேண்டும், விவாகரத்துக்குப் பிந்தைய அதிர்ச்சியிலிருந்து மீளும் காலத்தைப் பெற வேண்டும், மேலும் தனது வாழ்க்கையைத் தொடர வேண்டும் என்று நம்பும் சிலர் இருக்கலாம்,” என்று பேராசிரியர் மல்வே கூறுகிறார்.
– இது, பிபிசிக்காக கலெக்டிவ் நியூஸ்ரூம் வெளியீடு